கீழடி தமிழர் நாகரிகத்தின் தாய்மடி!


கீழடி தமிழர் நாகரிகத்தின் தாய்மடி!
x
தினத்தந்தி 6 Oct 2019 2:07 PM GMT (Updated: 6 Oct 2019 2:07 PM GMT)

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி!” என்ற தற்பெருமையுண்டு!

வைகை கரை கீழடியில் நிகழ்த்தப்பட்ட ஐந்துகட்ட அகழாய்வில் இதுவரை மொத்தம் கண்டறியப்பட்டுள்ள 15,000-க்கும் பழமையான பொருட்கள் சங்க கால தொன்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. விரைவில் மத்திய அரசு ஒரு மிகப்பெரிய அருங்காட்சியகத்தை இங்கே ஏற்படுத்த வேண்டிய அளவுக்கு இந்த அகழாய்வுகள் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

பொதுவாக தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் உலகிலேயே தமிழன்தான் மூத்த தொல்குடி என்ற ஆழமான நம்பிக்கை உண்டு.

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி!” என்ற தற்பெருமையுண்டு!

மகாகவி பாரதியார் தமிழைப் பற்றி குறிப்பிடுகையில், “இவள் என்று பிறந்தனள் என்றுணராத இயல்பினள்” என்று கூறியுள்ளார்.

கூடல்மாநகர், ஆலவாய்நகர் என்றெல்லாம் அழைக்கப்படும் மதுரை, சிவபுராணங்களின் நிகழ்வுகள் அரங்கேறிய இடமாகவும், விஷ்ணுவின் மச்ச அவதாரமான மீன் அவதாரம் நிகழ்ந்த இடமாகவும் நம்பப்படும் அளவுக்கு மிகத் தொன்மையான பாரம்பரியம் கொண்டது. சங்கத் தமிழ் சங்கங்கள் வளர்ந்து சிறந்தோங்கியதும் மதுரையில் தான்! இதுவரை வெறும் நம்பிக்கையாக மட்டுமே கருதப்பட்ட தொன்மை சிறப்பு தற்போது தொல்லியல் ஆய்வில் உலகமே ஒத்துக்கொள்ளத்தக்கதாகிவிட்டது!

பிரபல வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பூர், “கீழடி ஆய்வு, தமிழர்களின் வரலாற்றை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாக்கிவிட்டது” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் தொன்மை கலாசாரங்கள்

கிரேக்க நாகரிகம், மெசபட்டோமிய நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், சுமேரிய நாகரிகம், பாலஸ்தீன நாகரிகம், ரோமானிய நாகரிகம், பெர்சிய நாகரிகம், மாயன் நாகரிகம், ஜெர்மன் நாகரிகம், பெரு நாகரிகம், துருக்கிய நாகரிகம், போனிசிய நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், கங்கை சமவெளி நாகரிகம், நைல் நதி (எகிப்து) நாகரிகம், மஞ்சள் ஆறு (சீன) நாகரிகம்... வரிசையில் இனி தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகமும் இணைகிறது.

வைகை என்பது மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமான வருஷநாடு மலையில் தொடங்கி சின்னமனூர், மதுரை வழியாக கிழக்கு நோக்கி திருபுவனம், ராஜகம்பீரம், மானாமதுரை, பார்தீபனூர், பரமக்குடி, ராமநாதபுரம் மார்க்கமாக சென்று இறுதியில் அழகன்குளத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது.

தமிழகத்தில் இதுவரையிலான தொல்லியல் ஆய்வுகள்

தூத்துக்குடியிலுள்ள ஆதிச்சநல்லூர், ஈரோடு கொடுமணல், பரிக்குளம், திருத்தங்கல், மாங்குடி, மோதூர், கோவலன்பொட்டல், பூம்புகார், ஆனைமலை, பல்லவமேடு, தொண்டி, கொற்கை, வசவசமுத்திரம், திருக்கோவிலூர், பட்டரைபெரும்புதூர் மற்றும் பேரூர் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இதில் ஆதிச்சநல்லூர் ஆய்வே அதிமுக்கியத்துவம் பெற்று விளங்கியது! தற்போது அதற்கும் மேலாக கீழடி அகழாய்வுகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

கீழடியில் இதுவரை...

