சிறப்புக் கட்டுரைகள்

ஆசை அதிகரிக்கிறது.. ஆனந்தம் குறைகிறது.. - இது புதிய பாலியல் சர்வே + "||" + Desire increases .. Happiness decreases ..

ஆசை அதிகரிக்கிறது.. ஆனந்தம் குறைகிறது.. - இது புதிய பாலியல் சர்வே

ஆசை அதிகரிக்கிறது.. ஆனந்தம் குறைகிறது.. - இது புதிய பாலியல் சர்வே
வித்தியாசமான இப்படி ஒரு கருத்துக்கணிப்பு சமீபத்தில் எடுக்கப்பட்டது. இதில் ஆண்களும், பெண்களும் ரொம்ப ஆர்வமாக கலந்துகொண்டார்கள்.
வித்தியாசமான இப்படி ஒரு கருத்துக்கணிப்பு சமீபத்தில் எடுக்கப்பட்டது. இதில் ஆண்களும், பெண்களும் ரொம்ப ஆர்வமாக கலந்துகொண்டார்கள். ஏன்என்றால், கேட்கப்பட்ட கேள்வி அப்படிப்பட்டது. ‘ஆண்-பெண் இருவரில் யாருக்கு பாலியல் ஆர்வம் அதிகம்?’ என்பது கேள்வி!

ஆஸ்திரேலியாவில் ஏராளமானவர்களிடம் இந்த கருத்துக்கணிப்பை நடத்திவிட்டு முடிவை அறிவித்திருக்கிறார்கள். இதில் கிடைத்த தகவல்கள் சுவாரசியம் நிறைந்தவை.

 முப்பது வயதுகளில் இருக்கும் பெண்களில் 82 சதவீதம் பேர் ‘தங்களுக்கு தற்போது ஆர்வம் அதிகம் இருக்கிறது. அதை ரசித்து அனுபவிக்க விரும்புகிறோம்’ என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அதே வயதுள்ள ஆண்கள், ‘நாங்களும் அப்படித்தான்’ என்று, தாங்களும் அதில் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டியிருந்தாலும், அப்படி ஆர்வமிக்கவர்களாக சொல்லியிருப்பவர்கள் 69 சதவீதம்தான். அதாவது இந்த வயதில் ஆண்களின் ஆர்வம், பெண்களைவிட 13 சதவீதம் குறைவு என்பது கவனிக்கத்தகுந்தது.

 இத்தகைய ஆர்வமிக்க 33 வயது பெண்ணிடம், ‘உங்கள் பாலியல் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் விஷயங்களாக எதை கருதுகிறீர்கள்?’ என்று கேட்டபோது, திருமணமான பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் சிலவற்றை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 ‘நான் பாலியல் செயல்பாட்டில் அதிக நாட்டம்கொண்டவள்தான். ஆனால் பயன்பாட்டில் என்னால் அதற்கான நேரத்தை சரியாக ஒதுக்கமுடியவில்லை. நான் வேலைபார்க்கும் பெண். வேலை நேரத்தையும், அதற்கான பயண நேரத்தையும் சேர்த்தால் தினமும் 12 மணி நேரம் நான் அலுவலகத்திற்காக உழைக்கிறேன். மனதும், உடலும் சோர்ந்து போகிறது. அதனால் மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது. கணவரும் கூட என்னைப் போலவே நீண்ட நேரம் பணி செய்கிறார். அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் எங்கள் பாலியல் ஆசையை பலிவாங்கிவிடுகிறது. முப்பது வயதுக்கு மேல் பாலியல் ஆசையும், ஆர்வமும் அதிகமாக இருக்கிறது. ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைந்துபோகின்றன’ என்ற கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

 32 வயதான இளைஞர் ஒருவர் இதுபற்றி தெரிவித்த கருத்து ஏக்கமானது. ‘எனக்கும், என் மனைவிக்கும் சமவயதுதான். ஆனால் நாங்கள் இருவரும் கடைசியாக எப்போது உறவு வைத்துக்கொண்டோம் என்பதே என் நினைவில் இல்லை. அந்த அளவிற்கு நாங்கள் உறவு கொண்டு வெகுகாலம் ஆகிவிட்டது. இந்த எதிர்மறை நிலையை போக்கவேண்டும் என்று நானும், என் மனைவியும் பேசி முடிவுசெய்தோம். அதன் பின்பு என் மனைவி, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலே ‘நாங்கள் கட்டாயம் உறவு கொள்ளவேண்டும்’ என்று சில நாட்களை காலண்டரில் குறிப்பிட்டு வைக்கத் தொடங்கினாள். அது ஒரு நல்ல ஏற்பாடு போன்றுதான் தோன்றியது. ஆனால் அந்த நாட்களிலும் நாங்கள் தொடர்புகொள்வதில்லை. அதுவே எனக்குள் குற்றஉணர்ச்சியை ஏற்படு்த்திவிட்டது’ என்று கூறியிருக்கிறார்.

