சிறப்புக் கட்டுரைகள்

வெற்றி பெறுமா மாணவர்களின் போராட்டம் + "||" + Will you succeed? Students struggle

வெற்றி பெறுமா மாணவர்களின் போராட்டம்

வெற்றி பெறுமா மாணவர்களின் போராட்டம்
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தையைத் தரமான பள்ளியில் சேர்ப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சி.
ல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தையைத் தரமான பள்ளியில் சேர்ப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளும் அதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மற்றும் ஐ.ஐ.டி. போன்ற தரமான பொறியியல் கல்லூரியில் தன் குழந்தைக்கு இடம் கிடைக்கத் தேவையான மதிப்பெண்களைப் பெறவைக்கும் முயற்சிகளிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் உலக நாடுகளின் பார்வை எப்படி இருக்கிறது?

பூமியை வெப்பமயமாக்கும் ‘பசுமைக் குடில்’ (கிரின்ஹவுஸ்) விளைவுகளால் ஏற்படும் காலநிலை மாற்றங்களும், அதனால் எதிர்கால தலைமுறையினர் சந்திக்க வேண்டியிருக்கும் பேராபத்தையும் வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட உலகநாடுகளில் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் கடந்த மாதம் 20-ந் தேதியிலிருந்து 27-ந் தேதி வரை ஒரு வாரகாலம் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, பல்வேறு வகையான போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்களின் இந்த வேலைநிறுத்த போராட்டங்கள் பெற்றோர்களின் அனுமதியுடன்தான் நடந்துள்ளன. பல இடங்களில் நிகழ்ந்த பள்ளி மாணவர்களின் போராட்டங்களில் பெற்றோர்களும் கலந்து கொண்டு காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்த விரும்பும் மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

கடந்த ஓராண்டு காலமாக நடந்துவரும் இந்த காலநிலை மாற்றங்களுக்கு எதிரான போராட்டங்களில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு வருகின்றனர். ஆயிரத்துக்கும் சற்று அதிகமான இந்திய மாணவர்கள் ஐதராபாத், டெல்லி மற்றும் குர்கான் நகரங்களில் நடைபெற்ற காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். காலநிலை மாற்றங்களுக்கு முக்கியமான காரணியாக இருக்கும் பசுமைக் குடில் விளைவுகளை ஏற்படுத்தும் ‘கார்பன்-டை- ஆக்சைடு’ உள்ளிட்ட சில வாயுக்களைப் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களும், தொழிற்சாலைகளும் அதிக அளவில் வெளியிடுகின்றன. காடுகளும், மரங்களும், செடிகளும் தொடர்ந்து அழிக்கப்பட்டுவருவதால் அவைகளால் உள்வாங்கப்படும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு கணிசமாகக் குறைந்து வருவதும் பசுமைக் குடில் விளைவுகளை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகிறது. மேலும் பூமியிலிருந்து எடுக்கப்படும் புதைபடிவ எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்றவற்றின் பயன்பாட்டினால் கார்பன்-டை-ஆக்சைடு உள்ளிட்ட சில வாயுக்கள் காற்று மண்டலத்தில் அதிகரித்து காலநிலை மாற்றத்திற்கு வழி வகுக்கிறது என்பதை அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

இன்றைய சூழலில் அதிக அளவில் பரவியிருக்கும் நுகர்வோர் கலாசாரம் காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தங்களிடம் அளவுக்கு மிஞ்சிய பணம் இருக்கிறது என்பதை வெளி உலகுக்கு உணர்த்துவதற்காக வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மோட்டார் சைக்கிள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓரிரு கார்கள் என வைத்திருப்பது, காற்று மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவைக் கணிசமாக அதிகரிக்கச் செய்து காலநிலை மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.

