பள்ளியை பூஞ்சோலையாக்கிய ‘பசுமை நாயகி’


பள்ளியை பூஞ்சோலையாக்கிய ‘பசுமை நாயகி’
x
தினத்தந்தி 20 Oct 2019 7:07 AM GMT (Updated: 20 Oct 2019 7:07 AM GMT)

கிராமப்புறங்களில் அரசு பள்ளி என்றால் பல்வேறு குறைபாடுகள்தான் பலருடைய மனக்கண்களில் நிழலாடும்.

கிராமப்புறங்களில் அரசு பள்ளி என்றால் பல்வேறு குறைபாடுகள்தான் பலருடைய மனக்கண்களில் நிழலாடும். இந்த அரசு பள்ளி அப்படி அல்ல, அழகிய நந்தவனத்துக்குள், அழகிய கட்டமைப்புகள் சூழ பசுமை மிடுக்கோடு வரவேற்கிறது. நேர்த்தியான வகுப்பறைகள், விசாலமான வளாகம், சுகாதாரமான கழிவறை, தூய்மையான குடிநீர் தொட்டி என்று ‘குறை ஒன்றும் இல்லை கண்ணா’ என்னும் அளவிற்கு பசுமை கட்டமைப்புகளோடு காட்சி யளிக்கிறது. வாசல் பகுதியை கடந்து உள்ளே சென்றால் இது பள்ளிக்கூடமா? விவசாய பண்ணை நிலமா? என்று எண்ணும் வகையில் விளைநிலங்கள் பள்ளியை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. அதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விவசாய பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

இருப்பினும் கல்வியிலும், விளையாட்டு துறைகளிலும் இந்த பள்ளி மாணவிகள் சாதனை படைக்கின்றனர். இது எப்படி சாத்தியமாகிறது? இதற்கு காரணம் யார்? என்று கேட்டால் பள்ளியின் தலைமை ஆசிரியையை கைகாட்டுகிறார்கள். அந்த பசுமை நாயகியின் பெயர் ஷோபா. குளு, குளுவென இருக்கும் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஓடக்காடு அரசு நடுநிலைப்பள்ளியைத்தான் அனைத்து தரப்பினரும் பாராட்டும் அளவிற்கு உயர்த்தி காட்டி உள்ளார்.

ஆசிரியை பணி மீது இவர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும், முன்மாதிரி பள்ளியாக மாற்றுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளும் இவருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை பெற்றுக்கொடுத்திருக்கிறது. பள்ளிக்கும் பல விருதுகள் வழங்கப்பட்டு, பாராட்டுகள் குவிகின்றன. அவரது அறையை விருதுகளும், கோப்பைகளும்தான் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. மாணவர் சேர்க்கை குறைந்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட அரசு பள்ளிக்கு புத்துயிர் ஊட்டியிருக்கும் பூரிப்பு ஷோபாவிடம் வெளிப்பட்டது. தனது ஆசிரியர் பணி அனுபவங்களையும், இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுப்பதற்கான காரணங்களையும், பள்ளி கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மேற்கொண்டுவரும் செயல்பாடுகளையும் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

மூடப்படும் நிலையில் இருந்த அரசு பள்ளிக்கு புத்துயிர் ஊட்டியது எப்படி?

என்னதான் அரசு பள்ளி ஆசிரியர்கள் முழுமூச்சாக பாடம் நடத்தினாலும், பல பள்ளி களில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டுதான் வருகிறது. இதனால் மாணவர் சேர்க்கை பற்றிய பிரசாரமும், களப்பணியும் தீவிரமாக மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்றாலும், இதற்கான களப்பணியில் ஆசிரியர்கள் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டாக வேண்டிய காலகட்டமாக உள்ளது. கற்றல் திறன், பயிற்சி திறன் அரசு பள்ளிகளில் குறையவில்லை. ஆனால் அதற்கான விளம்பர உத்திகள் இல்லை. மேலும் ஆங்கில மோகம் அதிகளவில் உள்ளதால் அரசு பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியை போன்று ஆங்கில வழிக் கல்வியையும் கற்றுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதில் பெற்றோர்கள்தான் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டியிருக்கிறது.

