இருட்டில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய கருவி


இருட்டில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய கருவி
x
தினத்தந்தி 23 Sep 2019 10:07 AM GMT (Updated: 23 Sep 2019 10:07 AM GMT)

மனித வாழ்க்கையின் மிக அத்தியாவசிய தேவைகளில் குறிப்பிடத்தக்கது மின்சாரம். தண்ணீர், நிலக்கரி, அணுப்பிளவு உள்பட சில தொழில்நுட்பம்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு தான் தொழில்நுட்பம் மிகவேகமாக வளர்ந்தது. பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்தன.

அதேநேரத்தில், சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய தொழில்நுட்பங்கள், கருவிகள், புதைமடிம எரிவாயுக்கள் உள்ளிட்ட பலவற்றை கடந்த சில நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக உருவாக்கினோம்.

இதுபோன்ற காரணத்தால், பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான உயிரினங்களை பூமி இன்று இழந்துவிட்டது. மிகவும் முக்கியமாக, இன்னும் சில நூறு ஆண்டுகளிலேயே மனிதனும் வாழத் தகுதியற்ற இடமாக மாறும் வகையில் பூமி மிக வேகமாக தன் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதனால், இனிவரும் நம் சந்ததிகள் வாழ தகுந்த இடமாக பூமியை மாற்றவேண்டியது அவசியமானது.

இதையடுத்து, சூரிய ஒளி (சோலார்), காற்று உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்நுட்பங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனாலும், காற்று இல்லாத சமயத்தில் காற்றில் இருந்தும், சூரிய ஒளி இல்லாத சமயத்தில் சோலார் கருவிகள் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது.

இம்மாதிரியான நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து மின்சாரம் உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் கடந்த பற்பல ஆண்டுகளாக முயன்று வருகின்றனர்.

அத்தகைய அமெரிக்க ஆய்வு முயற்சிகளில் ஒன்று சமீபத்தில் வெற்றிகண்டுள்ளது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள் வேய் லி, ஷான்ஹுயி பான் ஆகியோருடன் இணைந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள மெட்டீரியல் சயன்டிஸ்டான ஆஸ்வத் ராமன் மற்றும் குழுவினர் இதுகுறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக்குழு, ‘இரவின் குளிர்ந்த இருட்டில் இருந்து மறுசுழற்சி செய்யக்கூடிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்’ என்று உலகில் முதல் முறையாக நிரூபித்துள்ளனர்.

சோலார் தொழில்நுட்பம் சார்ந்தது என்று கூறப்படும் இந்த தொழில்நுட்பம் மூலம் தற்போது குறைந்த அளவு மின்சாரமே உற்பத்தி செய்ய முடியும். இருந்தாலும் கூட சூரிய ஒளியே இல்லாத இருட்டில் மின்சாரம் தயாரிக்கும் இந்த புதிய வாய்ப்பு தொலைதூர கிராமப்புறங்களின் அத்தியாவசிய மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

‘வெப்ப-மின்சார விளைவு’ என்று அழைக்கப்படும் ஒரு இயற்பியல் நிகழ்வின் மூலம் ‘தெர்மோகப்புள்’ (thermocouple) என்று அழைக்கப்படும் ஒரு பொருளின் உதவியுடன் வெப்பத்தில் ஏற்படும் மாற்றத்தை மின்சாரமாக மாற்ற பொறியாளர்களால் முடியும் என்று இந்த கண்டுபிடிப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் உருவாக்கப்பட்ட வெப்ப-மின்சார ஜெனரேட்டரில் (thermo electric generator), வானத்தை நோக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு அலுமினிய வட்டு, பகலில் உள்வாங்கிய சூரிய ஒளியை இரவில் வெப்பமாக வெளியேற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஒரு சிறிய எல்.ஈ.டி விளக்கு இணைக்கப்பட்டது. ஸ்டான்போர்டு நகரில் உள்ள ஒரு மொட்டை மாடியில் பகல்நேரம் முழுக்க வைக்கப்பட்ட இந்த ஜெனரேட்டர், இரவில் உறைநிலை வெப்பம் வரும் வேளைவரை சுமார் 6 மணிநேரம் குளிரவிடப்பட்டது.

பகலில் உள்வாங்கப்பட்ட வெப்பம் இரவில் மீண்டும் சுற்றுச்சூழலுக்குள் வெளியேறிய போது, ஜெனரேட்டருடன் இணைக்கப்பட்ட எல்.ஈ.டி விளக்கு உயிர்பெற்றது என்கிறார் ஆஸ்வத். அதிகபட்சமாக, சுமார் 0.8 மில்லிவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்த இந்த ஜெனரேட்டர் மூலமாக ஒரு சதுர மீட்டரில் மொத்தம் 25 மில்லிவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடிப்படையில், ஒரு காது கேட்க உதவும் கருவியை இயக்க உதவும் அளவு மின்சாரம் மட்டுமே உருவாக்க முடியும். இருப்பினும் பல மேம்படுத்தல்களுக்குப் பின்னர் ஒரு சதுர மீட்டருக்கு சுமார் 500 மில்லிவாட்ஸ் மின்சாரத்தை இந்த கருவி மூலமாக உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் விஞ்ஞானி ஆஸ்வத்.

எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு, மிகவும் குறைவான செலவில், பொதுமக்கள் தாங்களே ஒரு வெப்ப-மின்சார ஜெனரேட்டரை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதால் இந்த புதிய தொழில்நுட்பமானது நிச்சயமாக சமுதாயத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாகக் கூறுகிறார் விஞ்ஞானி ஆஸ்வத் ராமன்.

Next Story