பாலைவனத்தை சோலைவனமாக்கும் ‘நானோ கிளே’


பாலைவனத்தை சோலைவனமாக்கும் ‘நானோ கிளே’
x
தினத்தந்தி 5 Oct 2019 9:58 AM GMT (Updated: 5 Oct 2019 9:58 AM GMT)

ஒரு பொருளின் மிகச்சிறிய அளவு ‘நானோ’ என்ற அளவீட்டால் குறிப்பிடப்படுகிறது.

ஒரு பொருளின் அளவு குறைந்து ‘நானோ’ மீட்டர் அளவிற்கு சென்றால் அந்த பொருளின் தன்மைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதனால் அதன் பயன்களும் அதிகமாக இருக்கும். உதாரணமாக நம் வீட்டின் சுவற்றின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லியை பார்க்கும்போது, அது எப்படி சுவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழும். புவியீர்ப்பு விசையை எதிர்த்து பல்லி உறுதியாக ஒட்டிக்கொண்டிருப்பதற்கு அதன் கால்கள்தான் காரணம். அதாவது பல்லியின் ஒவ்வொரு காலிலும் லட்சக்கணக்கான இழைகள் உள்ளன. ஒவ்வொரு இழையிலும் எண்ணிலடங்கா ‘ஸ்பேட்சுலே’ எனப்படும் ‘நானோ’ இழைகள் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் ‘நானோ பசைகள்’ அல்லது ‘நானோ களிமண்’. இந்த களிமண் துகள்களை தண்ணீருடன் சேர்த்து புல்வெளிகளில் தெளிக்கும் போது குறைந்த நீர் செலவாவதுடன், புற்கள் வாடிவிடாமலும் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இது பாலைவனங்களில் வாழும் அரிய வண்டுகளின் உடலமைப்பின் தன்மையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அதாவது, அமீரக பாலைவனங்களில் காணப்படும் வண்டுகள் வித்தியாசமான முறையில் நீரை அருந்துகின்றன. மிகவும் வெப்பமான மற்றும் மிகக்குறைவான மழைப்பொழிவை கொண்ட பாலைவனத்தில் அதிகாலை நேரத்தில் கிடைக்கும் பனிப்பொழிவை இந்த வண்டுகள் தங்களது உடலின் மேற்கூட்டில் சேர்த்துவைத்துக் கொள்கிறது. இவ்வண்டு களின் மேற்கூட்டில் ‘நானோ’ அளவிலான தண்ணீரை விலக்கும் தன்மை கொண்ட மெழுகும், அதனை ஈர்க்கும் தன்மை கொண்ட பொருட்களும் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்துள்ளது. இதனால் நீர்துளிகள் இக்கூட்டின் நீரை ஈர்க்கும் தன்மை கொண்ட பொருட்களுடன் ஒட்டிக்கொள்கின்றன. தேவையான போது அவற்றின் முன்னங்கால்களின் மூலம் அதன் மேற்கூட்டின் மீது சேர்த்து வைத்திருக்கும் நீரை எடுத்து பருகுகின்றன. இதே போன்று ‘நானோ’ அமைப்புகளைத்தான் செயற்கை நீர் உறிஞ்சிகளாக விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இந்த களிமண் துகள்கள் தண்ணீருடன் சேர்ந்து தெளிக்கும்போது புற்களின் மீது செயற்கை உறிஞ்சி களாக செயல்பட்டு நீண்ட நேரம் தண்ணீரை தனக்குள் வைத்திருக்கும்.

இந்த நானோ கிளே தொழில்நுட்பம் ‘எக்ஸ்போ 2020’ வளாகத்தில் புற்கள் வளர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கிளே எனப்படுவது திரவமாக்கப்பட்ட நானோ களிமண். இந்த நுண் களிமண் துகள்கள் மற்றும் தண்ணீர் கலந்த கலவையானது கண்ணுக்கு தெரியாது. இது நீர் துளிகளாக மணல் பரப்பின் மீது ஸ்பிரிங்கலர் எனப்படும் பீச்சியடிக்கும் எந்திரம் மூலம் தெளிக்கப்படுகிறது. அவ்வாறு தெளிக்கப்படும் இந்த கலவையானது மணல் பரப்பில் பசை போல படிந்து நிலப்பரப்பிற்கு கீழே மண்ணாக உருமாற்றப்படுகிறது. தொடர்ந்து தெளிக்கப்படும் இந்த நானோ கிளே மூலமாக செடிகள் வளருவதற்கு ஏற்ற வளமான நிலப்பரப்பு உருவாக்கப்படுகிறது. இது தெளிக்கப்படும்போது சாதாரணமாக தண்ணீர் தெளிப்பது போல கண்களுக்கு தெரியும். அவ்வாறு இந்த நானோ கிளே பயன்படுத்தப்படும் நிலப்பரப்பு 7 ஆண்டுகளில் வளமான மண் பகுதியாக மாற்றப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை கிறிஸ்டன் மார்டன் ஓலேசன் என்ற நார்வே நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கடந்த 2005-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். குறிப்பாக இது பாலைவன பகுதியை சோலைவனமாக மாற்றுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இதற்காக அவர் காப்புரிமையும் பெற்றுள்ளார். இந்த தொழில்நுட்பத்தை ஐ.நா அங்கீகரித்ததுடன் அனைத்து வறட்சி பகுதிகளை கொண்ட நாடுகளையும் வளமான பகுதிகளாக மாற்ற இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த முறையில் தான் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் தண்ணீர் பாசனம் மேற்கொள்ளப்பட்டு, புல்வெளிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாதாரணமாக செலவிடும் தண்ணீரை விட 50 சதவீதம் குறைவான தண்ணீரே செலவாகும். அதனால் துபாய் பாலைவன பகுதிகளும் சோலைவனங்களாக மாற்றமடையும் காலம் வெகுதொலைவில் இல்லை.

-மர்யம்.சா

Next Story