கால் இழந்த நாய்க்கு கிடைத்த கவுரவம்


கால் இழந்த நாய்க்கு கிடைத்த கவுரவம்
x
தினத்தந்தி 12 Oct 2019 2:23 PM GMT (Updated: 12 Oct 2019 2:23 PM GMT)

அமெரிக்காவின் 12 வயதான நாய் லூகா, 6 ஆண்டுகள் அந்நாட்டு ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறது. வெடிகுண்டுகளை முகர்ந்து பார்த்து, தகவல் தெரிவிப்பதில் லூகா நிபுணர்.

பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. 2012-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு குண்டு வெடித்தது. அதில் மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் லூகா தன் முன்னங்கால்களில் ஒன்றை இழந்தது. பலத்த காயமடைந்த லூகாவுக்கு ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் 3 கால்களில் நடக்க ஆரம்பித்துவிட்டது. தற்போது கலிபோர்னியாவில் இருந்து லண்டனுக்கு பி.டி.எஸ்.ஏ. டிக்கின் மெடல் பெறுவதற்காக வந்திருக்கிறது.

“லூகா மிகவும் புத்திசாலியானவள். வேலை இல்லாத நேரங்களில் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துவாள். ஈராக்கிலும் வேலை செய்திருக்கிறாள் லூகா. விபத்துக்குப் பிறகும் அதே உறுதி, தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறாள். லூகாவுக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் லூகாவின் உரிமையாளர் கன்னெரி வில்லிங்ஹாம். டிக்கின் மெடல் பெறும் 67-வது விலங்கு லூகா. 1943-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விருதை, இதுவரை 31 நாய்கள், இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற 32 புறாக்கள், 3 குதிரைகள், ஒரு பூனை ஆகியவை பெற்றிருக்கின்றன.

Next Story