இந்திய யானைகளுக்கு நியாயம் கிடைக்குமா?


இந்திய யானைகளுக்கு நியாயம் கிடைக்குமா?
x
தினத்தந்தி 4 Oct 2019 5:23 AM GMT (Updated: 4 Oct 2019 5:23 AM GMT)

யானைகளை பாதுகாக்க அரசாங்கம் செய்த முயற்சிகளினால் இந்தியாவிலும், தமிழகத்திலும் யானைகளின் எண்ணிக்கை பல வருடங்களாக நிலையாக தொடர்கிறது. அவற்றின் நலன்களுக்காக மேலும் சில பணிகளை செய்ய வேண்டியதுள்ளது.

ஆசியாவில் உள்ள யானைகளின் மொத்த எண்ணிக்கையில், இந்தியாவின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 27,312-ஆக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் ஏறக்குறைய 50,000 யானைகள் உள்ளன.

2012-ம் ஆண்டு நடந்த யானைகள் கணக்கெடுப்பிற்கும், 2017-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பிலும், யானைகளின் எண்ணிக்கை ஒரே அளவில் தொடர்கிறது. உலக வனவிலங்கு நிதியகம், ஆசிய யானையை அருகிவரும் இனம் என்று வகைப்படுத்தி உள்ளது.

2,761 யானைகளை கொண்ட தமிழகம் இந்தியாவில் மொத்த யானைகளில் 10 சதவீதத்தை கொண்டு நான்காவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கர்நாடகாவும் (6,049), இரண்டாவது இடத்தில் அசாமும் (5,719), மூன்றாவது இடத்தில் கேரளாவும் (3,054) உள்ளன.

தென் மாநிலங்களை மட்டும் கணக்கில் கொண்டால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் (65), அந்தமான் மற்றும் நிக்கோபார் (19) ஆகியவை 11,948 யானைகளை கொண்டு, இந்தியாவில் உள்ள யானைகளில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சரகம் தெரிவிக்கிறது.

“தமிழகத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 2,700-ஆக, சரியான அளவில், தமிழகத்திற்கு பொருத்தமாக உள்ளது. கணக்கெடுப்பு நடத்தப்படும் பருவ காலத்தை பொருத்தும் இது அமையும். இந்திய காட்டு யானைகள் நீண்ட தூரம் இடம்பெயரும் உயிரினங்கள் என்பதால், மாநில எல்லைகளை அவை மதிப்பதில்லை. ஒரு மாநிலத்தில் அவற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பக்கத்து மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் இருக்க வாய்ப்புள்ளது” என்று தமிழ்நாடு தலைமை வனவிலங்கு காப்பாளர், சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா விளக்குகிறார்.



தமிழ்நாட்டில் யானைகளின் பாலின விகிதம் 1:20 என்ற அளவில், ஆண், பெண் விகிதம் உள்ளது. கேரளாவில் இது 1:100 ஆக உள்ளதற்கு கடந்த காலத்தில் நடந்த பெரிய அளவிலான யானை வேட்டைகள்தான் காரணம் என்கிறார் “யானைகளின் எண்ணிக்கையும் அவற்றின் பாலின விகிதத்திற்கும் உள்ள தொடர்பு” பற்றி தனது முனைவர் படிப்பில் ஆய்வு செய்துள்ளவரும், இந்திய அமெரிக்க வனவிலங்கு சங்கத்தின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் சி.அறிவழகன். இப்போது யானை வேட்டை கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு விட்டது என்கிறார்.

சவால்கள்

யானை நீண்ட காலங்களுக்கு இடம்பெயரும் விலங்கு என்பதால் அவற்றின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது மிகவும் சவாலான விஷயம் ஆகும். எனவே அதைபற்றி சில பிழைகளுடன் கூடிய ஒரு கணிப்பு தான் செய்ய முடியும் என்று 2017-ல் யானைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக மூன்று வகையான செயல் முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. முதலாவதாக நேரடியாக காணும் முறை. இதில் உள்ளூர் கண்காணிப்பாளர்கள் மற்றும் வனக் காவலர்கள் குழுக்களாக வரையறுக்கப்பட்ட காட்டு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, யானை கூட்டங்களின் உள்ள தனிப்பட்ட யானை ஒவ்வொன்றையும் அதன் தழும்புகள், காதுகளின் வடிவம், தந்தங்களின் அளவு மற்றும் வளைந்துள்ள தன்மை, தோலின் சுருக்கங்கள், யானையின் உயரம் மற்றும் அளவு போன்ற உடல் கூறுகளின் அடிப்படையில் அடையாளப்படுத்தி, கணிக்கின்றனர். இரண்டாவதாக குறுக்குவெட்டு முறை. இதில் முன் தீர்மானித்த நேர் கோட்டு வழிகளில், வனக்காவலர் குழுக்கள், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நடந்து சென்று, வழியில் தென்படும் யானைகளின் எண்ணிக்கையை பதிவு செய்வார்கள். பிறகு இந்த தரவுகளை காட்டின் மொத்த பரப்பளவுக்கும் விரிவுபடுத்தி கணிப்பார்கள். மூன்றாவதாக, யானைகளின் சாணங்கள் மக்கும் கால அளவை கணித்து பிறகு இந்த தரவுகளை, அப்பகுதியின் புவிசார் தகவல் அமைப்பின் தரவுகளுடன் இணைத்து, அதன் மூலம் யானைகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