முன்பு இந்த பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை நிரம்பி வழிந்தது. ஆனால் 2015-16-ம் ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. படிப்படியாக 18 பேராக குறைந்து விட்டனர். அதிலும் 10 பேர்தான் பள்ளிக்கு தொடர்ந்து வரும் நிலை இருந்தது. அதனால் பள்ளிக்கூடம் மூடப்படும் அபாயம் உண்டானது. இங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு சென்று விட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. ஆனால் இந்த பள்ளியை எப்படியாகிலும் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணம், கல்வி அதிகாரிகளின் மனதை விட்டு நீங்கவில்லை. அதற்கான செயல் திட்டங்களை தீட்டிய நிலையில்தான் என்னை இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக நியமித்தனர். ஏற்கனவே நான் பணியாற்றிய அத்திக்குன்னு அரசு பள்ளியில் எனது கல்வி சேவைக்காக நல்லாசிரியர் விருதை பெற்றேன். அந்த விருது எனது திறமைக்கான அடையாளம் அல்ல. பல திறமைசாலியான மாணவ-மாணவிகளை உருவாக்கி தருவதற்கான வாய்ப்பாகவே கருதுகிறேன். வெறிச்சோடிய நிலையில் கிடந்த இந்த பள்ளியை வெற்றிப்பள்ளியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் களப்பணியில் ஈடுபட்டேன். சக ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்கள்.

மாணவர் சேர்க்கை அதிகரிக்க நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

4 ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்களில் விடுமுறையை மறந்து நானும், சக ஆசிரியைகளும் பணியாற்றினோம். இந்த பள்ளியில் படித்துவிட்டு இடையில் நின்ற மாணவ-மாணவி களின் வீடுகளுக்கு தினசரி சென்று அவர்களின் பெற்றோரை சந்தித்து பேசினோம். அப்போது இந்த பள்ளியில் படித்தவர்களை அவர்களது பெற்றோர் ஆங்கில மோகத்தில் பள்ளிக்கூடத்தை மாற்றியது தெரியவந்தது. அவர்களிடம் ‘தரமான கல்வியை இதே பள்ளியில் இலவசமாக தருகிறோம். இதனை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள். அதற்கு நாங்கள் முழு உத்தரவாதம். நீங்கள் மீண்டும் உங்கள் குழந்தைகளை இதே பள்ளியில் சேர்த்து விடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டோம். அதைதொடர்ந்து, இங்கிருந்து சென்ற மாணவ-மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக சேரத்தொடங்கினார்கள். ஒரே ஆண்டில் மீண்டும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளையும் ஆரம்பித்தோம். இதற்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூடுதல் ஆசிரியர்களை நியமித்தோம். இப்போது இங்கு படிக்கும் 150 மாணவ-மாணவிகளில் 145 பேருக்கு ஆங்கில வழி கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கு தனித்தனியாக வகுப்பறைகள் இல்லை. இருவழி கல்வி பயில்பவர்களும் ஒரே வகுப்பறையில் தான் அமர்ந்து படிக்கின்றனர். ஒரு தனியார் நிறுவனம், பால் பொருட்களை இலவசமாக வழங்குகிறது. அது மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவிகரமாக உள்ளது.

பள்ளிக்கூடத்தை பூஞ்சோலையாக மாற்றியது எப்படி?

