தினம் ஒரு தகவல் : விபத்து நடந்தால் செய்ய வேண்டியவை...


தினம் ஒரு தகவல் : விபத்து நடந்தால் செய்ய வேண்டியவை...
x
தினத்தந்தி 9 Oct 2019 8:41 AM GMT (Updated: 9 Oct 2019 8:41 AM GMT)

சாலை விபத்து, தீ, தவறி விழுதல், வன்முறை போன்ற காரணங்களால் உடலில் காயம் உண்டாகிறது. மற்ற எல்லா காரணங்களை காட்டிலும், சாலை விபத்துகளே உலகம் முழுவதும் உடல் காயத்துக்கான மிக முக்கியமான காரணமாக உள்ளது.

பெரும்பாலான காயங்கள் நிரந்தர அல்லது தற்காலிக ஊனத்துக்கும், அவற்றில் சில மரணத்துக்கும் காரணங்களாகின்றன. இளைஞர்களே அதிகம் சாலை விபத்துக்கு உள்ளாவதால் நாட்டின் மனிதவளம் பாதிக்கப்படுகிறது. இதனால் இதுபோன்ற காயங்களைத் தவிர்க்க நாம் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

மருத்துவமனைக்கு போகும் முன்பு, உடனடியாக அவசர நிலைகளை கையாள போதுமான அறிவு (ஆட்களுக்குப் பயிற்சி), மருத்துவமனைக்கு செல்லும் முன்பு போதுமான பராமரிப்பு கருவிகள் மற்றும் வசதிகள் (மருத்துவ ஊர்தி, மருந்து போன்றவை) இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சாலைப் பாதுகாப்பு விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையோடு செயல்படுவதோடு, போக்குவரத்து தொடர்பான குறியீடுகளை கவனித்து அதை பின்பற்ற வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது எப்போதும் ஹெல்மெட் அணிவது அவசியம். சாலையில் கவனத்தை திசை திருப்பும் கைப்பேசி மற்றும் சத்தமான இசையை தவிர்க்க வேண்டும். நீண்ட, தொடர் பயணத்தில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.

மின் சாதனங்கள், கம்பிகள், கூரிய பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை குழந்தைகள் நெருங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும். எப்போதும் முதல் உதவி பெட்டிகளை வீட்டிலும், வாகனத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும். படிகள், திறந்த மாடி, கூரை ஆகியவற்றில் இருந்து குழந்தைகள் விழுந்து விடாமல் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அடிப்படையான உயிர் காக்கும் நுட்பங்களை அறிந்து வைத்து கொண்டு காயம் பட்டவர்களுக்கு உதவி செய்யலாம். களைப்பாகவோ, தூக்க கிறக்கமாகவோ இருக்கும் போதும், மதுகுடித்திருக்கும் போதும் வாகனம் ஓட்ட வேண்டாம். குறிப்பாக அவசரத்தில் வாகனம் ஓட்டும் போது எந்த ஆபத்தான முயற்சிகளையும் செய்ய வேண்டாம்.

தலை அல்லது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டால் விபத்து நடந்த இடத்தில் இருந்து காயம் பட்டவரை மருத்துவ வல்லுனர் உதவி இன்றி நகர்த்தக்கூடாது. அப்படி காயம் பட்டவரை நகர்த்தினால் கடுமையான முதுகு அல்லது கழுத்து காயங்கள் ஏற்படலாம். காயத்தினால் மயக்கம் அல்லது அரைமயக்கமாக இருப்பவர்களுக்கு திரவம் எதையும் குடிக்க கொடுக்கக் கூடாது. விபத்து ஏற்பட்டவுடன் அவசர கால மருத்துவ சிகிச்சைக்குரிய தொலைபேசி எண்ணில் அழைத்து விரைவாக, போதுமான மருத்துவ உதவி கிடைக்கச் செய்ய வேண்டும்.

காயம் ஏற்பட்டவருக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் விபத்து குறித்த விவரங்களை காவல் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவது நல்லது.

Next Story