அதிசய அழகி..


அதிசய அழகி..
x
தினத்தந்தி 13 Oct 2019 7:24 AM GMT (Updated: 13 Oct 2019 7:24 AM GMT)

‘மாடலிங்’ உலகில் அடியெடுத்துவைக்க பெண்கள் பல்வேறு தடைகளை தாண்டவேண்டியிருக்கும்.

‘மாடலிங்’ உலகில் அடியெடுத்துவைக்க பெண்கள் பல்வேறு தடைகளை தாண்டவேண்டியிருக்கும். அந்த தடைகளை தாண்ட முடியாமல், அந்த கவர்ச்சி துறைக்குள் காலடி எடுத்துவைக்கும் பெண்களில் பலரது கனவு பாதியிலேயே கலைந்துபோய்விடுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் மாடலிங் துறை மீது கொண்ட மோகத்தில் எதிர்கொண்ட தடைகள் அத்தனையையும் தகர்த்தெறிந்து, அந்த துறைக்குள் நுழைந்து பிரகாசித்துக்கொண்டிருக்கிறார், திருநங்கை யாழினி. இவர் மாடலிங் அழகியாக மட்டுமின்றி அழகிப்போட்டியிலும் ஜெயித்து சாதனை படைத்திருக்கிறார்.

சமீபத்தில் டெல்லியில் திருநங்கை களுக்காக ‘மிஸ் டிரான்ஸ்குயின் இந்தியா’ என்ற அழகிப்போட்டி நடந்தது. அதில் யாழினி மூன்றாம் இடம் பிடித்திருக் கிறார். முதல் இடத்தை கர்நாடகாவை சேர்ந்த நீத்துவும், இரண்டாவது இடத்தை சத்தீஸ்காரை சேர்ந்த சைலீராயும் பிடித்துள்ளனர். வெற்றியுடன் சென்னை திரும்பிய யாழினிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த பூரிப்பில் இருந்தவரிடம் அழகிப்போட்டியின் அனுபவம் பற்றியும், மாடலிங் உலகில் நுழைவதற்காக சந்தித்த போராட்ட வாழ்க்கை பற்றியும் கேட்டோம்.

‘‘சிறுவயதிலேயே எனக்கு அழகுணர்ச்சி அதிகம். என்னை நானே அழகுப்படுத்தி பார்த்து மகிழ்வேன். எனக்குள் பெண்மை உணர்வு குடிகொண்டிருப்பதை தாமதமாகத்தான் நானே புரிந்து கொண்டேன். திருநங்கைகளுக்கான குணாதிசயங்கள் எனக்குள் இருந்ததை என்னாலேயே நம்பமுடியவில்லை. என் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாமல் குழம்பித் தவித்தேன். மாடலிங்தான் என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் களமாக அமைந்தது’’ என்கிறார்.

மாடலிங் துறைக்குள் காலூன்றினாலும் இவரால் அழகிப்போட்டிக்குள் நுழைந்து எளிதாக சாதித்துவிட முடியவில்லை. அதற்காக பல்வேறு சிரமங்களை அனுபவித்திருக்கிறார்.

‘‘எனக்குள் குடியிருந்த அழகுணர்ச்சியை முதலீடாக கொண்டு மாடலிங் வாய்ப்புகளை பெற போராடினேன். அந்த துறையில் போட்டி, பொறாமை அதிகம். தன்னுடைய இடத்திற்கு மற்றொருவர் வருவதை யாரும் விரும்புவதில்லை. மாடலிங்கில் தாங்கள் மட்டும்தான் நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் சில மாடலிங் அழகிகளிடம் இருக்கிறது. தங்களுக்கு பின்னால் வருபவர்களை வளர விடுவதற்கு அவர்கள் மனம் எளிதில் இடம் கொடுப்பதில்லை. மாடலிங் உலகில் இருக்கும் சில திருநங்கைகளின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது.

