சோழர் காலத்தில் சீனாவிற்கு சென்ற தூதுக்குழு


சோழர் காலத்தில் சீனாவிற்கு சென்ற தூதுக்குழு
x
தினத்தந்தி 13 Oct 2019 6:18 AM GMT (Updated: 13 Oct 2019 6:18 AM GMT)

அப்போது மாமன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சி காலம். இன்றைக்கு இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா நாடு ஸ்ரீவிஜயம் எனப்பட்டது.

ப்போது மாமன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சி காலம். இன்றைக்கு இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா நாடு ஸ்ரீவிஜயம் எனப்பட்டது. இது சோழர்கள் வணிக தொடர்புடைய மிக முக்கியமான நாடு. சீனத்திற்கும், சோழ நாட்டிற்கும் இடையே முக்கியமான வணிக கேந்திரமாக ஸ்ரீவிஜயம் நாடு இருந்து வந்தது. இந்த நாட்டினர் சோழர்களுடன் நட்புறவுடன் இருந்தாலும் சோழ தேசத்து வணிகர்கள், சீன தேசத்துடன் நேரடி தொடர்பு கொள்ள தடையாக, மறைமுக சதியில் ஈடுபட்டு வந்தார்கள். சோழர்கள் தங்கள் அடிமை நாடு என்று சீனாவில் பொய்யான தகவல்களை பரப்பி வந்தார்கள். தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை வணிகர்கள் மாமன்னரிடம் முறையிட்டார்கள். இந்த சதியை, துரோகத்தை முறியடிக்க ராஜராஜ சோழன் ஒரு தூதுக்குழுவை சீனாவிற்கு அனுப்ப முடிவு செய்தார். தூதுக் குழுவில் இடம் பெற வேண்டியவர்கள் மிக கவனமுடன் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், மணிக்கிராமத்தார், அஞ்சு வண்ணத்தார், நானா தேசிகள் போன்ற கடலோடிகள், வணிக குழுவின் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள், மன்னரின் நம்பிக்கைக்குரிய தளபதிகள், ராஜதந்திரமும், சொல்லாற்றலும் மிக்க அமைச்சர் அந்தஸ்தில் உள்ளவர்கள் என 52 பேர் குழுவில் இடம் பெற்றார்கள். இவர்களின்றி பாய்மரக் கப்பல் செலுத்தும் மாலுமிகள், வானியல் வல்லுனர்கள், மருத்துவர்கள், போர்வீரர்கள், சமையல்காரர்கள் என்று 500 பேர் இரண்டு மரக்கலங்களில் செல்ல முடிவு செய்திருக்க வேண்டும். இந்த தூதுக் குழுவின் நோக்கம் சீன தேசத்தின் மன்னருக்கு ஸ்ரீவிஜயத்தின் தில்லுமுல்லுகளை விவரிப்பதுடன், இணக்கமான நல்லுறவை வலுப்படுத்தி, சோழ தேசத்துடன் வணிக உறவை விரிவுபடுத்தி மேம்படுத்துவதே ஆகும்.

சிறப்பான, விரிவான முன்னேற்பாடுகளுடன் ராஜராஜ சோழன் உத்தரவுபடி கி.பி. 1013-ல் நாகப்பட்டினம் துறைமுகத்தைப் அடைந்தார்கள். கீழ்த்திசை நாடுகளுக்கு பயணம் செய்ய போதுமான காற்று வீசத் தொடங்கியதும் மரக்கலங்கள் கடலில் பயணிக்கத் தொடங்கின. இந்த தூதுக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திச் சென்றவர் சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியின் நம்பிக்கையும், அரசியல் சாணக்கியத்தனம் பெற்ற சோழ அரச சபையில் துணை அமைச்சர் அந்தஸ்தில் இருந்தவர் என தெரிகிறது. தூதுக்குழுவினரின் கப்பல்கள் ஈழம், பர்மா, மலேசியா, ஸ்ரீவிஜயம் போன்ற இடைப்பட்ட நாடுகளுக்கும் சென்றார்கள். அந்நாட்டு மன்னர்களை சந்தித்து தங்கள் நோக்கம் பற்றி தெளிவு படுத்தினார்கள். அங்கங்கே உணவு மற்றும் குடிநீர் தேவைகளையும் நிறைவு செய்து கொண்டார்கள். இந்து மகா சமுத்திரம், வங்க கடல், சுந்தா நீரினை, மலாகா நீரினை, தென்சீனக்கடல் போன்றவற்றின் வழியே கப்பல் பயணம் நீண்டது. அந்த கால கடல் பயணம் எவ்வளவு சவாலானது, ஆபத்தானது என்று விளக்க தேவையில்லை. பல இடர்பாடுகள், இயற்கையின் சீற்றங்கள், சோதனைகளை கடந்து ஆயிரத்து 150 நாட்கள் பயணத்தின் முடிவில் சீன தேசத்தின் துறைமுகப்பட்டினம் குவாங்க்சூவை அடைந்தார்கள்.

