வானவில் :புகாட்டி பேபி 2


வானவில் :புகாட்டி பேபி 2
x
தினத்தந்தி 9 Oct 2019 11:03 AM GMT (Updated: 9 Oct 2019 11:03 AM GMT)

ஜெர்மனியைச் சேர்ந்த புகாட்டி நிறுவன கார்கள் சர்வதேச அளவில் பிரபலமானது. இந்நிறுவனம் தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆம் 1909-ம் ஆண்டு ஜெர்மனியின் மொல்ஷீம் நகரில் இண்டஸ்ட்ரியல் டிசைனர் எட்டோர் புகாட்டி என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.

 110-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக புகாட்டியின் சிறிய வடிவிலான காரை இந்நிறுவனம் தயாரித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சிறிய வடிவிலான இந்த காருக்கு புகாட்டி பேபி 2 என பெயர் சூட்டியுள்ளது. 1920-ம் ஆண்டில் இந்நிறுவனம் உருவாக்கிய மாடலைப் போன்றே உருவாக்கப்பட்டது. மொத்தம் 500 கார்களை மட்டுமே சிறப்பு எடிஷனாக தயாரித்தது. ஆனால் 3 வாரங்களில் அனைத்து கார்களும் விற்று தீர்ந்துவிட்டன. 1920-ம் ஆண்டுகளில் இந்த கார் ‘டைப் 35’ என்ற பெயரில் அறிமுகமானது.

அந்த கால கட்டத்தில் இது பிரபல ஸ்போர்ட்ஸ் காராகத் திகழ்ந்தது. இது 2.3 லிட்டர், 8 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இது சூப்பர் சார்ஜ்டு என்ஜினாகும். 140 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 215 கி.மீ. ஆகும். சீறிப் பாயும் இந்த ஸ்போர்ட்ஸ் மாடல் காரின் மொத்த எடையே 750 கி.கி. தான். இந்த காரின் மொத்த நீளம் 2.80 மீட்டர். அகலம் ஒரு மீட்டராகும். இதன் அலாய் சக்கரம் 8 ஸ்போக்ஸ்களைக் கொண்டது.

இதன் மேல் பகுதி கார்பன் பைபரால் ஆனது. நவீன காலத்துக்கேற்ப பேட்டரியில் இயங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதலாவது மோட்டார் 1.4 கிலோவாட் திறன் கொண்டது. மற்றொன்று 2.8 கிலோவாட் பேட்டரியைக் கொண்டது. இது ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் ஏற்றவும் உதவியாக உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கி.மீ. ஆகும். 

Next Story