மாடலிங் துறையில் வளர்வதற்கு ஆரம்ப காலத்தில் நான் ரொம்பவே சிரமப்பட்டேன். எனக்கு கைகொடுத்து தூக்கிவிடுவதற்கு யாரும் இல்லை. ஒரு போட்டோஷூட் நடத்துவதற்கே பல சிக்கல்களை சந்திக்கவேண்டி இருந்தது. மாடலிங் மீதான ஆர்வத்தால் சோர்ந்து போகாமல் கடுமையாக உழைத்தேன். அதன் பின்புதான் மாடலிங் வாய்ப்பு கை கூடியது. அதுவே அழகுப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்தது.

2017-ம் ஆண்டு மிஸ் கூவாகம் அழகி போட்டியில் வென்றேன். அதன் பிறகு மாடலிங்கோடு அழகி போட்டி மீதும் ஈடுபாடு உண்டானது. அந்த உற்சாகம்தான் டெல்லி போட்டியில் பங்கேற்க வைத்தது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 பேர் இறுதிச்சுற்றுக்கு வந்திருந்தார்கள். 5 சுற்றுகளாக போட்டிகள் நடந்தது. எனக்கு அது புது அனுபவமாக அமைந்தது. மாடலிங்கை மட்டும் தகுதியாகக் கொண்டு போட்டியில் வெற்றிபெற முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். ஏராளமான நுணுக்கங்களை நான் கையாள வேண்டியிருந்தது’’ என்கிறார்.

யாழினி இந்த அழகிப்போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் சக போட்டியாளர்களுக்கு சவாலாக இருந்திருக்கிறார். தன்னுடைய தனித்திறனை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி நிரூபித்திருக்கிறார்.

‘‘ஒவ்வொரு சுற்றும் எனக்கு சவாலாக அமைந்தது. தனித்திறன் சுற்றில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரத்தில் நடனமாடினேன். ஒரு பக்கம் சிவன், மறுபக்கம் பார்வதியாக என்னை உருவகப்படுத்தினேன். யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் நானே மேக்கப் போட்டுக்கொண்டேன். 20 நிமிடங்களில் மேக்கப்பை முடித்துவிட்டு ஆடுவதற்கு தயாராகிவிட்டேன். அதை பார்த்து சக போட்டியாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘ஆண் பாதி, பெண் பாதி’யாக உடலளவிலும், மனதளவிலும் சுபாவங்களை கொண்டிருக்கும் திருநங்கைகளின் உணர்வுகளை நடனத்தில் வெளிப்படுத்தினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மற்றொரு சுற்றில் கவுன் அணிந்து போஸ் கொடுக்க வேண்டியிருந்தது. அதுதான் எனக்கு ரொம்பவும் சவாலான சுற்றாக அமைந்தது. கழுத்து முதல் கால்கள் வரை கவுன் உடலை மூடிக்கொண்டிருந்தது. பின்பகுதியில் 5 மீட்டர் நீளத்திற்கு துணியை இணைத்திருந்தார்கள். அதை அணிந்துகொண்டு நேர்த்தியாக நடப்பது கடினமானதாக இருந்தது. நான் நடந்து வருவதற்கு ஏற்ப தரையில் படர்ந்திருக்கும் கவுனும் அழகாக நகர்ந்து வர வேண்டும். அதற்காக ரொம்பவே மெனக்கெட்டேன். அப்போது 7 அங்குலம் உயரத்திற்கு ஹைஹீல்ஸ் செருப்புகள் அணிந்திருந்தேன். அதனை அணிந்து கொண்டு கவுனின் பின் பகுதியை கையாள்வது கடினமாக இருந்தது.

போட்டிக்காக 7 நாட்கள் ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்தேன். அதனால் கால்கள் வீங்கி நடக்க முடியாமலும் கஷ்டப்பட்டேன். அனைத்து சுற்றுகளையும் மன திருப்தியுடன் செய்து முடித்தேன். அப்படியிருந்தும் முதலிடம் கிடைக்காமல் போனதற்கு மொழிப்பிரச்சினைதான் காரணம். அங்கு இந்தியையும், ஆங்கிலத்தையும்தான் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தினார்கள். எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலமும் சரியாக பேச வராது.

