பதக்கங்களை பெற்றுத்தரும் பாரம்பரிய விளையாட்டுகள்


பதக்கங்களை பெற்றுத்தரும் பாரம்பரிய விளையாட்டுகள்
x
தினத்தந்தி 22 Sep 2019 9:17 AM GMT (Updated: 22 Sep 2019 9:17 AM GMT)

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் சிலம்பம், களரி, வாள் வீச்சு, சுருள்வாள்வீச்சு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் சிலம்பம், களரி, வாள் வீச்சு, சுருள்வாள்வீச்சு போன்றவை குறிப்பிடத்தக்கவை. தற்காப்பு கலையான இவைகளை முன்னோர்கள் முறைப்படி கற்றறிந்து வீர விளையாட்டுகளாக விளையாடி மகிழ்ந்தார்கள். அதன் மூலம் உடல் வலுவையும், மன வலுவையும் மேம்படுத்திக்கொண்டார்கள்.

சிலம்பம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு என்ற ஆயுதம். இதுவே பின்னர் சிலம்ப கலையாக வளர்ச்சி பெற்றது. அதன் பின்னர் தான் ஈட்டி, கத்தி, வேல், வாள் போன்ற ஆயுதங்களை மக்கள் பயன்படுத்த தொடங்கினர். கி.பி. 15-ம் நூற்றாண்டை சேர்ந்த பதார்த்த குணசிந்தாமணி என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் என கூறப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், அவரது தம்பியான ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், சின்ன மருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கியதாக சொல்கிறது சரித்திர தகவல். சிலம்பம் இந்தியாவில் தமிழகத்திலும், கேரளாவிலும் விரும்பி பயிலப்படுகிறது. அதேபோல் இலங்கை, மலேசியா, பிரான்ஸ், கனடா போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் சிலம்பம் உள்பட தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகள் அதிகளவில் பயிற்றுவிக்கப்படுகிறது.

தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. இதனால் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவ, மணவிகளுக்கு சிலம்பம் உள்பட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அவற்றை ஆர்வமாக கற்றுக்கொள்ளும் மாணவ, மாணவிகள் சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளிலும் கலந்து கொண்டு வென்று பரிசுகளை பெற்று பெருமை சேர்த்து வருகிறார்கள்.

சமீபத்தில் வியட்நாமில் நடந்த உலக தற்காப்பு கலை விழாவில் சிவகாசி மாணவர்கள் 4 பேர் பங்கேற்று பதக்கங்களை குவித்து வந்திருக்கிறார்கள். இந்தியா, ரஷியா, அல்ஜீரியா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், மியான்மர், சீனா, கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 21 நாடுகள் கலந்து கொண்ட அந்த போட்டியில் பாரம்பரிய விளையாட்டுகளை பம்பரமாக சுழன்று விளையாடி தமிழகத்திற்கு பெருமை சேர்ந்திருக்கிறார்கள். முனைகம்பு வீச்சு, நடுகம்புவீச்சு, இரட்டை கம்பு வீச்சு, சுருள்வாள் வீச்சு, இரட்டை சுருள்வாள்வீச்சு, வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு, மான்கொம்பு தாக்குதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்பட 5 பரிசுகளை பெற்று வந்துள்ளனர். இதில் வாள்வீச்சு போட்டியில் முருகலட்சுமி தங்கம் வென்று அசத்தி இருக்கிறாள். இவள் திருத்தங்கல் குளோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறாள். 3 ஆண்டுகளாக சிலம்பம், வாள்வீச்சு பயிற்சிகளை பெற்று வருகிறாள்.

‘‘நான் தினமும் 4 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறேன். வியட்நாமில் நடந்த போட்டியில் என்னுடன் 80 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் வாள்வீச்சில் தனித்திறமைகளை வெளிக்காட்டி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு தனது தந்தை ஆதிநாராயணன், தாய் சண்முகஇந்துமதி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த ஊக்கமே காரணம். உலக அளவில் இன்னும் பல சாதனைகளை செய்து பதக்கங்களை அள்ளி வர வேண்டும் என்பதே எனது லட்சியம்’’ என்கிறார். முருகலட்சுமியின் தம்பி ஹரிஹரசுதன் களரி பயின்று வருகிறான்.

திருத்தங்கல் சுந்தரவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் லத்திகாஸ்ரீவும் தங்கம் வென்றிருக்கிறாள். இவள் கைமுறை ஜோடி பிரிவில் தங்க பதக்கத்தை தன் வசப்படுத்தி இருக்கிறாள். லத்திகாஸ்ரீயும் 3 ஆண்டுகளாக வாள்வீச்சு, கைமுறை ஜோடி விளையாட்டுகளை பயின்று வருகிறாள். இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி பரிசுகளை வென்றிருக்கிறாள். அது கொடுத்த உத்வேகத்தில் வியட்நாம் போட்டியில் கைமுறை ஜோடி பிரிவில் தங்க பதக்கத்தையும், வாள் வீச்சு போட்டி யில் வெண்கல பதக்கத்தையும் அறுவடை செய்திருக்கிறாள். ஏற்கனவே இலங்கையில் நடைபெற்ற கம்புசுற்றுதல் போட்டி யில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ள லத்திகாஸ்ரீ அதே வேகத்தில் வியட்நாம் போட்டியிலும் சாதித்திருக்கிறாள். பெற்றோர் பாலகிருஷ்ணன் - மாரியம்மாள், சகோதரி மதுப்ரியா மற்றும் பள்ளி நிர்வாகத்தினரும் லத்திகாஸ்ரீயின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

