விமானத்தில் பறக்கும் ஈரோடு இட்லி


காந்திமதி; ஈஸ்வரி; சுடச்சுட இட்லி தயார் ஆகிறது..
x
காந்திமதி; ஈஸ்வரி; சுடச்சுட இட்லி தயார் ஆகிறது..
தினத்தந்தி 29 Sep 2019 9:37 AM GMT (Updated: 29 Sep 2019 9:37 AM GMT)

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறுவிதமான சந்தைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது ஈரோட்டில் இயங்கும் இட்லி சந்தை. அங்கிருந்து புதுடெல்லி, பெங்களூரு, சென்னைக்கு இட்லி ஏற்றுமதியாகவும் செய்கிறது. அதன் ருசிகர பின்னணியை தெரிந்துகொள்வோமா!

சந்தையில் பல ஆண்டுகளாக இட்லி விற்பனை செய்துகொண்டிருக்கும் ஈஸ்வரிக்கு 52 வயது. அவர் தனது இட்லி சந்தை அனுபவங்களை சொல்கிறார்:

‘‘ஈரோடு திருநகர் காலனியில் எனது தாயார் நாற்பது வருடங்களுக்கு முன்பு இட்லி கடை தொடங்கினார். அப்போது காலையில் இட்லி வேகவைத்து ஒரு தூக்குபாத்திரத்தில் போட்டு ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளுக்கு விற்பனை செய்து வந்தோம். நாளடைவில் கடைக்காரர்கள் எங்களிடம் நேரடியாக வந்து மொத்தமாக வாங்கிச்சென்றனர். இப்போதும் அது தொடர்கிறது. குறிப்பாக ஈரோட்டில் வசிக்கும் வடஇந்தியர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு எங்களிடம் இட்லி வாங்கிச்செல்கிறார்கள். இதுபோல் கேரளா, கர்நாடகாவில் இருந்து இங்கு வசிப்பவர்களும் விசேஷங்களுக்கு இட்லி ஆர்டர் செய்து ரெயிலில் கொண்டு செல்கிறார்கள். புதுடெல்லிக்கு மாதத்துக்கு ஒரு முறையாவது எங்கள் இட்லி செல்கிறது. குஜராத், ராஜஸ்தான் என்று பல மாநிலங்களிலும் நாங்கள் தயாரிக்கும் இட்லி விசேஷங்களுக்கு பரிமாறப்படுவது எங்களுக்கு பெருமை.

ஈரோட்டில் தொடக்கத்தில் இருந்தே எங்களிடம் இட்லி வாங்கி வரும் வடமாநிலத்தவர் தங்கள் ஊரில் விசேஷம் என்றால் இங்கிருந்து இட்லி வாங்கிக்கொண்டு போவார்கள். புதுடெல்லியில் ஒரு விருந்தில் இப்படித்தான் அறிமுகமானது எங்கள் இட்லி. விமானத்தில் கொண்டு போய் அங்கு விருந்து பரிமாறுகிறார்கள்’’ என்கிறார் ஈஸ்வரி. இவரது கணவர் தங்கவேலுவும், மகன் பிரவீன்குமாரும் இட்லி வியாபாரத்தில் பங்குபெறுகிறார்கள்.

இந்த சந்தையில் உள்ள பெரும்பாலான கடைகளில் ‘நான்ஸ்டிக்’ தட்டுகளில் இட்லி வேக வைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 100 இட்லிகள் தயாராகிறது. ஈஸ்வரியின் மருமகள் சூரியப்பிரியா, உறவினர் மணிகண்டன், அவரது மனைவி மேனகா ஆகியோரும் வியாபாரத்தை கவனித்து வருகிறார்கள். அவர்கள் வேகவேகமாக இட்லி சுடுவதை பார்க்கவே விறு விறுப்பாக இருக்கிறது.

ஈஸ்வரியின் தாயார் இட்லி கடை தொடங்கிய அதே காலகட்டத்தில் சந்தையில் கடை தொடங்கியவர் தனபாக்கியம். தள்ளாத வயதில் இருக்கும் தனபாக்கியத்தின் மகள் காந்திமதிதான் இப்போது அந்த கடையை கவனித்து வருகிறார்.

‘‘எனக்கு 46 வயதாகிறது. 30 ஆண்டு களாக இட்லி வியாபாரம் செய்கிறேன். எனது கணவர் மாதேஸ்வரனும் என்னுடன் வியாபாரத்தை கவனிக்கிறார். நாங்கள் இங்கு கடை தொடங்கியபோது 2 கடைகள்தான் இருந்தன. எங்களிடம் தினமும் சாப்பிடுவதற்காக நிறைய பேர் வருவார்கள். அப்போது சட்னி சாம்பாருடன் ஒரு இட்லி ரூ.1-க்கு விற்பனை செய்தோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு விலையில் 25 காசு உயர்த்தினோம். இப்போது ஒரு இட்லியின் விலை 3 ரூபாய் 50 காசு. சட்னி சாம்பாருடன் ஒரு இட்லியின் விலை 6 ரூபாய்.

‘நான்ஸ்டிக்’ கலாசாரம் இட்லி தொழிலிலும் வந்து விட்டது. ஆனால் நான் இன்னும் பழைய முறையில் அலுமினிய இட்லி குண்டாவில், தட்டில் துணி விரித்து தான் இட்லி வேக வைக்கிறேன். ஒரே நேரத்தில் 80 இட்லிகள் வரை வேகவைக்க முடியும்’’ என்று கூறிய காந்திமதி, அடுப்பில் வெந்துகொண்டிருந்த இட்லி குண்டா மூடியை திறந்தார். ஆவி பறக்க சூடான இட்லியின் வாசம் காற்றில் கரைந்தது.

