உலகமே உன்னிப்பாக கவனிக்கும் மோடி - ஜின்பிங் சந்திப்பு


உலகமே உன்னிப்பாக கவனிக்கும் மோடி - ஜின்பிங் சந்திப்பு
x
தினத்தந்தி 11 Oct 2019 5:14 AM GMT (Updated: 11 Oct 2019 5:14 AM GMT)

இந்தியா - சீனா இடையேயான உறவில் கடந்த காலங்களில் சீனாவின் நிலைப்பாட்டில் அடிக்கடி மாறி வந்தாலும், மோடி - ஜின்பிங் சந்திப்பு இரு நாடுகளிடையே உள்ள உறவுகளை மறு சீரமைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ந்தியா - சீனா இடையேயான உறவில் கடந்த காலங்களில் சீனாவின் நிலைப்பாட்டில் அடிக்கடி மாறி வந்தாலும், மோடி - ஜின்பிங் சந்திப்பு இரு நாடுகளிடையே உள்ள உறவுகளை மறு சீரமைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 2018-ல் சீனாவில் உள்ள வூகன்னில் நடந்த முதல் சந்திப்பை அடுத்து, இது இரண்டாவது ‘முறைசாரா உச்சி மாநாடு’ என்று அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டாலும், இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, சீனா அதிபர் ஜின்பிங் சந்திப்பு உலகில் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

வூகன் நகரில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாக தான் இந்த முறையும் பேச்சு வார்த்தைகள் நடக்கும் என்று இரு தரப்பு அதிகாரிகள் கூறினாலும், அதை அப்படியே எடுத்து கொள்ள முடியாது. ஊஹானில் இரு தரப்பு விவகாரங்கள், பிராந்திய மற்றும் உலக பிரச்சினைகள், இந்திய சீன உறவை வலுப்படுத்த திட்டங்கள் பற்றி பேசினர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.நா. பொது சபையின் கூட்டத் தொடரில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியுள்ள நிலையில், இந்த பிராந்தியத்தின் புவி சார் சூழலில், இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் பன்னாட்டு அரங்குகளில் தொடர்ந்து எழுப்பி வருகிறது.

இந்த விஷயத்தில் சீனாவின் நிலைப்பாடு, இந்தியாவிற்கு சாதகமாக இல்லை. வரலாற்று பூர்வமாக பார்க்கையில், பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவளித்து அதன் நட்பு நாடாகவே சீனா உள்ளது. நியூயார்க்கில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.நா. பொது சபையின் கூட்டத் தொடரில், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். “பல காலமாக தொடரும் காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபையின் விதிமுறைகள், பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள் மற்றும் இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்” என்றார்.



ஆனால் சீன அதிபர் ஜின்பிங்கின் இந்திய பயணத்திற்கு முன்பு, பிரச்சினைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை, சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கை காட்டுகிறது.

அதில் காஷ்மீர் பிரச்சினையை, இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பு பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும் என்று கூறும் அந்த அறிக்கையில், ஐ.நா.வில் சீனா எழுப்பிய விஷயங்களை பற்றியும், ஐ.நா.வின் பாதுகாப்பு சபை தீர்மானங்கள் பற்றியும் எதுவும் சொல்லப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது இரு நாடுகளின் நலன்களை சார்ந்தும், உலக பொது விருப்புகளை சார்ந்தும் உள்ளது.

மாமல்லபுரத்திற்கு வரும் முதல் சீன அதிபர் ஜின்பிங் கிடையாது. 1956-ல் இந்தியா வந்த அன்றைய சீன பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரத்திற்கு வந்துள்ளார்.

பண்டைய காலத்தில் சீனாவுடன் மாமல்லபுரத்திற்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தது. பல்லவர் சாம்ராஜியத்தின் இளவரசர் ஒருவர் புத்தரின் சிந்தனைகளையும், கலாசாரத்தையும் பண்டைய சீனாவுக்கு எடுத்து சென்ற வரலாற்றை மாமல்லபுரம் தேர்வு குறிப்பால் உணர்த்துகிறது.

சீன அதிபரின் மனதை வெல்வது மிக கடினமான காரியம் என்பது தெரிந்தது தான். ஜின்பிங், மோடி நெருக்கம், திடீரென்று உருவான, அவசர கதியில் முன்னெடுக்கப்பட்டது அல்ல. நீண்ட காலமாக, கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட விஷயம் இது.

மிக முக்கியமான உலக பிரச்சினைகள் மற்றும் இரு நாட்டு விவகாரங்களை, இயல்பாக விவாதிக்க ஒரு தனித்துவம் மிக்க வழிமுறை உருவாகியுள்ளது. வூகன் உச்சிமாநாட்டில், வூகன் நகரின் கிழக்கு ஏரி கரையில் ஒரு நடை, பாரம்பரியமான சீன தேநீர் சடங்கு, ஒரு படகு சவாரி ஆகியவை இடம் பெற்றன. பிரதமர் மோடிக்கு, ஜின்பிங் மதிய விருந்து அளித்தார். இதை தவிர ஒரு 40 நிமிட நேரடி சந்திப்பு மற்றும் பிரதிநிதிகள் அளவிலான சந்திப்பு ஆகியவை நடைபெற்றன. இதன் மூலம் டோக்லாம் பிரச்சினைக்கு பிறகு இரு தரப்பு நல்லுறவையும், நம்பிக்கையையும் கட்டமைக்க முயற்சிக்கப்பட்டது.

ஜூன் 2019-ல் பிஷ்ஷெக்கில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டின் போது, இருவரும் தனியாக சந்தித்தனர். அப்போது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டிற்கு ஜின்பிங்க்கு அழைப்பு விடுத்தார் மோடி. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இப்போது சாத்தியமில்லை என்பதையும் தெரிவித்தார். பாகிஸ்தானுடன் உரையாட ஒரு இருதரப்பு வழிமுறை உள்ளதாக தெரிவித்தார். அதாவது இதில் மூன்றாம் தரப்பின் தலையீடு எதுவும் தேவையில்லை என்பதையும் உணர்த்தினார்.



Next Story