முதலிலேயே போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் மொழிப்பிரச்சினையை தெரியப்படுத்திவிட்டேன். அவர்களும், ‘அது ஒன்றும் பிரச்சினை இல்லை. மொழி பெயர்ப்பாளர் வைத்துக்கொள்ளலாம்’ என்று கூறினார்கள். அதனால்தான் நான் நம்பிக்கையோடு களத்தில் குதித்தேன். ஆனால் இறுதிக்கட்டத்தில் ‘மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு எல்லா மொழியும் தெரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு மொழி பெயர்ப்பாளர்கள் யாரையும் நியமிக்க முடியாது’ என்று கூறிவிட்டார்கள். அது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. வெளி இடங்களுக்கு சென்றால் தகவல் தொடர்புக்கு அங்குள்ள மொழியையும் அறிந்திருக்க வேண்டும். நமது வளர்ச்சிக்கு மொழிப்புலமை மிக அவசியம்.

டெல்லி அழகிப் போட்டியில் எனக்கு ஒதுக்கப்பட்ட போட்டி எண்ணுடன் தமிழ்நாடு என்ற பெயரையும் இணைத்திருந்தார்கள். என் பெயரை உச்சரிக்கும்போது தமிழ்நாட்டின் பெயரையும் சேர்த்து சொன்னதை கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இப்படியொரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடக்கும் திருநங்கைகளுக்கான சர்வதேச அழகுப்போட்டியில் பங்கேற்று நம் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கு மொழி தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக ஆங்கில மொழியை வேகமாக கற்று வருகிறேன்’’ என்கிறார்.

23 வயதாகும் யாழினியின் பூர்வீகம் மதுரை அருகில் உள்ள வில்லாபுரம். பெற்றோர்: மூர்த்தி-பாண்டியம்மாள். பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை திருநங்கைக்கான சுபாவங்கள் யாழினிக்கு இருப்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியாமலேயே இருந்திருக்கிறது. கல்லூரி படிப்பை தொடர்ந்தபோதுதான் சக மாணவர்களின் கேலி கிண்டலுக்குள்ளாகி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

‘‘நான் நன்றாக படிப்பேன். அதனால் ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் அளித்து வந்தார்கள். உடல் அளவிலும், மனதளவிலும் எனக்குள் மாற்றம் உருவானபோது அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். ஆசிரியர்களும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். பின்பு கோவையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் நிலை உருவானது. அதனால் பெற்றோருடன் நெருங்கிய தொடர்பில் இல்லாமல் வளர்ந்தேன். என் உணர்வுகளை யாரிடம் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாறினேன். அப்போது திருநங்கை ஒருவர் எனக்கு பழக்கமானார். அவர்தான் நான் திருநங்கையாக மாறிக்கொண்டிருப்பதை உணரவைத்தார்.

‘பிளஸ்-டூ’ முடித்ததும் பெற்றோரிடம் சொல்லாமலேயே மதுரைக்கு திரும்பி வந்து கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு ஒருசில மாணவர்கள் என்னை ராக்கிங் செய்தார்கள். சிலர் முகத்திற்கு முன்பு நன்றாக பேசுவார்கள். என்னை கடந்ததும் ஏளனமாக விமர்சிப்பார்கள். அவர்களின் செய்கைகளால் மூன்றே மாதங்களில் என் கல்லூரி படிப்பு முடிவுக்கு வந்தது. பெற்றோரிடம் சொல்வதற்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளுடன் சேர்ந்தேன். பாலியல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டேன். மாடலிங் எனக்கு பிடித்தமானதாக இருந்ததால் அதில் கவனம் செலுத்துகிறேன். குறும்படங்களிலும் நடித்திருக்கிறேன். சினிமா வாய்ப்பையும் பயன்படுத்த முயற்சிக்கிறேன். நமக்கு எது பிடித்தமானதோ அதை தைரியமாக செய்ய வேண்டும். யார் எது சொன்னாலும் அதை காதில் வாங்காமல் நம்முடைய இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் சாதிக்க முடியும்’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார், யாழினி.

Next Story