கனவு நாயகனின் கனவை நிஜமாக்குவோம்


முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
x
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
தினத்தந்தி 15 Oct 2019 5:56 AM GMT (Updated: 15 Oct 2019 5:56 AM GMT)

இன்று (அக்டோபர் 15-ந் தேதி) முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள்.

இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரம். அதுமட்டுமல்ல அனைவராலும் மதிக்கத்தக்க அற்புதமான ஒரு ஒப்பற்ற மனிதர் என போற்றப்படும் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மிகப்பெரிய பாடமாகும்.

தனது ஆரம்பக்கல்வியை மண்டபம் அரசு தொடக்கப்பள்ளியில் பயின்றார். பிறகு உயர்நிலைக் கல்வியை பெற கலாம் ராமநாதபுரம் ஸ்வார்டஸ் பள்ளியில் சேர்ந்தார்.

அடுத்து கலாம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்லூரியில் அவர் மனதைக் கவர்ந்தவராக இருந்தவர் பேராசிரியர் செக்குயிரா. அவர் கலாம் கவிதைகள் எழுத தூண்டுகோலாய் இருந்தார். கல்லூரி வாழ்கையில் இலக்கியம், தத்துவம் மற்றும் அறிவியல் ஆகியவற்றை கற்றுக்கொண்டார். கல்லூரி படிப்பு முடிந்ததும், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி இருந்தது. சென்னை எம்.ஐ.டி.யில் விண்ணப்பித்தார். கல்லூரியில் சேர அழைப்பு கடிதம் வந்தது. ஆனால் அதற்கான கட்டணத்தை செலுத்த கலாமின் பெற்றோரால் முடியவில்லை. ஆனால் கலாமின் அக்கா கட்டணத்தை செலுத்த உதவினார். கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கி இறுதி ஆண்டு பயிற்சிக்கு பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் சேர்ந்தார். அதில் விமானத்தை பழுது பார்த்தல் சம்பந்தமான அத்தனையும் தெரிந்துகொண்டார். விமானியாக வேண்டும் என்று கனவு கண்டு அதற்கான முயற்சி எடுத்து, அதற்கான நேர்காணலுக்கு சென்றார். நேர்காணலில் தோல்வி அடைந்தார். அவருக்கு ஒன்பதாவது இடமே கிடைத்தது. அவர் அந்த தோல்வியை நினைத்து மனம் தளரவில்லை. அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டார். விஞ்ஞானியாக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை தீர்மானித்தார்.

டெல்லியில் மற்றொரு பணியான முதுநிலை விஞ்ஞானி உதவியாளர் பணி கிடைத்தது. தான் விமானி ஆகமுடியவில்லை என்றாலும், விமானத்தை உருவாக்கும் பணி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தார். வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்கு வடிவமைத்து கொடுத்தார். பின்னர் இஸ்ரோவில் தனது ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்த அவர், 1980-ம் ஆண்டு ரோகினி ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டார். இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இதை பாராட்டி மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

1999-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையால் முக்கிய பங்காற்றினார். அதன் மூலம் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றினார் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். 1997-ம் ஆண்டு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவபடுத்தியது. 2002-ம் ஆண்டு நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று குடியரசு தலைவராக பதவி ஏற்றார். 2007-ம் ஆண்டு வரை குடியரசு தலைவராக இருந்து தனது சிறப்பான பணியில் மக்களின் அன்பை பெற்று மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். குடியரசு தலைவர் பணிக்கு பின்பு தான் மிகவும் விரும்பிய ஆசிரியர் பணியை மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். அப்துல் கலாமின் குணநலன்கள், உறுதிப்பாடு, ஊக்கமளிக்கும் கண்ணோட்டம் அவரது வாழ்க்கை முழுவதும் ஒளிவிட்டது. அவரிடம் காணப்பட்ட பெரிய பண்பு என்னவென்றால் குழந்தையின் நேர்மையும், இளைஞரின் வேகமும், பெரியவர்களின் பக்குவமும் கலந்த கலவையாக அவர் இருந்ததுதான்.

