ராணிகள் ஜலக்கிரீடைக்கு தனி நீச்சல் குளம்


ராணிகள் ஜலக்கிரீடைக்கு தனி நீச்சல் குளம்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:00 AM GMT (Updated: 5 Oct 2019 7:31 AM GMT)

அங்கோர் வாட் கோவிலில் இருந்து வடக்கே சற்று தூரத்தில், 1,750 அடி நீளமும் 750 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான சுவர், செவ்வக வடிவில் காணப்படுகிறது. 15 அடி உயரமான இந்தச் சுவர் மீது வேறு எங்கும் இல்லாத வகையில் மும்முனை கொண்ட ஈட்டிகள் உள்ளன.

முக்கியமான இடம் என்பதாலேயே இந்த வளாகத்திற்கு இத்தகைய பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்த தொல்பொருள் ஆய்வாளர்கள், 14 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அகழாய்வு மேற்கொண்டனர்.

அங்கே அரிய கலைப்பொருட்கள் மற்றும் மன்னர் குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்ததால் அந்த இடம், ஓர் அரண்மனை இருந்த பகுதி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கம்போடியாவில் முதலாம் நூற்றாண்டு தொடங்கி, 15-ம் நூற்றாண்டு வரை பல மன்னர்கள் ஆட்சி செய்தபோது, ஒவ்வொரு மன்னரும் தங்களுக்கென்று ஒரு தலைநகரை ஏற்படுத்திக் கொண்டனர்.

அங்கே அவர்கள் தங்களது அரண்மனையை அமைத்துக் கொண்டதோடு, ஏராளமான கோவில்களையும் கட்டினார்கள். தலைநகரில் புதிய குடியிருப்புகளும் தோன்றின.

கோவில்கள் தவிர மற்ற அனைத்தும் மரங்களைக் கொண்டு கட்டப்பட்டவை என்பதால், கடந்த 400 ஆண்டுகளில் அவை அனைத்தும் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து மக்கி மண்ணோடு மண் ஆகி மறைந்து விட்டன. இந்தப் பேரழிவில் மன்னர் களின் அரண்மனைகளும் தப்பவில்லை.

செங்கல், சுண்ணாம்புக் கலவை மற்றும் கற்களால் கட்டப்பட்ட கோவில்கள் மட்டுமே இந்த அழிவில் இருந்து தப்பி, இப்போது இடிபாடுகளுடன் காட்சி அளிக்கின்றன.

பழங்கால மன்னர்களின் அரண்மனைகள் எங்கே கட்டப்பட்டு இருந்தன என்ற தடயம் கூட கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான், அங்கோர் வாட் கோவில் அருகே உள்ள இடத்தில் மன்னரின் அரண்மனை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன.

மன்னரின் அரண்மனை இருந்த இடம் அருகே கட்டப்பட்ட கோவில் மட்டும் சில பகுதிகள் இடிந்த நிலையில் இப்போதும் கம்பீரமாக நிற்கிறது.

அந்தக்கோவில், ‘பிமீன் ஆகாஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

‘விமான ஆகாஸ்’ என்று சமஸ்கிருதப் பெயர் சூட்டப்பட்டு இருந்த கோவில் தான் பிற்காலத்தில் ‘பிமீன் ஆகாஸ்’ ஆகிவிட்டது என் கிறார்கள்.

‘விமான ஆகாஸ்’ என்பது என்ன அர்த்தத்தைக் குறிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தக்கோவில் 110 அடி நீளமும், 90 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்டு இருக்கிறது.

விமான ஆகாஸ் கோவிலில் இருந்த பெரிய கோபுரம் தங்கத் தகடால் போர்த்தப்பட்டு அழகாகக் காட்சி அளித்தது.

12-ம் நூற்றாண்டில், அங்கோர் நகருக்குச் சென்று ஓராண்டு காலம் அங்கே தங்கி இருந்த சீன தூதர் சவ் தா குவான் என்பவர், இந்த தங்கக் கோபுரத்தை நேரில் பார்த்து வியந்து, வரலாற்று ஆவணமாக தனது நூலில் பதிவு செய்து இருக்கிறார்.

ஆனால் கோபுரத்தில் இருந்த தங்கம் இப்போது என்ன ஆனது என்பது தெரியவில்லை.

