வானவில்: இரட்டை வண்ணத்தில் ஹூண்டாய் வென்யூ


வானவில்: இரட்டை வண்ணத்தில் ஹூண்டாய் வென்யூ
x
தினத்தந்தி 16 Oct 2019 9:30 AM GMT (Updated: 16 Oct 2019 9:33 AM GMT)

ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகளில் மிகவும் பிரபலமான மாடல் வென்யூ. காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலாக வந்துள்ள இந்த மாடல் இப்போது இரட்டை வண்ணத்தில் வெளிவந்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகளில் மிகவும் பிரபலமான மாடல் வென்யூ. காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலாக வந்துள்ள இந்த மாடல் இப்போது இரட்டை வண்ணத்தில் வெளிவந்துள்ளது. இதன் உத்தேச விலை சுமார் ரூ. 6.5 லட்சமாக இருப்பதால் பலரும் இதை தேர்வு செய்கின்றனர். இதில் இரட்டை வண்ணத்தில் வந்துள்ள மாடல் எஸ்.எக்ஸ். இது 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டதாக வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.9.69 லட்சம் மற்றும் ரூ.9.93 லட்சமாகும்.

இதில் 90 ஹெச்.பி. திறன் 1.4 லிட்டர் என்ஜின் கொண்ட டீசல் மாடல் மற்றும் 83 ஹெச்.பி. திறன் 1.2 லிட்டர் என்ஜின் கொண்ட பெட்ரோல் மாடல் ஆகியன மற்றும் 120 ஹெச்.பி. திறன், 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு மாடல்கள் இரட்டை வண்ணத்தில் வந்துள்ளன. இதில் 1.2 பெட்ரோல் மாடல் கார் 5 கியர்களைக் கொண்டதாகவும், 1.4 லிட்டர் என்ஜின் கொண்ட டீசல் மாடல் 6 கியர்களுடனும் வந்துள்ளது. இதில் டர்போ பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் மாடல் 7 கியர்களுடன் ஆட்டோமேடிக் வசதியோடு வந்துள்ளது.

இரட்டை வண்ணத்தில் அழகுற வந்துள்ள இந்த மாடல் கார்களின் விலை முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ.15 ஆயிரம் அதிகமாகும். பெட்ரோல் மாடல் எம்.டி. எஸ்.எக்ஸ். விலை சுமார் ரூ.10.75 லட்சமாகும். பெட்ரோல் மாடலில் ஆட்டோமேடிக் கியர் வசதிகொண்ட காரின் விலை சுமார் ரூ.11.25 லட்சமாகும். இதில் 1.4 லிட்டர் என்ஜின் கொண்ட ஆட்டோமேடிக் கியர் வசதியுள்ள டீசல் மாடல் விலை சுமார் ரூ.10.99 லட்சமாகும்.

ஏற்கனவே டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் கார்கள் இரட்டை வண்ணத்தில் வந்துள்ளன. அதற்குப் போட்டியாக இந்தக் கார் இருக்கும் என்று தெரிகிறது.

ஹூண்டாய் எலென்ட்ரா

கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஆலை அமைத்து செயல்பட்டு வரும் இந்நிறுவன தயாரிப்புகள் மிகுந்த வரவேற்பு பெற்றவை. புதிய மாடல் அறிமுகம் செய்வதோடு, ஏற்கனவே பிரபலமான மாடல்களில் மேம்பட்ட ரகங்களையும் இந்நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் இந்நிறுவனத்தின் பிரீமியம் செடான் மாடலான எலென்ட்ராவில் மேம்பட்ட ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் நான்கு வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளன. எலென்ட்ரா எஸ் விலை சுமார் ரூ.15.89 லட்சம், எலென்ட்ரா எஸ்.எக்ஸ். விலை சுமார் ரூ.18.49 லட்சம், எலென்ட்ரா எஸ்.எக்ஸ். ஏடி. விலை சுமார் ரூ. 19.49 லட்சம், எஸ்.எக்ஸ்.ஐ.ஓ. ஏ.டி. விலை சுமார் ரூ.20.39 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

முந்தைய மாடல் 128 ஹெச்.பி. திறன் கொண்டது. டீசலில் ஓடக் கூடியது. இதை முற்றிலும் மாற்றி 152 ஹெச்.பி. திறன் மற்றும் 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையுடன் கூடிய 2 லிட்டர் என்ஜின் அதுவும் பெட்ரோலில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட மாடல் வந்துள்ளது. இதில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் மற்றும் ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டது. இந்த என்ஜின் பி.எஸ்.6 புகை விதிக்கேற்ப வடிவமைக்கப்பட்டது. ஏ.பி.எஸ். வசதி கொண்ட இந்த மாடல் ஒரு லிட்டருக்கு சோதனை ஓட்டத்தில் 14.6 கி.மீ. தூரம் ஓடியது.

மேம்படுத்தப்பட்ட இந்த மாடலில் பானெட், கிரில் மற்றும் முகப்பு விளக்கிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய வடிவிலான அலாய் சக்கரங்கள் இந்த காருக்கு கம்பீரமான அழகிய தோற்றத்தை அளிக்கிறது. உள்புறத்தில் இதில் 8 அங்குல இன்போடெயின்மென்ட் திரை உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டது.

Next Story