சிறப்புக் கட்டுரைகள்

மூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை + "||" + Stem Cell Therapy for Arthritis

மூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை

மூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை
மனித உடலில், தினசரி ஆரோக்கியத்திற்குத் தேவையான நூற்றுக்கணக்கான வகை உயிரணுக்கள் உள்ளன.
இந்த உயிரணுக்களின் பொறுப்பு நம் உடலை செயல்பட வைப்பதாகும். இதயத்தை துடிக்க வைப்பது, மூளையை சிந்திக்க வைப்பது, சிறுநீரகத்தை ரத்தம் சுத்திகரிக்க வைப்பது, பழைய தோல் உதிரும் பொழுது புதிய தோல் உண்டாக்குவது போன்ற பல செயல்கள் இந்த உயிரணுக்கள் மூலம் நடைபெறுகிறது.

‘ஸ்டெம் செல்’ என்னும் குருத்தணுக்களின் தனிப்பொறுப்பு அனைத்து வகையான உயிரணுக்களையும் உருவாக்குவது தான்.

முழங்கால் மூட்டுகளில் நல்ல ஆரோக்கியமான புதிய குருத்தெலும்புகளை மீண்டும் உருவாக்கும் திறமை, ஸ்டெம்செல் சிகிச்சையினால் கிடைக்கப்பெற்றுள்ளது.

காயத்தினாலோ அல்லது வயோதிக நலிவினாலோ மூட்டுகளில் ஏற்பட்ட சேதத்தை குணப்படுத்த தற்போது இந்த சிகிச்சை மூலம் இயலும் என ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெம் செல்களால் பலவகை திசுக்களை உருவாக்க இயலும். இதனால் எலும்பு மட்டுமல்லாமல் குருத்தெலும்புகளையும் உருவாக்க முடிகிறது.

சமீபத்தில் ஒரு நோயாளியின் உடம்பில் இருந்தே, எலும்பு மஜ்ஜையில் இருந்து ஸ்டெம் செல்கள் பெறப்பட்டன. இவ்வகை ஸ்டெம் செல்கள் குருத்தெலும்புகளை பழுது பார்க்கும் திறன் பெற்றவை.

இதுதொடர்பான ஆய்வுகளில், அவ்வகை ஸ்டெம் செல்கள் மற்றும் அவற்றை வளர்க்கும் முறைக்கான காரணிகள் மீது முதலில் கவனம் செலுத்தப்பட்டது. அப்போது விரிவாக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் நேரடியாக ஊசி மூலம் சேதமடைந்த முழங்கால் மூட்டுகளில் செலுத்தப்பட்டன.

மூட்டுகளின் உள்ளே சென்ற செல்கள் ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதன் மேல் புதிய செல்களைப் பெருக்கின. ஸ்டெம் செல்கள் மேலும் மேலும் பெருகி, சேதமடைந்த திசுக் களுக்கு பதிலாக புதிய குருத்தெலும்பை உருவாக்கின. இது மிகவும் குறைந்த காலத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

சேதமுற்ற திசுக்களில் தேவையான இடத்திற்கு சரியாக இந்த ஸ்டெம் செல்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் இமேஜிங் மற்றும் அல்ட்ரா சவுண்ட் செயல்முறைகளை பயன் படுத்துகின்றனர்.

மற்றொரு முறையில் இம்மாதிரியான ஸ்டெம் செல்களை பரிமாற வேண்டும் எனில் அறுவை சிகிச்சை முறையும் பயன்படுகிறது. இவ்வகை அறுவை சிகிச்சையில் மூட்டுக்களின் மேற்பரப்பு வெட்டப்பட்டு அங்கு ஸ்டெம் செல்களும், அவை வளர தேவையான காரணிகளும் செலுத்தப்படுகிறது. இதன்மூலம் நோய் குணமடைதல் விரைவாக நடக்கிறது. இவ்வகை சிகிச்சை முறைகளில் எப்போதும் போல் அறுவை சிகிச்சைக்குப் பின் உரிய காலம் ஓய்வு எடுக்கவேண்டியது அவசியம். ஏனெனில் மூட்டுக்களில் அதிக அழுத்தம் தரும் செயல்களால் சிகிச்சையின் வெற்றி பாதிக்கப்படும்.

குருத்தெலும்புகள் என்பது கடினமான மீள் தன்மை உடைய திசுக்கள்; மூக்கு காது மற்றும் மூட்டுகளில் காணப்படுகின்றன. எலும்புகளின் முனைகளில் ஏற்படும் அதிர்வுகளை உறிஞ்சும் சக்தி படைத்தவை. தோலில் உள்ள செல்கள் போல குருத்தெலும்புகள் இயற்கையில் தானாகவே மீள் உருவாவதில்லை.

மூட்டுக்களில் சேதத்தினால் ஏற்படும் நோய்க்கு ‘எலும்புகளின் கீல் வாதம்’ (Osteoarthritis) என்பர். குறிப்பாக முழங்கால் மூட்டு, இடுப்பு மற்றும் கைகளில் உள்ள மிகச்சிறிய மூட்டுகள் தான் சாதாரணமாக இவ்வகை சேதத்திற்கு ஆட்படுகின்றன.

இந்த நோயில் குருத்தெலும்புகள் சேதம் ஆகின்றன. எனவே அந்த மூட்டுக்கள் உபயோகப்படுத்தும் போது பயங்கர வலியினை நோயாளி உணர்வார். அவரால் ஓடவோ, நடக்கவோ மற்றும் குனியவோ கூட கடினமாக இருக்கும். மேலும் அவரது உடல் எடையும் அந்த முழங்கால் மீது அழுத்தும்போது முழங்கால் வலி அதிகமாக இருக்கும்.

சாதாரணமாக உடலில் ஒரு கிலோ எடையை ஒருவர் குறைத்தால், மூட்டுகளில் நாலு கிலோ அழுத்தம் குறையும் என சொல்லப்படுகிறது.

வழக்கமான சிகிச்சை முறைகளான ‘பிசியோ தெரபி’ (Physiotherapy) மற்றும் கீல் வாதத்திற்கு பயன்படும் மருந்துகளும் ஒரு தற்காலிக வலி நிவாரணியாகவே பயன்பட்டு வருகின்றன. மிக மோசமான ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் காரணமாக சில சமயம் முழங்கால் மூட்டுகளை மாற்ற வேண்டிய நிலைமையும் சிலருக்கு ஏற்படுகிறது. மேலும் இவ்வகை அறுவை சிகிச்சையினால் பல மாதங்களுக்குப் பின்தான் நோயாளிக்கு மீண்டும் வலிமையும் உடல் இயக்கமும் கிடைக்கும். எனவே ஸ்டெம் செல்கள் பயன்பாட்டினால் இவ்வகை மூட்டு மாற்றமும் தேவை இல்லாமல் போகும் நிலை ஏற்படக் கூடும்.

-  முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.

(தொடரும்)