அவசரத்திற்கு இடம் கொடுத்தால் ஆபத்தும் தேடிவரலாம்..


அவசரத்திற்கு இடம் கொடுத்தால் ஆபத்தும் தேடிவரலாம்..
x
தினத்தந்தி 13 Oct 2019 7:17 AM GMT (Updated: 13 Oct 2019 7:17 AM GMT)

பெண்கள் இயல்பாகவே இரக்கம், கருணை, அடுத்தவர் களுக்கு உதவவேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள்.

பெண்கள் இயல்பாகவே இரக்கம், கருணை, அடுத்தவர் களுக்கு உதவவேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள். அது பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால் அதுவே அவர் களுக்கு ஆபத்தாகிவிடக்கூடாது. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி தங்களை சுற்றி நடக்கும் செயல்களை பற்றிய விழிப் புணர்வு பெண்களுக்கு தேவை. அவர்களை மையப்படுத்தி நடக்கும் ஆபத்துகளை புரிந்துகொண்டு, தங்களை பாதுகாக்க வேண்டும்.

எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. பல கோணங்களில் இருந்து புதிது புதிதாக பிரச்சினைகள் முளைக்கும்போது முந்தைய அனுபவங்கள் அதற்கு பயன்படுவதில்லை. மூளையை உஷார் நிலையில் வைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் கூட சில நேரங்களில் ஏமாற்றப்பட்டு விடுகிறார்கள்.

பெண்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது, வழியில் நிற்கும் ஆண்கள் ‘லிப்ட்’ கேட்டால் தரலாமா, கூடாதா என்ற கேள்வி எழும். அதற்கு சரியான பதில் எது?

சில பெண்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பார்ப்போம்.

அனுபமா நன்றாக பைக் ஓட்டுவாள். அந்த பயணம் அவள் வேலைக்கு சவுகரியமாக இருந்தது. இரவு, பகல் பாராமல் எங்கு வேண்டுமானாலும் சென்று வர, அவளுக்கு பைக் ஒரு நல்ல நண்பனாக இருந்தது.

அன்று அவள் சாலையில் பயணப்பட்டுக் கொண்டிருந்தபோது, காலில் அடிபட்ட ஒரு இளைஞன் நொண்டிக்கொண்டே வந்து லிப்ட் கேட்டான். தன்னை மருத்துவமனையில் இறக்கிவிடுமாறு, வலியோடு கேட்டான். முடியாது என்று சொல்ல அவளுக்கு மனம் வராததால் லிப்ட் கொடுத்தாள்.

அவன் சொன்ன மருத்துவமனையை நோக்கி வண்டி விரைந்தது. அந்த இடம் வந்ததும் நன்றி சொல்லிவிட்டு இறங்கிக் கொண்டான். மருத்துவமனையை நோக்கி நடந்த அவனைப் பார்த்து அனுபமா அதிர்ந்து போனாள். அவனுக்கு காலில் அடி எதுவும் இல்லை. ராஜநடை போட்டு நடந்து சென்றுகொண்டிருந்தான்.

அவளுக்கு ஆத்திரம் வந்தது. ஆனால் அவனிடம் சண்டை போட நேரமில்லை. தூரத்தில் சென்ற அவன், அவளை திரும்பிப் பார்த்து கிண்டலாக சிரித்தான். அப்படியே ஓடிப்போய் அவனை அறையலாமா? என்று அவளுக்கு தோன்றியது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கிளம்பிப்போய்விட்டாள். தன்னை ஏமாற்றிய அந்த இளைஞனை பற்றி தோழிகள் எல்லோரிடமும் திட்டி தீர்த்தாள்.

இது போன்ற சம்பவங்களால், உண்மையிலே ஆபத்தில் இருப்பவர்களை கூட பெண்கள் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள்.

பிரியா, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையே வெறிச்சோடி கிடந்தது. திடீரென்று கையில் பெரிய பேக்குடன் வந்து நின்ற இளைஞன் ஒருவன், அவளது வண்டியை நிறுத்தி லிப்ட் கேட்டான். ‘நான் அவசரமாக ரெயிலை பிடிக்கவேண்டும். ரெயிலுக்கு நேரமாகிவிட்டது. என் பைக் ரிப்பேராகிவிட்டது. பிளீஸ்.. உதவுங்கள்..’ என்றான்.

அவளும் அந்த இளைஞனை ஏற்றிக்கொண்டு தட்டுத் தடுமாறி, ரெயில் நிலையத்தை நோக்கி வண்டியை ஓட்டினாள். நிலையம் வந்ததும் அவன் பவ்யமாக இறங்கி கொண்டான். நன்றியுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு விடை பெற்று ஓடினான்.

மறுநாள் பிரியாவை தேடி போலீஸ் வந்தது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகள் சிலவற்றை காட்டி, ‘நீங்கள் அன்று பெரிய பையோடு வந்தவனை ஏற்றிக்கொண்டுபோய் ரெயில் நிலையத்தில் விட்டீர்களே அவனுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு?’ என்று கேட்டார்கள்.

அப்போதுதான் அவன் திருடன் என்பதும், கையில் வைத்திருந்த பையை யாரிடமோ இருந்து திருடிவிட்டு வந்திருக்கிறான் என்பதும் அவளுக்கு புரிந்தது. ‘தனக்கும், அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பரிதாபப்பட்டு அவனுக்கு லிப்ட் மட்டுமே கொடுத்தேன்’ என்பதை அவள் நிரூபிக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டிய தாகிவிட்டது.

நகர வாழ்க்கையின் பரபரப்பை பெண்கள் எதிர்கொள்ள தங்களது சொந்த இரு சக்கர வாகனங்களை நம்பி இருக்கிறார்கள். ஆனால் உதவி செய்வதாக நினைத்து உபத்திரவத்திற்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாகிவிடக்கூடாது.

Next Story