தமிழகத்தில், 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பில் முடிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையை விட யானைகளின் உண்மையான எண்ணிக்கை, அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அந்த வருடம் இங்கு நிலவிய கடும் வறட்சியினால், அண்டை மாநிலங்களுக்கு, தண்ணீர் மற்றும் உணவு தேடி யானை கூட்டங்கள் இடம் பெயர்ந்தன. 2017-ல் கணக்கெடுப்புக்கு, பிறகு தமிழகத்தில் மழை பொழிவு நடந்ததால் அவை மீண்டும் தமிழகத்திற்கு திரும்பின.



சிறைப்பிடிக்கப்பட்ட யானைகள்

2018-ல் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் விளைவாக, சிறைப்பிடிக்கப்பட்டுள்ள யானைகளின் எண்ணிக்கை முதன் முறையாக கணக்கெடுக்கப்பட்டது. இவை துன்புறுத்தப்படுவதாக பல புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. கோவில்கள், மிருக காட்சி சாலைகள், சர்க்கஸ்கள், வனத் துறைகள் மற்றும் தனியார் வசம் உள்ள யானைகளின் மொத்த எண்ணிக்கை 2,454-ஆக உள்ளது. இவற்றில் பல யானைகள் மோசமான உடல் மற்றும் மன நலத்தை கொண்டவையாக உள்ளன.

யானைகளின் உரிமையாளர்கள் அவற்றை துன்புறுத்துவது பற்றியும், மோசமாக பராமரிப்பது, போதுமான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்காதது பற்றி பல புகார்கள் வந்துள்ளதாக 2016-ல் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. யானைகள் துன்புறுத்தியதாகவும், மோசமாக பராமரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கோவில்கள், புதிதாக யானைகளை பெற உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 135 சிறைப்பிடிக்கப்பட்ட யானைகள் உள்ளன. இவற்றின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவை வசிக்கும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து, வனத்துறையின் கள அதிகாரிகள் மூலம் ஆய்வறிக்கைகளை அரசு பெறுகிறது.

2003-ல் முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா யானைகளுக்கான மருத்துவ முகாம்களை தொடங்கினார். 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இவை நடைபெறவில்லை. பிறகு 2011-ம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது. 2018-19-ம் ஆண்டுகளில் நடந்த முகாம்களுக்கு அரசு ரூ.65 லட்சம் செலவிட்டது. இதுவரை தமிழக அரசு 52 முகாம்களை நடத்தி உள்ளது.



“தமிழகத்தில் உள்ள யானைகளுக்கு ஒரு விரிவான மருத்துவ ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதில் சிறைப்பிடிக்கப்பட்ட யானைகள் மற்றும் காட்டு யானைகளும் அடங்கும்” என்று தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சேகர் குமார் நீரஜ் கூறுகிறார்.

ஆனால், இன்றும் இந்திய யானைகளுக்கு நியாயம் கிடைப்பதில்லை. அவைகளின் நலன்களுக்கு இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறதா? என்பது விவாதிக்கப்பட வேண்டிய கேள்வியாக உள்ளது. “இந்திய அரசின் அணுகுமுறை பாரபட்சமாக உள்ளது. புலிகளை காப்பாற்ற 10 மடங்கு அதிக நிதி மற்றும் கவனத்தை செலுத்துகிறது. ஆனால் யானைகளின் வசிப்பிடங்கள் மற்றும் பாதுகாப்பு, புலிகளை விட அதிக சவால் மிகுந்தாக இன்றைய இந்தியாவில் உள்ளது” என்று பேராசிரியர் ராமன் சுகுமார் சுட்டிக்காட்டுகிறார். 

Next Story