ராஜராஜ சோழன் உயிரோடு இருக்கும்போது புறப்பட்ட தூதுக்குழு அவர் மறைவிற்கு பின் கி.பி. 1016-ல் சீன தேசத்தை அடைய முடிந்தது. இவர்கள் சென்ற நேரம் சீனத்து சோங் வம்சத்து மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நாடே அமர்க்களப்பட்டு கொண்டிருந்தது. சோழ தேசத்தினர் வருகை மன்னருக்கு தெரியப்படுத்தப்பட்டது. செல்வச்செழிப்பை பிரகடனப்படுத்திய சீனத்து மன்னரின் அரச சபைக்கு சோழ நாட்டு தூதுக் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டார்கள். சோழ நாட்டிலிருந்து முதன்முதலாக இப்போதுதான் பரிசுப்பொருட்களுடன் தூதுக்குழு சீனம் வந்துள்ளது. சீனாவிற்கு மேற்கில் உள்ள நாடுகளில் இருந்து சீனாவிற்கு சென்ற முதல் தூதுக்குழுவும் இது தான். இது தமிழர்களின், தமிழ் வணிகர்களின் தூதுக்குழு என்பதில் தமிழருக்கு பெருமை.

முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட குல்லாய் (கிட்டத்தட்ட ஒரு கிலோ), யானை தந்தங்கள், சாம்பிராணி, சந்தனம் ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்கள் மற்றும் தங்க தகட்டில் எழுதப்பட்ட கடிதத்தையும் சீன மன்னனிடம் சமர்ப்பித்தார்கள் தூதுக்குழுவினர். விலை உயர்ந்த அபூர்வமான பரிசுப் பொருட்கள், மன்னரின் கடிதம் நம் நட்பு நாடி பல ஆயிரம் மைல்களை தாண்டி வந்தவர்கள் மேல் சீன மன்னருக்கு அன்பும், மரியாதையும் ஏற்பட்டது. தூதுவர்களுக்கு முதல் தரமான மரியாதை தந்து கவுரவிக்கப்பட்டார்கள். மாமன்னரின் ஆசை அவர் நினைத்தபடியே நிறைவேறியது. ஸ்ரீவிஜயம் இவ்வளவு காலம் அரங்கேற்றிய நாடகம் திரையிடப்பட்டது. குழுவினர் சில காலம் சீன தேசத்தின் விருந்தினராக இருந்து செல்லக் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். குவாங்க்சூ நகரில் சோழ தேசத்து வணிகர்கள் முகாமிட்டு தங்க இருப்பிடமும், வழிபாட்டிற்கு சிவாலயமும் கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.

சோழத்திலிருந்து புறப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இனியும் தாமதிக்காது தாயகம் திரும்ப சீன மன்னனிடம் உத்தரவு பெறுகிறார்கள். மன்னனும் தன் நாட்டின் அதிசயமான பொருட்களை சோழ மன்னனுக்கு பரிசாக கொடுத்து வழியனுப்பி வைக்கிறார். வந்த காரியம் இனிதே சுபமாக முடிந்த மகிழ்ச்சியோடு பாய்மரக் கப்பலில் பயணிக்க தொடங்கியது. வேறு எந்த நாட்டிற்கும் செல்லாமல் சோழ நாட்டை குறிவைத்து கப்பல்கள் நாகை துறைமுகத்தை வந்தடைந்தன.

மாமன்னர் ராஜராஜ சோழரிடம் தூதின் வெற்றியை தனதாக்கியது குறித்த மகிழ்ச்சியை பகிர வந்த தூதுக்குழுவினரை மாமன்னரின் மரண செய்தி தாக்கியது. அவருடைய மகன் ராஜேந்திர சோழன் மன்னராக முடி சூடி, சக்கரவர்த்தியாக ஆட்சி பீடமேறிய தகவல்கள் கிடைக்கின்றன. மன்னர் ராஜேந்திர சோழனை சந்தித்த தூதுக்குழுவினர் சீன தேசத்து மன்னர் வழங்கிய பரிசு பொருட்களையும், நட்புணர்வு, வணிகப் புரிதல் அடங்கிய அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தந்தையார் அனுப்பிய தூது குழுவினர் அவர்தம் நீண்டநாள் ஆசையை பூர்த்தி செய்து திரும்பியவர்களை உரிய முறையில் வரவேற்று கவுரவிக்கிறார். ராஜேந்திர சோழர் இவர்களின் கடற்பயணம், இடைப்பட்ட நாடுகளின் மன்னர்கள், சீன தேசத்து மன்னர், மக்கள் மற்றும் அந்த நாட்டின் வணிக வாய்ப்புகள் எல்லாம் விவரமாக, கவனமாக கேட்டு தெளிவு பெறுகிறார். இந்த கடற்பயணமே ராஜேந்திர சோழர் கடாரம் உட்பட கீழ் திசை நாடுகளுக்கு வெற்றிப் பயணம் மேற்கொள்ள ஒரு வழிகாட்டு பயணமாக அமைந்தது எனலாம்.

சோழ தேசத்து தூதுக் குழுவினரின் வரலாற்று சிறப்பு இந்த கடல் பயணத்தை என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்கிறார் மன்னர். ஆயிரக்கணக்கான மைல்கள் நீரில் பயணித்து சாதனை படைத்தவர்களுக்கு ஒரு நீர் நிலைக்கே பெயர் வைக்க முடிவு செய்கிறார். தமிழர்களின் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் தலைவர் துணை அமைச்சர் சூலி சன் வென் என்று சீன தேசத்து ஆவணங்களில் காணப்படுகின்றது. இந்த பெயரை ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர் சோழ சமுத்திரம் என்று மொழி பெயர்த்திருக்கிறார். எனவே தூதுக் குழுவை பெருமைப்படுத்தும் விதமாக தஞ்சையின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஏரிக்கு சோழ சமுத்திரம் என்று மன்னர் பெயர் சூட்டினார். இதுவே தஞ்சை மக்களால் சோழ சமுத்திரம் என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது.

அய்யம்பேட்டை என். செல்வராஜ், தலைவர், சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்.

Next Story