அவரது கடைக்கு அவ்வப்போது வாடிக்கையாளர்கள் வந்துபோகிறார்கள். பலரும் 25 இட்லி, 50 இட்லி என்று பார்சல் வாங்குகிறார்கள். இட்லிகளை வாழை இலையில் கட்டிக்கொடுத்து சாம்பார் சட்னியை அதற்காகவே வாடிக்கையாளர்கள் கொண்டு வந்திருக்கும் பாத்திரங்களில் கொடுத்து அனுப்புகிறார்.

‘‘காலையில் எப்போதும் பரபரப்புதான். அதிகாலை 5 மணிக்கே அடுப்பு பற்ற வைத்துவிடுகிறோம். பகல் 11 மணி வரை மக்கள் வந்து தங்களுக்கு தேவையான இட்லிகளை வாங்கிச்செல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் வீட்டில் குழம்பு வைத்துவிட்டு இட்லியை மட்டும் வாங்கிச்செல்வதுண்டு. சுடச்சுட இட்லியை வேக வைத்துக்கொடுப்போம். நாங்கள் இப்போதும் இட்லி வேக வைக்க விறகு அடுப்புதான் பயன்படுத்து கிறோம்’’ என்றார் காந்திமதி.

அவர் மட்டுமல்ல, அந்த பகுதியில் உள்ள 10 கடைகளிலும் விறகு அடுப்புதான் எரிகிறது. சராசரியாக ஒரு கடைக்கு 500-ல் இருந்து 1000 இட்லிகள் வரை ஒரு நாளில் விற்பனையாகிறது. 10 கடைகளே இருந்தாலும் இட்லி சந்தை என்ற பெயரை இந்த இடம் பெற்று இருப்பது சிறப்பு.

40 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காகவும், பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கவும் 2 மூதாட்டிகள் தொடங்கிய இட்லிக்கடைகள் அதே சுவையுடன் இன்று 10 கடைகளாக விரிந்திருப்பதும், சலிப்பின்றி, ஒவ்வொருவரின் குடும்பத்தினரே இந்த பணிகளில் ஈடுபட்டு இருப்பதும் சிறப்புதான். சந்தையாக அந்த பகுதியை குறிப்பிடுவது இட்லிக்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கிறது.

இட்லி கடை நடத்தும் காந்திமதியின் மகள் அனுசுயா வேளாண் பொறியியல் படித்து வேலைக்காக காத்திருக்கிறார். மகன் சுந்தர்ராஜன் பிளஸ்-2 படிப்புக்கு பின்னர் சினிமா வாய்ப்புக்காக காத்திருப்பதுடன், இட்லி வியாபாரத்தை மேம்படுத்தும் திட்டத்துடனும் இருக்கிறார்.

`நிறைய ஓட்டல்களில் இருந்து எங்கள் கடைக்கு இட்லி ஆர்டர் தருவார்கள். அவர்களே குறிப்பிட்ட நேரத்தில் வந்து வாங்கிச்சென்றுவிடுவார்கள். விசேஷ நிகழ்ச்சிகளுக்காக எங்களிடம் ஆர்டர் தந்தால் நாங்களே கொண்டுபோய் கொடுத்து பரிமாறவும் செய்வோம். குழந்தைகளை கவர இதய வடிவ இட்லி, ஸ்டார் இட்லி, கப் இட்லி, தட்டு இட்லி என்று பலவகை இட்லிகளை நாங்கள் தயார்செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார், காந்திமதி.

இந்த சந்தை இட்லி, சென்னையில் பிரபல நடிகர் களின் திருமண விருந்துகளிலும் பரிமாறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நடந்துள்ள பெரும்பாலான கட்சி மாநாடுகளிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சந்தையில், ‘வாங்க...வாங்க’ என்று சீருடையில் வரவேற்கும் பணியாளர்கள் இல்லை. டேபிள் துடைக்க, சார்... மேடம் என்று அழைத்து பரிமாற, தண்ணீர் ஊற்ற, நாற்காலியை இழுத்துப்போட என்று எதற்கும் ஆட்கள் இல்லை. ஒற்றை மேஜை, தரையில் 2 விறகு அடுப்புகளில் வேகும் இட்லி. கைப்பிடிகள் கூட இல்லாத நாற்காலிகள். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் சாப்பிடும் விலையில் இட்லி.

‘‘நாங்கள் குறிப்பிட்ட அளவே இட்லி களை தயார்செய்கிறோம். இந்த விற்பனை எங்கள் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கிறது. எந்த கலப்படமும் இல்லாமல் அரிசி, உளுந்து போடுகிறோம். இதுதான் எங்கள் வெற்றியின் ரகசியம். ஒரு முறை வந்து இட்லி வாங்கி செல்பவர்கள் மீண்டும் வருகிறார்கள். விலை குறைவாக, உணவு தரமாக இருக்கிறது என்பதே எங்கள் தொழில் ரகசியம். குழந்தைகள், நோயாளிகளுக்கு ஒரு நாள் முழுவதும் வைத்திருந்து ஊட்டினாலும் இட்லி நன்றாக இருக்கும்’’ என்று அவர்கள் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தருகிறார்கள்.

தினசரி அந்த வழியில் கடந்து செல்பவர்களுக்கு தெரிவதில்லை இட்லி சந்தையின் கதை. எங்கோ புது டெல்லியிலோ, பெங்களூருவிலோ, சென்னையில் இருந்தோ முன்பதிவு செய்து வாங்கிச்செல்கிறார்கள் ஈரோடு இட்லியை...!

Next Story