2014-15-ம் ஆண்டில் கீழடியில் முதல்கட்ட ஆய்வு தொடங்கியது. முதலில் மூன்று இடங்களில் தான் குழிகள் வெட்டப்பட்டன. இரண்டாம் கட்ட ஆய்வு 2015-16-ல் நடந்தது. இரண்டாம் ஆண்டில் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதால் 43 குழிகள் தோண்டப்பட்டன. முதல் இரண்டாண்டில் 2,500 சதுர அடியில் மட்டுமே ஆய்வுகள் நடந்தன. மூன்றாம் ஆண்டில் மேலும் 400 சதுர அடி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மூன்றும் மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு கிளை நடத்திய ஆய்வுகள். மத்திய தொல்லியல் ஆய்வில் 7,800 பழம் பொருட்கள் நமக்கு கிடைத்தன. ஆயினும், இத்துடன் கீழடி ஆய்வை முடித்துக்கொள்ள மத்திய அரசு தீர்மானித்தது.

இதில் முதலில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தொல்லியல் இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு பி.எஸ்.ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் சரியாக ஆய்வில் ஈடுபடவில்லை என்று தொல்லியல் ஆர்வலர்கள் பலருடன் மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் போன்றவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் மத்திய அரசு கீழடி ஆய்வுக்கு தேவைப்படும் நிதியை ஒதுக்கவில்லை. மத்திய அரசுக்கு இதில் ஏனோ ஆர்வம் இல்லை... என்றெல்லாம் பலத்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆய்வை மேலும் தொடர வேண்டும் என்ற குரல்கள் பலமாக பலதரப்பிலும் எழுந்தன.

ஐகோர்ட்டு உத்தரவு

கீழடி ஆய்வுகள் உலக அளவில் தமிழர்களின் தொன்மையை சொல்கின்றன. தமிழர்களின் தொன்மை சிறப்பு இந்தியாவின் சிறப்புகளில் ஒன்றாக கருத வேண்டியது. மாறாக மத்திய அரசில் உள்ள அதிகாரவர்க்கத்தினர் சிலர் ஏனோ மேலும் ஆர்வம் காட்டாமல் ஆய்வை இந்த மட்டோடு முடித்துக்கொள்ளலாம் என பேசி வந்தனர். மூன்று கட்ட ஆய்வோடு மத்திய தொல்லியல் துறை தன் ஆய்வை நிறுத்திவிட்டது. ஆனால், ஆய்வை மேலும் தொடர வேண்டும் என அனைத்து மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இது குறித்து கோர்ட்டில் கனிமொழிமதி என்ற பெண் வக்கீலால் வழக்கு தொடரப்பட்டது. இதனால், “அடுத்தகட்ட ஆய்வுகளை மாநில தொல்லியல் துறையே கையில் எடுத்து செய்யலாமே...” என உத்தரவிட்டது ஐகோர்ட்டு. அதே சமயம் மத்திய அரசின் உதவியும், அனுமதியும் தேவைக்கு ஏற்ப கேட்டு பெறப்பட்டது.

நவீன முறையில் ஆய்வுகள்

ஐந்தாம் கட்ட ஆய்வில் நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக மண்ணுக்குள் மறைந்திருக்கும் பலவற்றை ஊடுருவி கண்டறியும் கருவியான ஜி.டி.பி. ஆளில்லா விமானத்தின் மூலமாக நிலத்தை மதிப்பிடும் கருவி மற்றும் காந்த மதிப்பீட்டு அளவி ஆகியவை பயன்படுத்தப்பட்டதால் நல்ல பயன் கிடைத்தது. ஐந்தாம் கட்ட ஆய்வில் 6 கார்பன் மாதிரிகள் கிடைத்தது. அப்படி கிடைத்தவை உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது. கார்பன் டேட்டிங் எனப்படும் கரிம பகுப்பாய்வுக்காக அமெரிக்காவின் பீட்டா பகுப்பாய்வு சோதனையகத்திற்கு அனுப்பப்பட்டது. இதன் மூலமாக சம்பந்தப்பட்ட பொருள்கள் எந்த நூற்றாண்டை சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டது.

பானை ஓடுகள் இத்தாலியின் பைசா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. விலங்குகளின் எலும்பு துண்டுகள் புனேயில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன. மும்பையில் உள்ள புவி காந்தவியல் நிறுவனத்தின் உதவி பெறப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொலை உணர்வு நிறுவனங்களும் உதவிக்கு வந்தன.

இது ஆய்வு குறித்து மாநில தொல்லியல் துறை இயக்குனர் டாக்டர் ஆர்.சிவானந்தத்திடம் கேட்டபோது, “மத்திய அரசின் முதல் மூன்று கட்ட ஆய்வுக்கு பிறகு மாநில அரசின் தொல்லியல் துறை பொறுப்பு எடுத்து ஒரு கோடி ரூபாய் மாநில நிதியில் ஆய்வு செய்ததில், சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் கிடைத்தன. இது நம்மை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. ஆகவே இந்த ஆய்வை மேலும் ஐந்தாண்டுகள் தொடர்வதாக நமது அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

Next Story