முடிந்தவரை தனிப்பட்ட முறையில் மோட்டார் வாகனங்கள் வைத்திருப்பதைத் தவிர்ப்பதும் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதும் முடிந்தவரை மின்சார பேருந்துகள், மெட்ரோ மற்றும் மின்சார ரெயில்களில் பயணிப்பதும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவை காற்று மண்டலத்தில் கணிசமான அளவுக்குக் குறைப்பதோடு காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்குப் பெரிதும் துணைபுரிகிறது. இதன் அடிப்படையில்தான் டீசல், பெட்ரோல் வாகனங்களின் பயன்பாட்டினை முற்றிலுமாகத் தடைசெய்யும் முயற்சியை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

பசுமைக் குடில் விளைவுகளால் ஏற்படும் காலநிலை மாற்றங்களினால் பல்வேறு தொற்று நோய்களின் தாக்கம் மனித சமுதாயத்தில் ஏற்படுவதோடு மட்டுமின்றி மன ஆரோக்கியம் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், அதன் விளைவாக மனச்சோர்வு, குடும்ப வன்முறைகள் மற்றும் தற்கொலைகள் சமுதாயத்தில் அதிகரிக்கும் என்றும், உலக நாடுகள் பலவற்றில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் உணர்த்துகின்றன. காலநிலை மாற்றங்களினால் எதிர்பாராத கடும் வறட்சி மற்றும் வெள்ள அபாயங்கள் நிகழக்கூடும். கால் நடைகள் கணிசமான அளவிற்கு அழிந்துவிடக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தியாகும் தானியங்களில் ஊட்ட சத்துக்களின் அளவு கணிசமாகக் குறைந்து மனித சமுதாயத்தின் எதிர்கால வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிடும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன?

தற்போது உள்ள வனங்களைப் பாதுகாப்பதும், புதிய சமூகக் காடுகளை உருவாக்குவதும், சாலையோரப் பூங்காக்களை அமைப்பதும், ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு மரத்தை நட்டு வளர்ப்பதும் ஆன செயல்களில் ஈடுபடும் பொழுது காற்று மண்டலத்திலுள்ள கார்பன்-டை-ஆக்சைடின் அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கி காலநிலை மாற்றம் நிகழாமல் தடுத்து நிறுத்த முடியும். காலநிலை மாற்றங்களினால் மனித சமுதாயம் சந்திக்க வேண்டியிருக்கும் சவால்களை முன்கூட்டியே உணர்ந்த முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பசுமை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும், அதற்காக ஆயிரம் கோடி மரங்கள் வளர்ப்பதே இந்தியர்களின் இலக்காக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அந்த லட்சியப் பணியில் மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவரது இறுதி நாள்வரை அறிவுறுத்தி வந்தார்.

ஆண்டு முழுவதும் வற்றாத சக்தியை வழங்கிக் கொண்டிருக்கும் சூரியக் கதிர்களிலிருந்து ‘பசுமை சக்தி‘ என்றழைக்கப்படும் சூரிய சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்து அந்த பசுமை சக்தியைத் தொழிற்சாலைகளை இயக்குவதற்கும், வாகனங்களை ஓட்டுவதற்கும், இதர வீட்டு உபயோகங்களுக்கும் அதிக அளவில் பயன்படுத்தினால் காலநிலை மாற்றம் நிகழ்வதைப் பெருமளவில் தடுத்து நிறுத்திவிட முடியும் என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்து.

மாணவன் நினைத்தால் நடத்தியே காட்டுவான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உலக நாடுகளிலுள்ள பள்ளி மாணவர்கள் கால நிலை மாற்றத்திற்கு எதிராகத் தொடங்கி இருக்கும் இந்த போராட்டம் வெற்றியடைய வேண்டும். அதற்கான தார்மீக ஆதரவை நாம் கொடுத்தால் மட்டும் போதாது. பூமியை வெப்பம் அடையச்செய்யும் செயல்பாடுகளை முற்றிலுமாகப் புறந்தள்ளி எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியத்துடன் இந்த பூவுலகில் வாழ வழியமைத்துக் கொடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்த்துகிறது பள்ளி மாணவர்களின் இந்த போராட்டம்.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ். முன்னாள் காவல்துறை தலைவர்.