விமான ஆகாஸ் கோவில், 2-ம் ராஜேந்திரவர்மன் (கி.பி.944-969) காலத்தில் கட்டத்தொடங்கி, முதலாம் சூர்யவர்மன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி சொல்கிறது.

14 ஹெக்டேர் பரப்பளவுள்ள வளாகத்தின் முன் பகுதியில் வடக்கே 2, தெற்கே 2, கிழக்கே ஒன்று ஆக மூன்று கோபுரங்கள் நுழைவு வாயிலாக இருக்கின்றன.

இந்த வளாகம் முழுவதும் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

நுழைவு வாயிலில் இருந்து 70 மீட்டர் தூரம் உள்ள பகுதி, பொதுமக்கள் வந்து செல்லும் இடம்.

அங்கு இருந்து விமான ஆகாஸ் கோவில் உள்பட 280 மீட்டர் தூரப்பகுதி அரண்மனை இருந்த இடம்.

அதில் இருந்து 150 மீட்டர் தூரப்பகுதி அரண்மனைப் பெண்கள் பயன்பாட்டுக்கு உரியது.

அதனை அடுத்து உள்ள இரண்டு இடங்கள், அரண்மனைப் பெண் பணியாளர்களும் மற்றவர்களும் நடமாடும் இடமாக இருந்தது என்பது தொல்பொருள் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு.

இந்த வளாகம் முழுவதுமே வழிபாடு அல்லாத மற்ற பணிகளுக்காகக் கட்டப்பட்ட இடமாகவே தோன்றுவதாகவும் ஆய்வாளர்கள் கணித்து இருக்கிறார்கள்.

மன்னரின் அரண்மனைக் கட்டிடம், 4 நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருந்து அதன் பிறகே அழிந்து இருக்க வேண்டும் என்று கூறும் ஆய்வாளர்கள், அரண்மனை இருந்த இடத்தை சரியாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆனால் கட்டிடத்தின் எந்த ஒரு பகுதியும் இப்போது காணப்படவில்லை.

இந்த அரண்மனையின் முக்கிய அம்சம், அங்கே மூன்று நீச்சல் குளங்கள் உள்ளன என்பது தான்.

இப்போதும் அந்தக் குளங் களைப் பார்க்க முடியும். குளங்களின் கரைப்பகுதி, கற்களால் கட்டப்பட்டு இருந்ததால், அந்தக் குளங்கள் கால வெள்ளத்தின் அழிவில் இருந்து தப்பிவிட்டன.

கிழக்குப் பகுதியில் உள்ள நீச்சல் குளம் ‘ஸ்ரா ஸ்ரீ’ என்று அழைக்கப்படுகிறது. அதில் ராணிகளும் அவர்களுக்கு நெருங்கிய பெண்களும் மட்டும் உல்லாசமாக குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மற்றொரு நீச்சல் குளம் ‘ஸ்ரா புருஷ்’ ஆகும். இதில் அரண்மனைக்கு வரும் முக்கிய ஆண் பிரமுகர்கள் நீந்தி மகிழ்ந்தனர்.

மூன்றாவது நீச்சல் குளம் அளவில் பெரியது. அதில், நீச்சல் போட்டிகள், பந்தை வைத்துக் கொண்டு நீச்சல் அடித்தபடி விளையாடுவது போன்ற பல விதமான விளையாட்டுகள் நடைபெற்றன.

இந்தக்குளத்தின் அருகே பெரிய மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேடையில் இருந்தபடி நீச்சல் போட்டிகளை மன்னர் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் மேடையாகவும் அது பயன்பட்டது.

மற்ற கோவில்களில் இருப்பது போல, விமான ஆகாஸ் கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் காணப்படவில்லை.

ஆனால், அங்கே கட்டப்பட்டு உள்ள மூன்று நீச்சல் குளங்களின் கரை முழுவதிலும் உள்ள கற்சுவர்களில் ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.

பல விதமான சம்பவங்களை விளக்கும் காட்சிகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவை அங்கே அழகிய சிற்பங்களாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

நீச்சல் குளத்தில் ஆனந்தமாக நீந்திக்குளிக்கும் போது அவற்றைப் பார்த்து ரசிக்கும் வகையில் இந்த சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன.

வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்ட மூன்று கல்வெட்டுகள் இந்தக் கோவிலில் உள்ளன.

910-ம் ஆண்டு கல்வெட்டில், அந்தக் கோவிலில் ‘திரிலோகநாதர்’ என்ற பெயரில் கிருஷ்ணர் சிலை ஒன்று அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இப்போது அந்தச்சிலை அங்கே இல்லை.

1011-ம் ஆண்டு, முதலாம் சூர்யவர்மன் காலத்திய கல்வெட்டு வித்தியாசமானது.

மன்னருக்கு யார்-யார் எல்லாம் விசுவாசமானவர்கள் என்ற பட்டியலை அந்தக் கல்வெட்டில் காணமுடிகிறது.

எதிரிகளை முறியடித்து கடுமையான போராட்டத்திற்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியவர் என்பதால், முதலாம் சூர்யவர்மன், தனக்கு விசுவாசமாக இருப்பதாக அனைத்து அரசாங்க ஊழியர்களும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதன்படி உறுதிமொழி ஏற்ற அனைவரின் பெயர்களும் அந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

அதே காலத்தில் வைக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு, அந்தக் காலத்தில் சமயசார்பின்மை கடைப்பிடிக்கப்பட்டதை விளக்குகிறது.

அங்கே ஓர் அத்தி மரம் இருந்ததாகவும், புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் அந்த மரத்தைப் போதி மரமாக கருதி வழிபட்டதாகவும், பிராமணர்கள் உள்ளிட்ட இந்துக்கள், அந்த மரத்தின் வேரை ‘பிரம்மா’ என்றும், நடுப்பகுதியை சிவனாகவும், கிளைகளை விஷ்ணுவாகவும் கருதி, ஆக மொத்தத்தில் அந்த மரத்தை திரிமூர்த்தி என்று வழிபட்டதாகவும் அந்தக் கல்வெட்டில் எழுதப்பட்டு இருக்கிறது.

கோவிலின் உச்சியில் உள்ள கதவு நிலைப்படியில் காணப்படும் மற்றொரு கல்வெட்டு, கம்போடிய நாட்டின் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது.

1177-ம் ஆண்டு, சம்பா (வியட்நாம்) தேசத்து மன்னர் ஜெய இந்திரவர்மன் டோன்லே சாப் ஏரி வழியாக பெரும் கப்பல் படையைக் கொண்டு வந்து அங்கோர் தேசத்தைக் கைப்பற்றினார். இந்தப் போரின்போது அங்கோர் மன்னராக இருந்த திரிபுவன ஆதித்தவர்மன் கொலை செய்யப்பட்டார்.

பின்னர் 7-ம் ஜெயவர்மன், சம்பா தேசப் படைகளை அழித்து, அந்த மன்னரிடம் இருந்து நாட்டைக் கைப்பற்றினார். அத்துடன் ஜெய இந்திரவர்மனை கைது செய்து பின்னர் அவரைக் கொலை செய்தார்.

இதன் மூலம் பழிக்குப்பழி வாங்கிய 7-ம் ஜெயவர்மன் வீர தீரச் செயல்களை, கோவிலின் மேல் பகுதியில் உள்ள கல்வெட்டு விரிவாகக் கூறுகிறது.

விமான ஆகாஸ் கோவில் அருகே, ராணுவ அணிவகுப்பையும், கலை நிகழ்ச்சிகளையும் மன்னர் கண்டுகளிக்க 1,100 அடி நீளமும் 8 அடி உயரமும் உள்ள பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

‘எலிபன்ட் டெரஸ்’ அதாவது ‘யானை மேடை’ என்று அழைக்கப்படும் அந்த மேடையின் சிறப்புகள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

9 தலை கொண்ட அதிசய நாகம்

விமான ஆகாஸ் கோவில் பற்றி வினோதமான கதை ஒன்று கூறப்படுவதையும் இந்த நேரத்தில் பார்க்கலாம்.

இந்தக் கதையை சீனத்தூதர் சவ் தா குவான் மிக விரிவாக தனது நூலில் எழுதி இருக்கிறார்.