 “இது ஆஸ்திரேலிய மக்களின் பாலியல் வாழ்க்கை நிலை என்று புறம்தள்ளிவிட முடியாது. இந்தியாவிலும் இந்த நிலைதான் நீடிக்கிறது” என்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் நதீம். அவர் “30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களிடம் பாலியல் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகிறது. மாறாக ஆண்களின் ஆசைகள் குறைந்துகொண்டே வருகிறது.

தம்பதிகளின் பாலியல் செயல்பாட்டிற்கு இப்போது தடையாக இருப்பது, ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான். இந்த 30-40 வயதுப் பருவம் வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருப்பதால் பெரும்பாலான தம்பதியினர் கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள். பெற்ற குழந்தை போதுமென்றும், உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்த கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியல் ஆர்வம் குறைந்து விடுகிறது.

 40 வயதுகளில் பெண்கள் வித்தியாசமான முறையில் பாலியல் உறவு நிலைகளை மாற்றி, புதுமையாக அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால் அப்போது குடும்ப சூழல் அவர்களுக்கு தடையாகி விடுகிறது. அப்போது அவர்களின் குழந்தைகளும் பருவம் அடையும் நிலைக்கு வளர்ந்திருப்பார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள். இதில் குறிப்பிட்ட சதவீத பெண்கள் தங்கள் விருப்பங்களை கணவர் கண்டுகொள்வதில்லை என்றும் குறைபடுகிறார்கள். கணவன்- மனைவி இடையே மனம்விட்டு பேசாமல் இருப்பதுதான் இந்த குறைபாட்டிற்கு காரணமாகும்.

வயதும்.. ஆசையும்..

செக்ஸாலஜிஸ்டுகள் பெண்களின் வயதையும்.. பாலின ஆசையையும் வகைப்படுத்தி கூறியிருக்கிறார்கள். அதன் விவரம்:

30 வயதில்: இந்த பருவத்தில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் தேவைப்படுகிறது. அதிக ஆர்வம் காட்டுவார்கள். தனிமையில் இருந்தால் இந்த வயதில் திருமண ஆசை உச்சத்துக்குச் செல்லும். இணக்கமான நபரை தேட வைக்கும். திருமணமாகி குழந்தைகள் இருந்தால் குழந்தைகளைக் கவனிப்பது, பராமரிப்பது, குடும்ப நிர்வாகம் போன்ற அன்றாட பிரச்சினைகள் அவர்களது பாலியல் ஆர்வத்திற்கு தடைபோட முயற்சிக்கும்.

முப்பது வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரித்தல், புகை, போதை, மது போன்ற பழக்கங்களின் பின்விளைவுகளாக வியாதிகள் தொற்றுவது போன்ற தொல்லைகளும் தொடங்கிவிடுகிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது. அதற்கு அவர்கள் அதற்குரிய மருத்துவர்களை நாடுவது நல்லது.

40 வயதில்: இந்த பருவத்தில் பெண்களின் பெண்மைக் ஹார்மோன்களின் சுரப்பது குறையத் தொடங்குகிறது. அதேநேரத்தில் பாலியல் உணர்வுகள் அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை மங்கச்செய்துவிடுகிறது.

இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் ‘செட்’டில் ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால், பாலியல் உணர்வுகளில் ஆர்வம் குறைந்தவர்களாகிவிடுகிறார்கள்.

50 வயதில்: இந்த காலகட்டத்தில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் பாலியல் ஆர்வம் கவனிப்பற்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. ஆண்களில் பெரும்பாலானவர் களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் பாலியல் ஆர்வம் குறைகிறது.

பாலியல் செயல்பாடு தம்பதிகளுக்குள் நேசத்தையும், பாசத்தையும் அதிகரிக்கச்செய்யும். அதனால் அதற்கென்று நேரத்தை ஒதுக்குங்கள். பாலியல் திருப்தியை பெறுவது இருவரின் கடமை என்பதை உணருங்கள்.