வானவில்: ஜியோமியின் தலை மசாஜர் சாதனம்


வானவில்: ஜியோமியின் தலை மசாஜர் சாதனம்
x
தினத்தந்தி 16 Oct 2019 10:32 AM GMT (Updated: 16 Oct 2019 10:32 AM GMT)

சீனாவின் ஜியோமி நிறுவனம் மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய அத்தியாவசியமான பொருட்களை தயாரித்து அறிமுகம் செய்து வருகிறது.

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் சீனாவின் ஜியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன், டி.வி., தண்ணீர் சுத்திகரிப்பான், வாக்குவம் கிளனர் என அடுத்தடுத்து மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய அத்தியாவசியமான பொருட்களை தயாரித்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது புதிதாக அறிமுகமாகியுள்ளது தலை மசாஜர்.

இந்த மசாஜரில் நான்கு ரப்பர் முனைகள் உள்ளன. இதனுள் 28 சிறிய பந்து முனைகள் உள்ளன. மொத்தம் 84 உருளைகள் மனித மண்டையின் மேல் பகுதியை (ஸ்கால்ப்) தொட்டு ஒத்தடம் தருவதைப் போல மசாஜ் செய்யும். மிகக் குறைவான நேரத்தில் தலையை இதன் உதவியில் மசாஜ் செய்து புத்துணர்ச்சி பெறலாம்.

இதில் நான்கு விதமான இயக்க நிலைகள் உள்ளன. இதில் நீர் புகா தன்மை உள்ளதால் குளித்த பிறகு தலையில் ஈரமிருந்தாலும் அது இக்கருவியைப் பாதிக்காது. மிகுந்த நெகிழ்வுத் தன்மையோடு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்த பிறகு பயன்படுத்தலாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நிமிடம் வரை மசாஜ் செய்து கொள்ள முடியும். 10 நிமிடத்துக்கு ஒரு முறை இந்த மசாஜர் தானாகவே அணைந்து விடும்.

இதன் மேல் பகுதியில் எல்.இ.டி. திரை உள்ளது. அதில் மசாஜுக்கென முனைகள் உருளும் வேகம் தெரியும். இதனடிப்படையில் இதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் விலை சுமார் ரூ.1,950.

Next Story