வாட்ஸ்-அப், கூகுள் பாதுகாப்பானதா?


வாட்ஸ்-அப், கூகுள் பாதுகாப்பானதா?
x
தினத்தந்தி 20 Oct 2019 5:58 AM GMT (Updated: 20 Oct 2019 5:58 AM GMT)

தற்போது மோசடியான பரிவர்த்தனைகளை பற்றி விசாரணை மேற்கொள்ள அமெரிக்காவுடன் அனுமதி பெற வேண்டிய சூழல் உள்ளது. உங்களின் வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை.

ற்போது மோசடியான பரிவர்த்தனைகளை பற்றி விசாரணை மேற்கொள்ள அமெரிக்காவுடன் அனுமதி பெற வேண்டிய சூழல் உள்ளது. உங்களின் வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை. தகவல்களை உள்நாட்டிலேயே சேமித்து வைப்பதை கட்டாயமாக்க இந்தியா முன்னெடுத்திருக்கும் நடவடிக்கை களினால் பன்னாட்டு இணைய பெரும் நிறுவனங்களான கூகுள், பேஸ்புக் மற்றும் இ-வணிக பெரு நிறுவனமான அமேசான் போன்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.

பலம் வாய்ந்த அமெரிக்காவின் வெளியுறவுத் துறை மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து இந்தியா முன்னெடுத்துள்ள சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கடும் முயற்சி செய்து வருகின்றன. திறந்த தகவல்கள் முறையை அமல்படுத்த கூறி போராடுகின்றன.

இந்தியா எடுக்க இருக்கும் கொள்கை முடிவுகள் இதர நாடுகள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் அந்நாடுகளும் இந்தியாவை போலவே தகவல்கள் பாதுகாப்பு சட்டங்களை செயல்படுத்த வாய்ப்புள்ளது.

விசா அல்லது மாஸ்டர் கார்டினை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களின் பரிவர்த்தனை பற்றிய தகவல்கள் அமெரிக்காவில் உள்ள சர்வர் ஒன்றில் சேமிக்கப்படுகிறது. அமேசான் மூலம் நீங்கள் எதையாவது வாங்கினால் அந்த பரிவர்த்தனை பற்றிய அனைத்து தகவல்களும் அமெரிக்காவில் உள்ள அதன் சர்வருக்கு செல்கிறது.

கூகுள் மூலம் நீங்கள் எதையாவது தேடினால் அந்த தேடுதல் விவரங்கள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள சர்வரில் சேமிக்கப்படுகிறது. வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்படும் அனைத்து தகவல்களுக்கும் இதே கதி தான் ஏற்படுகிறது.

56.6 கோடி பயனாளர்களை கொண்ட இணைய பயன்பாட்டில் 2-வது இடத்தில் உள்ள இந்தியா ஒரு செழிப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது. தகவல்கள் பாதுகாப்பு சட்டம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது.

தகவல்களை உள்நாட்டில் சேமிப்பதை கட்டாயமாக்கும் கொள்கை இந்திய குடிமகன்களால் உருவாக்கப்படும் அனைத்து முக்கிய தகவல்கள் மற்றும் அந்தரங்க தகவல்களை (கடவுச்சொற்கள், நிதி விவகாரங்கள் பற்றிய தகவல்கள், பாலிய சார்பு, பயோமெட்ரிக் தரவுகள், மதம் அல்லது சாதி பற்றிய தகவல்கள்) இந்திய எல்லைக்குள் சேமித்து வைக்க வலியுறுத்துகிறது.

2018-ன் துவக்கத்தில் உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று தகவல்கள் தான் மிகப்பெரிய சொத்தாக உள்ளது. உலக அளவில் வழிந்தோடும் தகவல்களினால் பெரும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் உருவாகியுள்ளன.

மலை போல் தகவல்கள் குவிந்து வருகின்றன. அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போட்டி போடுகின்றனர். ஏனென்றால் தகவல்களை கட்டுப்படுத்துவரே உலகையும் கட்டுபடுத்துவார் என்று சொல்லப்படுகிறது” என்று கூறினார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், 34 கோடி சந்தாதாரர்களை கொண்ட மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவை நடத்தி வருபவரும், ஆசியாவின் பெரும் செல்வந்தருமான முகேஷ் அம்பானி இந்தியாவில் உருவாகும் தகவல்களை பாதுகாக்க தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார்.

“தகவல்கள் தான் இனி புதிய எண்ணெய் வளம். பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் நம்முடைய தகவல்கள் தளங்களை கட்டுபடுத்த அனுமதிக்கக்கூடாது” என்கிறார் அவர்.

இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சர்வர்களில் தகவல்கள் சேமிக்கப்பட வேண்டும் என்று தகவல்கள் பாதுகாப்பிற்கான கிருஷ்ணா கமிஷனின் அறிக்கை பரிந்துரை செய்கிறது. வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தகவல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மிக முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இந்தியாவிற்குள் மட்டும் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை இந்த கமிஷன் வலியுறுத்துகிறது.



தகவல்களை பாதுகாக்க ஒரு வலிமையான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு சட்ட வரைவு மசோதா 2018-ஐ இந்தியா உருவாக்கியது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கி தகவல்களை உள்நாட்டிலேயே சேமித்து வைக்க விதிகளை உருவாக்கியுள்ளது.