அந்தக் கதை இது தான்:

அங்கோர் தேசத்தை 9 தலை கொண்ட அதிசய நாகம் ஒன்று காவல் காத்து வருகிறது.

எங்கோ மறைவாக இருக்கும் அந்த நாகம், ஒவ்வொரு நாள் இரவிலும், அந்தக் கோவிலின் மேல் பகுதிக்கு வந்து விடும்.

என்றாவது ஒரு நாள் அந்த நாகம் அவ்வாறு அந்தக் கோவிலுக்கு வரவில்லை என்றால், அன்றோடு நாடு அழிந்து விடும் என்ற சாபம் உள்ளது.

இரவு நேரத்தில் கோவிலுக்கு வரும் அந்த நாகம், அங்கே அழகிய பெண் உருவமாகக் காட்சி அளிக்கும்.

அந்த இரவு நேரத்தில் மன்னர் மட்டும் தனியாக அந்தக் கோவிலுக்கு வர வேண்டும்.

கோவிலின் உச்சியில் காத்து இருக்கும் நாக கன்னியுடன் மன்னர், அந்த இரவில் படுத்து உறங்க வேண்டும்.

இந்த நிகழ்வு நடந்த பிறகே, மன்னர் ராணியுடனோ அல்லது அந்தப்புரத்து பெண்களுடனோ உல்லாசமாக இருக்க வேண்டும்.

ஏதோ ஒரு காரணத்தால் மன்னர் ஓர் இரவில் அங்கே வருவது தடைபட்டுவிட்டால், அது மன்னரின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

மேற்கண்டவாறு ஒரு கதை அந்தப் பகுதியில் பேசப்பட்டு வந்ததாக சீனத் தூதர் சவ் தா குவான் எழுதி இருக்கிறார்.

ஆனால் அவரது குறிப்பு தவிர, கம்போடிய வரலாற்றின் வேறு எந்த இடத்திலும் இந்தக் கதை குறிப்பிடப்படவில்லை.

கம்போடியா நாட்டுக் கவர்னரின் தமிழ் ஆர்வம்

அங்கோர் வாட் உள்பட கம்போடியாவில் உள்ள பழங்காலக் கோவில்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு என்பதைத் தெரிந்து கொள்ள தமிழர்களிடம் இப்போது அதிக ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது.

அதேபோல தங்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவைத் தெரிந்து கொள்வதில் கம்போடியர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.

கம்போடியாவின் மாநில கவர்னரும், கலைப்பண்பாட்டுத் துறை இயக்குனருமான சோப்பீப் என்பவர் கடந்த மாதம் தமிழகம் வந்து, காஞ்சி புரம், மாமல்லபுரம், தஞ்சை ஆகிய இடங்களில் உள்ள கோவில்களைப் பார்த்து, இரு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி அறிந்து வியந்தார்.

சமீபத்தில் சியம் ரீப் நகரில், கம்போடியா நாட்டின் கலாசார மற்றும் நுண்கலைத் துறை அமைச்சகமும், சீனிவாசராவை தலைவராகவும், ஞானசேகரனை செயலாளராகவும் ரமேஷ்வரனை துணைத் தலைவராகவும் கொண்ட அங்கோர் தமிழ்ச் சங்கமும், திருத்தணிகாசலத்தை தலைவராகக் கொண்ட பன்னாட்டு தமிழர் நடுவமும் இணைந்து உலக தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டை நடத்தினார்கள்.

இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, துபாய், குவைத், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கவிஞர்கள் கவி பாடிய நிகழ்ச்சியின் இரண்டு நாட்களும் கவர்னர் சோப்பீப் கலந்து கொண்டதோடு, மொழி புரியாவிட்டாலும் ஒரு நிமிடம் கூட எழுந்து செல்லாமல் மாநாட்டை முழுவதும் பார்த்தார். தமிழ் மொழியின் சிறப்பு பற்றியும், தமிழர் களுக்கும் கம்போடியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் அவர் பேசினார்.

திருக்குறள் கெமர் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார்.

அவர் பெயர் சோப்பீப் என்றாலும் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அவரை ‘சொக்கையா’ என்றே அழைத்தனர். அதை அவர் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.

(ஆச்சரியம் தொடரும்)


Next Story