சிறப்புக் கட்டுரைகள்

கீழடி தொன்மை கி.மு. 2000 வரை நீளும்... + "||" + Antiquities kilati BC Until 2000 ...

கீழடி தொன்மை கி.மு. 2000 வரை நீளும்...

கீழடி தொன்மை கி.மு. 2000 வரை நீளும்...
கீழடி தமிழர் நாகரிகத் தொன்மை கி.மு. 600 என்பதற்கான சான்று ஏற்கப்பட்டுள்ளது.
கீழடி தமிழர் நாகரிகத் தொன்மை கி.மு. 600 என்பதற்கான சான்று ஏற்கப்பட்டுள்ளது. கீழடியிலும், ஆதிச்சநல்லூரிலும், குதிரை எலும்பு கிடைக்கவில்லை. எனவே, குதிரை இந்தியாவுக்கு வந்த கி.மு.1600 காலத்திற்கு முற்பட்டதாகவே கீழடியின் காலத்தைக் கணிக்க வாய்ப்பு உள்ளது.

சிந்து வெளியில் கீறல் எழுத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. ஆனால் கீழடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீறல் பானை ஓடுகள் உள்ளன. சிந்துவெளி காலத்தில் எழுத்தை அழகாக எழுதும் கண்ணெழுத்தாளர்களை அமர்த்தி முத்திரைகளில் எழுதினார்கள். சிந்து வெளி நாகரிகத்திற்குப் பிறகு முத்திரைகள் எழுத வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதன் விளைவாக பொதுமக்களின் கையெழுத்து வேறுபாடுகள் கீறல் எழுத்துகளாயின. தமிழ் நாட்டிலும் கீறல் எழுத்துகள் என்னும் பெயரில் எழுதப்பட்டவை சிந்துவெளி எழுத்துகளே என்பதில் ஐயமில்லை. இதனைத் தனி மனிதனின் கையெழுத்து வேறுபாடுகள் என்பர். எனவே, கீழடி கீறல் எழுத்துகளை சிந்துவெளி எழுத்துகளைப் படித்தவர்களால் படித்தறிய முடியும். தமிழி எழுத்துகள் பொறித்த ஓடுகள் 56 மட்டும் கிடைத்துள்ளன. எனவே கீழடி நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் முடிந்து தமிழி எழுத்து புதிதாகத் தோன்றிய காலம் வரை நீடித்தது.

தமிழி எழுத்தை மூன்றாம் தமிழ்க் கழகப் பெரும்புலவர் ஐந்திரனார் கி.மு. 1850 அளவில் வடிவமைத்தார் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழி எழுத்தும், சிந்துவெளி எழுத்தும் கலந்து எழுதிய குஜராத்து லோத்தலில் கிடைத்த சிந்துவெளி முத்திரை ஒன்றில் நாயன் தொல்லன் என்னும் பெயர் எழுதப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சிந்துவெளி முத்திரை கி.மு.1800 காலத்தைச் சார்ந்தது எனலாம்.

தொல்காப்பியத்திற்கு மூலநூல் ஐந்திரனார் இயற்றிய ஐந்திரம். பாலி, பிராகிருதம், திபெத்தியம் ஆகிய இலக்கண நூல் ஆசிரியர்கள் தாம் ஐந்திர இலக்கணத்தைப் பின்பற்றியதாகச் கூறியுள்ளனர். எனவே, ஐந்திரம் அக்கால இந்திய மொழிகளின் பொது இலக்கண நூலாக இருந்தது என்பதும், இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரே மொழி தமிழ் என்பதும் புலனாகிறது. இந்நிலையில் தமிழி எழுத்து அறிமுகப்படுத்தப்பட்ட கி.மு.1800 வரை கீழடி நாகரிகம் செழித்திருந்தது எனத் தெரிகிறது. சிந்துவெளி எழுத்தும், தமிழி எழுத்தும் கலந்து கீறல் வடிவில் எழுதப்பட்ட பானை ஓடுகள் கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் மிகுதியாகச் கிடைத்துள்ளன. காரவேலன் கல்வெட்டில் மூவேந்தர் உடன்படிக்கை 1300 ஆண்டுகள் நீடித்தது என்றும், அது கி.மு.217 அளவில் முடிந்துவிட்டது என்றும், கூறப்பட்டிருப்பதால் வடநாட்டு ஆரியர்களை தமிழ் வேந்தர் கி.மு.1500 முதல் எதிர்த்து வந்தார்கள் எனத் தெரிகிறது. இதுவும் சிந்துவெளி காலத்திலிருந்து தமிழர்களின் நாகரிகத் தொடர்ச்சி அற்று போகாமல் தொடர்ந்து நீடித்தது எனக் காட்டுகிறது.

கீழடி பானை ஓட்டில் குவிரன் ஆதன் என்னும் பெயர் தமிழி எழுத்தில் காணப்படுகிறது. குவிரன் என்னும் சொல்; தோள் வலிமை மிக்க மாவீரன் அதாவது அரசன் என்று பொருள் தருகிறது. பாலி மொழியில் குவேரா என்னும் சொல்லுக்கு அரசன் என்று பொருள். வடநாட்டில் குவேரா மக்களால் வழிபடும் தெய்வமாக இருந்தது. எனவே, குவிரன் ஆதன் இந்தியா முழுவதிலும் அறியப்பட்ட மன்னனாக இருந்தான் எனக் கருதலாம். மேற்கண்ட காரணங்களால் கீழடி நாகரிகம் கி.மு.2000 வரை கணிக்கக் கூடியதாக உள்ளது. சிந்துவெளியில் எங்கும் கிடைக்காத கற்கோடரி செம்பியன் கண்டியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிந்துவெளி எழுத்தில் கோகாங்கன் என்னும் பெயர் எழுதப்பட்டிருப்பதால் சிந்துவெளி அசையெழுத்தும் தமிழ்நாட்டில் தோன்றின.

பேராசிரியர் இரா.மதிவாணன், இயக்குனர், சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம், சென்னை.

அதிகம் வாசிக்கப்பட்டவை