மருத்துவ சேவை துறைக்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தகவல்கள் பாதுகாப்பு சட்ட வரைவு மசோதா, மருத்துவ சேவைகள் பற்றிய தகவல்கள் அனைத்தும் உள்நாட்டு சர்வர்களில் மட்டுமே சேமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி இன்போசிஸ் நிறுவனத்தை துவக்கியவர்களில் ஒருவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான மேகக கணிமை கொள்கைக்கான குழுவும் இந்தியாவில் உருவாகும் தகவல்களை இந்தியாவிலேயே சேமித்து வைக்க போராடுகிறது.

அந்த குழுவின் அறிக்கை இம்மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்கள் பாதுகாப்பு பற்றி இந்தியா முன்னெடுத்துள்ள முயற்சிகளினால் அமெரிக்க பெரு நிறுவனங்களின் ஏகபோகம் முடிவுக்கு வரும்.

கூகுள், பேஸ்புக், வாட்ஸ்-அப், அமேசான், விசா, மாஸ்டர் கார்டு மற்றும் பே-பால் ஆகிய நிறுவனங்கள் தகவல்களை உள்நாட்டில் சேமிக்க வேண்டிய சட்டங்களில் இருந்து விலக்கு பெற கோரியுள்ளன.

பாதுகாப்பு பற்றிய வாதம் ஆதாரம் இல்லாதது. 2018-ன் முதல் ஆறு மாதங்களில் மட்டும் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளினால் 450 கோடி தரவுகள் அம்பலப்படுத்தப்பட்டன. 2019-ல் 77.4 கோடி மின்மடல் முகவரிகள் சம்பந்தப்பட்ட 270 கோடி அடையாளங்கள் பற்றிய தரவுகளும், 2.1 கோடி கடவுச்சொற்களும் இணையத்தின் மூலம் விற்பனைக்காக முன்வைக்கப்பட்டன.

இந்த இணையதள பெரு நிறுவனங்கள் நம்முடைய தகவல்களை பாதுகாக்க முடியாது என்பது இவற்றில் இருந்து திருடப்படும் தகவல்கள் பற்றிய செய்திகளில் இருந்து தெளிவாகிறது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நடந்த தேர்தல்களின் முடிவுகளை பாதிக்கும் வகையில் தமது பயனாளர்கள் பற்றிய தகவல்களை பேஸ்புக் நிறுவனம், கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்திற்கு அளித்த விவகாரம் இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்.

சீனாவில் ‘தேசிய பாதுகாப்பு’ என்ற பெயரில் பன்னாட்டு இணையதள பெரும் நிறுவனங்கள் இயங்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கூகுளாக பைடுவும், அமேசானுக்கு இணையாக அலிபாபா நிறுவனமும் உள்ளன. வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் தடை செய்யப்பட்டு அவற்றிற்கு பதிலாக ‘வீச்சேட்’ உள்ளது.

இணையதள பெரு நிறுவனங்கள் தகவல்களை உள்நாட்டில் சேமிப்பதை ஏன் எதிர்க்கின்றன?

2019-ல் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 62.7 கோடியை எட்டும். இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 21.8 கோடி பேஸ்புக் பயனாளிகளும், 40 கோடி வாட்ஸ்-அப் பயனாளிகளும் உள்ளனர்.

“இந்த நிறுவனங்களுக்கு இந்திய சந்தை ஒரு பெரும் பணம் காய்ச்சி மரமாக இருக்கும்” என்று ஐ.எம்.ஆர்.பி என்ற சந்தை ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

“100 சதவீத திறந்த தகவல் கொள்கை இந்தியாவில் நடைமுறையில் சாத்தியமில்லை. இந்தியாவில் தகவல் உள்கட்டுமானத்தை கட்டமைக்க, தகவல்களை உள்ளூர்வயப்படுத்துதலை ஓரளவு முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் நம்முடைய டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்” என்று சி.ஏ.ஆர்.இ ரேட்டிங்க்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளரான பாக்யஸ்ரீ பட்டி கூறுகிறார்.

தம் குடிமக்களின் அந்தரங்கள் தகவல்களை பாதுகாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அரசுகள், தகவல்கள் வழிந்தோட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யும் என்று சமீபத்தில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு 2019-ன் டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிய அறிக்கை கூறுகிறது.

2013-ல் 900 கோடி சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருந்த பொருட்களின் இணையம், வேகம் பெற்று வருவதாக ஹெச்.பி. நிறுவன ஆய்வு கூறுகிறது.

2025-ல் இது ஒரு லட்சம் கோடி சாதனங்களை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரம் அல்லது தகவல்களின் கட்டற்ற வழிந்தோட்டம் என்ற பெயரில் ஒரு சில ஏகாதிபத்தியவாதிகளினால் தகவல்கள் ஏகபோகமாக்கப்பட்டால் அது ஒரு புதிய வகை காலனியாதிக்கத்திற்கு அதாவது தகவல்களின் காலனியாதிக்கத்திற்கு இட்டுச்செல்ல வாய்ப்புள்ளது.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தகவல் பாதுகாப்பு மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.

Next Story