அ.தி.மு.க- உதயம்: மலரும் நினைவுகள்


எம்.ஜி.ஆர்;   கே. மகாலிங்கம், எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர்
x
எம்.ஜி.ஆர்; கே. மகாலிங்கம், எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர்
தினத்தந்தி 17 Oct 2019 4:42 AM GMT (Updated: 17 Oct 2019 4:42 AM GMT)

இன்று(அக்டோபர்17-ந்தேதி)அதி.மு.க- உதயமான நாள்.

அண்ணா தி.மு.க. தொடங்கப்பட்டு 47 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கமானது மிகுந்த பலத்துடன் யாராலும் அசைக்க முடியாத ஒரு மாபெரும் இயக்கமாக புரட்சித்தலைவரின் எண்ணப்படி நடைபெற்று வருகிறது. இந்த இயக்கம் உருவான விதம் பற்றி இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி ராமவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் காலை 6 மணிக்கெல்லாம் குளித்து விட்டு தனது ஒப்பனை அறைக்கு வந்து விட்டார். நேற்று இன்று நாளை படப்பிடிப்புக்காக மறைந்த ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரம் மற்றும் உடை அலங்கார நிபுணர்களும் வந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்திருந்த பார்வையாளர்களை சந்தித்து உரையாடினார். பின்னர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு படப்பிடிப்பு நடக்கவிருந்த சத்யா ஸ்டூடியோவிற்கு காரில் புறப்பட்டார். மதியம் 1 மணியளவில் தொலைபேசி மணி ஒலித்தது. நான் எடுத்துப் பேசினேன். எதிர்முனையில் ஒரு நிருபர் பேசினார். அவர் படப்படப்புடன் “சின்னவர்(எம்.ஜி.ஆர்.) இருக்கிறாரா?” என்று கேட்டார். நான் அவரிடம் படப்பிடிப்பிற்காக சத்யா ஸ்டூடியோவில் இருப்பதாக கூறினேன். அவரிடம் ஒரு தகவலை தெரிவித்து அதற்கான பதிலை பெறவேண்டும் என்று கூறினார்.

“என்ன விஷயம்?” என்று நான் கேட்டதற்கு, எம்.ஜி.ஆர்., தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார் என்றும், அதற்கு அவருடைய பதில் என்ன என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றார். உடனடியாக நான் சத்யா ஸ்டூடியோவிலிருந்த அவருடைய தனி தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டேன். மறுமுனையில் புரட்சித்தலைவர் “என்னப்பா விஷயம்?” என்று கேட்டார். நான் நிருபர் கூறிய செய்தியை அவரிடம் தெரிவித்தேன். உடனே அவர் வாய் விட்டு சிரித்தார். உடனே, “வேறு என்ன விஷயம்?” என்று கேட்டார். உங்களிடம் இருந்து இதற்கான பதிலை பெற்று அவருக்கு தகவல் தரச் சொன்னார். உடனே அவர் “நான் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லுமாறு கூறினார். இதை நான் நிருபரிடம் தெரிவித்து, அதுவும் மறுநாள் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது.

அடுத்த 1 மணி நேரத்தில் தன்னிடம் பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகளை விலக்கிக் கொள்ளுமாறு அறிவித்தார். சிறு சேமிப்புத் துறை பதவியையும் உடனடியாக ராஜினாமா செய்து கடிதத்தை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார். தோட்டத்தில் இருக்கும் காவலர்களை உடனடியாக அனுப்புமாறு கூறினார்.

அன்று படப்பிடிப்பு முடிந்து தோட்டத்திற்கு வர நள்ளிரவு 1 மணி வரை ஆகிவிட்டது. அன்று முழுவதும் தலைவருக்கு 500-க்கும் மேற்பட்ட ஆதரவு தந்திகள், தொலைபேசி வாயிலாக ஆதரவு தெரிவித்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. மறுநாள் பொழுது விடிந்தது. தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

காவலாளி கிருஷ்ணன் வந்து என்னிடம், “தலைவரை சந்திக்க ஐந்து மூதாட்டிகள் வாசலில் இருப்பதாக” கூறினார். அவர்கள் ஆலந்தூர் தொகுதியை சேர்ந்தவர்கள். மார்கெட்டில் மீன் வியாபாரம், காய்கறி வியாபாரம் செய்கிறவர்கள். அதிகாலையிலேயே தோட்டத்திற்கு வந்து வாசலில் நின்று சத்தம் போட்டு அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் விசாரித்த போது தலைவரைப் பார்த்து விட்டுத்தான் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். நான் அவர்களை சமாதானம் செய்ய முயன்றேன் முடியவில்லை.

நான் தலைவரிடம் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. ஜானகி அம்மையாரிடம் விஷயத்தைக் கூறினேன். அவரோ தலைவர் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பதாகவும் எழுப்ப வேண்டாமென்றும் கூறி விட்டார்.