சுருள் வாள் வீச்சு போட்டியில் துளசிராம் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறான். இவன் சிவகாசி ஒய்.ஆர்.டி.வி.பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன். முதலில் சிலம்பத்தை கற்றிருக்கிறான். பயிற்சியின்போது சுருள்வாள் வீச்சிலும் துளசிராம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறான். அதை பார்த்த பயிற்சியாளர் முத்து கிருஷ்ணன் சுருள்வாள் பயிற்சியை 3 ஆண்டு களாக கற்று கொடுத்து வருகிறார். ஒற்றை சுருள்வாள் வீச்சு, இரட்டை சுருள்வாள் வீச்சு இரண்டிலும் துளசிராம் ஜொலிக்கிறான். அதில் தன்னை மேலும் மெருகேற்றிக்கொள்ள தினமும் 4 மணி நேரம் பயிற்சி மேற்கொள்கிறான்.

சிலம்பம் போலவே இரட்டை கம்பு சுற்று விளையாட்டும் சவாலானது. இதில் வெண்கலப் பதக்கம் வென்று வந்திருக்கிறார், வென்னிமலைராஜா. 18 வயதாகும் இவர் 10-ம் வகுப்பு வரை படித்தவர். குடும்ப தொழிலான அச்சகத்தை கவனித்து வருகிறார். பாரம்பரிய விளையாட்டு மீது கொண்ட ஆர்வத்தால் 8 ஆண்டுகளாக முனைகம்பு வீச்சு, நடுகம்புவீச்சு, சுருள்வாள் வீச்சு, இரட்டை சுருள் வாள் வீச்சு, வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு ஆகிய விளையாட்டுகளில் ஜொலிக்கிறார். பயிற்சிக்காக தினமும் 4 மணி நேரம் செலவிடுகிறார். தந்தை அப்பாசாமி, தாய் முத்துலட்சுமி கொடுக்கும் ஊக்கத்தால் இந்த துறையில் சாதிப்பதாக சொல்கிறார்.

இந்த சாதனை மாணவர்களை உருவாக்கிய பயிற்சியாளர் முத்துகிருஷ்ணன் 10-ம் வகுப்பு வரை படித்தவர். 25 வயதாகும் இளம் பயிற்சியாளரான இவர் 7 ஆண்டுகளாக பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். சிலம்பம், வாள்வீச்சு, களரி போன்ற விளையாட்டுகளில் முத்துகிருஷ்ணன் முத்திரை பதித்திருக்கிறார். பள்ளியில் பயின்ற காலத்தில் படிப்பை விட விளையாட்டுக்கு அதிக நேரத்தை செலவு செய்துள்ளார்.

‘‘எனக்கு சிறுவயதிலேயே பாரம்பரிய விளையாட்டுகள் பிடித்தமான பொழுதுபோக்காக மாறிவிட்டது. கிருஷ்ணமூர்த்தி ஆசான், மோகன், பந்தல் கருப்பு, களரி செல்வராஜ் ஆகியோரிடம் பல நுணுக்கங்களை கற்று தேர்ந்தேன். விளையாட்டுடனான தொடர்பை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். இதுவரை என்னிடம் 1500-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மலேசியா, இலங்கை, வியட்நாம் ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று பதக்கம் வென்று வந்திருப்பது பெருமையாக இருக்கிறது.

அழிந்து வரும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் தற்போது இந்தியாவில் மட்டும் அல்லாமல் பல நாடுகளில் போட்டிகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த விளையாட்டுகளை சொந்தம் கொண்டாட வேண்டிய நாமும், நம்முடைய குழந்தைகளும் வீடியோ கேமில் மூழ்கி கிடக்கிறோம். இந்த நிலையை மாற்ற முயற்சித்து வருகிறோம். நாம் அனைவரும் நமது குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுத்து அந்த விளையாட்டுகளுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்’’ என்கிறார்.

முத்துகிருஷ்ணன் ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, சுருள்வாள் வீச்சு, வாள் வீச்சு, கம்பு ஜோடி முறை, செடிக்குச்சி, கைப்போர்முறை, கைக்கத்தி, வர்ம அடிமுறை ஆகிய விளையாட்டுக்களை கற்று தருகிறார். களரி விளையாட்டில் கருப்புபட்டை பெற்றுள்ள இவர் நடுவருக்கான தகுதி படிப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். உலக சிலம்பம் சம்மேளனத்தில் பட்டய படிப்பு முடித்து சான்றிதழும் பெற்றுள்ளார்.

Next Story