ஒருமுறை கலாமுக்கு பிறந்தநாள் வந்தது. அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் கலாமை பார்த்து உங்களது 80-வது பிறந்த நாள் வாழ்த்துகள் என்றார்கள். அதற்கு கலாம் அவரது நண்பர்களிடம் என்னை 80 வயது முதியவர் என்று சொல்கிறீர்களா, எனக்கு 30 வயது தான் ஆகிறது. நான் 30 வயது இளைஞர் என்றார். உடனே நண்பர்கள் சிரித்துக்கொண்டே எப்படி 30 வயது என்று சொல்கிறீர்கள் என்றார்கள். அதற்கு கலாம் சொன்னார், 1980-ம் ஆண்டு ரோகிணி ஏவுகணையை நான் முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினேன். அன்றைய தினம் தான் இந்த அப்துல்கலாம் என்பவர் யார் என்றே இந்த உலகிற்கு தெரிய வந்தது. அன்றைய தினம் தான் நான் இந்த உலகில் புதிதாய் பிறந்ததாகவே கருதுகிறேன். அன்றிலிருந்து இன்று வரை கணக்கிட்டுக்கொண்டால் 30 வருடங்கள் ஆகிறது. அதனால் எனது வயது 30 என்று குறிப்பிட்டேன் என்றார். ஒரு மனிதர் என்று சாதிக்கிறாரோ அன்றுதான் அவர் பிறந்ததாகவே கருதவேண்டும் என்கிறார் கலாம். இளைஞர்கள் ஒவ்வொருவரும் உலகில் புதிதாய் பிறந்து சாதித்து சரித்திரம் படைக்க வேண்டும் என்கிறார் கலாம்.

கலாம் இளைஞர்களுக்கு சொல்வது என்னவென்றால் வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். அதுதான் வெற்றியின் முதற்படி. வாழ்க்கையில் வெற்றி பெற நான்கு செயல்கள் அவசியம் என்கிறார். முதலாவது வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது அந்த லட்சியத்தை அடைய அறிவாற்றலை தொடர்ந்து பெருக்கிக்கொள்ள வேண்டும். அறிவை பெருக்குவது என்றால் நல்ல புத்தகங்களை வாசிப்பதும், சான்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களை ஊன்றிக் கேட்பது, மூன்றாவது கடின உழைப்பு, நான்காவது விடாமுயற்சி அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையும்படி தொடர்ந்து முயற்சிப்பது. இந்த நான்கையும் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

இது குறித்து கவிதை ஒன்றை கலாம் சொல்கிறார். “நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன், நான் பிறந்தேன் நற்பண்புகளுடன், நான் பிறந்தேன் கனவுடன், நான் வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன், நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த, நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன், நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க, நான் பூமியில் ஒரு போதும் தவழ மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம். பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்” என்ற கவிதையை இளைஞர்கள் தொடர்ந்து சொல்லி மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இன்றைய இந்தியாவின் மக்கள் தொகையில் 60 கோடி இளைஞர்கள் உள்ளார்கள். அவர்கள் ஆக்கப்பூர்வமான செயல்திறத்தோடு ஊக்கத்தையும் கையாண்டால் நமது நாடு வளர்ச்சி பெற்ற நாடாக உருவாகும் என்பதை உரக்க சொல்கிறார் கலாம். 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் நாள் ஷில்லாங்கில் உள்ள கல்லூரியில் உரையாற்றிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து மறைந்தார். மாணவர்களுடன் உரையாடுவதை எப்போதுமே விரும்பிய கலாம், தன் உயிர் பிரியும் தருவாயிலும் மாணவர்களிடம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பிறந்த நாளான இந்த நன்னாளில் இளைஞர்கள் அனைவரும் கலாம் அவர்கள் விட்டு சென்ற பணியை தொடருவோம். கனவு நாயகனின் கனவை நிஜமாக்குவோம் என உறுதி ஏற்போம்.

முனைவர் அ.முகமது அப்துல்காதர் முதல்வர், தனியார் பொறியியல் கல்லூரி, மதுராந்தகம்.

Next Story