காலை 9 மணி வரையில் தலைவரிடமிருந்து எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் ஜானகி அம்மையாரிடம் பேசினேன். அவர் “நீ மாடிக்குப் போய் எழுப்பிப் பார்” என்றார்கள். “எழுந்து விட்டால் விஷயத்தைக் கூறு” என்றார்கள்.

நானும் மாடியில் இருக்கும் அவரது படுக்கையறைக்குப் சென்று அவருடைய காலை மெதுவாக தொட்டு மெல்லியக் குரலில் தலைவரை எழுப்பினேன். எழுந்து கொண்டார் ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார். நான் மூதாட்டிகள் அவரைக் காண வேண்டும் என்று வந்திருக்கிறார்கள் என்று சொன்னேன். ‘அவர்களை நாளைக்கு வரச் சொல்’ என்றார்.

நான் அந்த மூதாட்டிகளிடம் சென்று ‘தலைவர் உங்களை நாளைக்கு வரச் சொல்லி விட்டார்’ என்றேன். அவர்களோ என் பேச்சைக் காதில் வாங்காமல் தலைவரைப் பார்த்துப் பேசி விட்டுத்தான் இந்த இடத்தை விட்டே நாங்கள் போவோம் என்று கூறி தர்ணா செய்வது போல் வாசலில் அமர்ந்து விட்டனர். என்ன செய்வது எனத் தெரியாமல் நான் குழம்பிப் போனேன்.

நான் மீண்டும் 9.45 மணிக்கு தலைவரைக் காண மாடிக்குச் சென்றேன். விஷயத்தைக் கூறினேன். தலைவர் ‘வருகிறேன்’ என்றார். ‘அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ என்று கேட்டார். வெளி கேட் அருகில் அமர்ந்து இருக்கிறார்கள் என்றேன்.

தலைவர் மிகவும் கோபப்பட்டார். ‘அவர்களை உடனே உள்ளே அழைத்து வந்து உட்கார வை. காலை உணவிற்கு ஏற்பாடு செய்’ என்று உத்தரவிட்டார். நானும் அவர் சொன்னபடி ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, மூதாட்டிகளை உள்ளே வரும் படி அழைத்தேன். தலைவர் அதற்குள் கீழே வந்துவிட்டார். ‘எங்கே அவர்கள்?’ என்று கேட்டார். வெளி கேட் வாசலில் இருப்பதாக நான் கூற தலைவர் நேராக வாசலுக்கு வந்துவிட்டார்.

தலைவரைக் கண்ட அடுத்த நிமிடம் அவர்கள், அழுது புலம்பத் தொடங்கி விட்டார்கள். அவர்களிடம் தலைவர் பொறுமையாகப் பேசினார். சமாதானப்படுத்தினார். ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்’ என்றார். அவர்களை சாப்பிட்டுப் போகச் சொல்லி உள்ளே அனுப்பினார். காரில் ஏறி சத்யா ஸ்டூடியோவிற்கு தொண்டர்களை சந்திக்கச் சென்றார்.

எம்.ஜி.ஆருக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகத் தொடங்கியது. பல இடங்களில் தி.மு.க. கொடிகள் இறக்கப்பட்டன. இப்படி இருந்த நிலையில் தி.மு.க.வில் சில முக்கிய பிரமுகர்கள் எம்.ஜி.ஆரை மீண்டும் கழகத்தில் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டார்கள். மறுபுறம் தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்களை தாக்கினர். “ஒரு புறம் சமரச பேச்சு மறுபுறம் அராஜகமா?” என்று எண்ணிய எம்.ஜி.ஆர் இனி சமரச பேச்சுக்கே இடமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

எம்.ஜி.ஆரை தி.மு.க.விலிருந்து நீக்கியது பேரறிஞர் அண்ணாவை நீக்கியதற்கு சமம்” என்று கருத்து தெரிவித்தார் மூதறிஞர் ராஜாஜி.

மூதறிஞர் ராஜாஜியிடமும், தந்தை பெரியாரிடமும் அரசியல் ஆலோசனைகளை பெற்று தனக்காக தொண்டர்கள் பாதிப்பு அடையக் கூடாது, தொண்டர்களின் நலனே தனக்கு முக்கியம் என்பதற்காக 1972 அக்டோபர் 17-ந்தேதியன்று அண்ணா தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர் தொடங்கினார்.

கோவையில் உள்ள ஒரு தொண்டர் அனுப்பிய அண்ணா உருவம் பொறித்த கொடியை கட்சியின் கொடியாக உருவாக்கினார்.

எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து அவர் புதிய இயக்கம் கண்டவரை தன் சுயநலத்திற்காகவும், பதவிக்காகவும் எந்த ஒரு முடிவையும் அவர் எடுக்கவில்லை. தொண்டர்களுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் அவர் அண்ணா தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை தொடங்கினார். அதனால் தான் கழகம் தொடங்கிய அன்று முதல் இன்று வரை வெற்றியை மையமாக கொண்டு இளமை மாறாமல் மேலும் பல வெற்றிகளை நோக்கி பீடுநடை போடுகிறது.

Next Story