ஒரு பள்ளியில் கற்றல் இனிதாக இருப்பது போன்று, அதன் சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருந்தால்தான் அந்த பள்ளிக்கூடம் முழு தகுதியை பெறுகிறது. அத்துடன் மாணவ-மாணவிகளின் ஆரோக்கியமான வாழ்வியல்தான், சிந்திக்கும் திறனையும் நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது. அரசு பள்ளி என்றால் அங்கு எப்படி சுகாதாரம் இருக்கும்? என்கிற கேள்வி பலருக்கு இன்றும் உள்ளது. இதனை மாற்றிக்காட்டி சுற்றுப்புற சூழலை மேம்படுத்த முடிவு செய்தோம். தூய்மை பள்ளியாக மாற்ற ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் கற்றுக்கொடுத்தோம். பள்ளியில் கடைப்பிடிக்கும் சுகாதாரம் தான், குடும்ப, சமூக பொறுப்புகளுக்குள் நுழையும்போது சமூக மாற்றத்தைஉருவாக்கும் விதையாக அமையும் என்று அதற்கான பயிற்சிகளை அளிக்கிறோம். வகுப்பறையிலும், பள்ளி வளாகத்திலும் குப்பைகள் கிடந்தால் அவை மக்கும் குப்பையா? மக்காத குப்பையா? என்று பிரித்தெடுத்து குப்பை தொட்டியில் போடுகிறார்கள். மக்கும் குப்பையை விவசாய தோட்டத்துக்கு உரமாக பயன்படுத்துகிறோம். இதனால் சுகாதாரம், தூய்மை பணியில் எங்கள் பள்ளி மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை பாராட்டி தமிழக அரசு விருது வழங்கி உள்ளது.

மாணவ-மாணவிகளின் பங்களிப்பு எந்தவிதத்தில் இருக்கிறது?

மாணவ-மாணவிகளின் துணையோடு பள்ளி வளாகத்தில் மூலிகை தோட்டமும் அமைத்துள்ளோம். அழிந்து வரும் மூலிகைகளை மாணவ-மாணவிகள் கண்டுபிடிக்க செய்து, அவற்றை பாதுகாக்கும் உணர்வையும் ஊட்டி உள்ளோம். ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு மூலிகை செடியை பராமரிக்கும் பொறுப்பை கொடுத்திருக்கிறோம். அதனை அவர்கள் அக்கறையோடு பராமரிக்கிறார்கள். அதன் மூலம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த அற்புத மூலிகைகளை அழியாமல் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நமது பாரம்பரிய இயற்கை விவசாயமும் அழிந்து வருகிறது. இதனால் பல நோய்கள் வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளால் பயிர்களை பாதுகாக்க வேண்டிய நுண்ணுயிர்களும் அழிகின்றன. நமக்கு சத்தான உணவு தானியங்கள் கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் 1 ஏக்கர் விவசாய நிலத்தை தேர்வு செய்து, அதில் விவசாய பணிகளை மேற்கொள்கிறோம். இந்த பணிகளை மாணவ-மாணவிகள்தான் முன்னெடுத்து செல்கிறார்கள். இங்கு வளர்க்கப்படும் மூலிகை, மலர் தோட்டங்கள், காய்கறி தோட்டங்களை தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து பாராட்டினார்கள். அந்தந்த பருவ காலத்துக்கு ஏற்ப காய்கறி விதைகளை தேர்வு செய்து அதனை நிலத்தில் விளைவிக்கிறோம். அவை வளர்ந்ததும், களைகளை எடுப்பது, அறுவடை செய்வது போன்ற பணிகளில் தோட்டப்பணியாளர்கள் ஈடுபட்டாலும், அவர்களுடன் மாணவர்களும் இணைந்து ஆர்வமுடன் செயல்படுகிறார்கள்.

பூண்டு, கேரட், முட்டைகோஸ், புரோக்கோலி, பீன்ஸ், காலிபிளவர் போன்றவற்றை விளைவிக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். எங்களது இயற்கை விவசாய நடைமுறையை கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் கொண்டு செல்கிறோம். அறுவடை செய்யும் காய்கறிகளை பள்ளியின் சத்துணவு சமையலுக்கு கொடுத்து விடுவோம். இதனால் பள்ளியில் சத்துணவுக்கான காய்கறிகளை வெளியில் இருந்து வாங்குவதை குறைத்து உள்ளோம். சத்து நிறைந்த காய்கறி சாதமாக மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கிறோம். இயற்கை உரம், மண்புழு உரங்களை நாங்களே தயாரிக்கிறோம். அதை பாராட்டி ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சி நிறைவு விழாவில், தமிழக கவர்னர் எங்கள் பள்ளிக்கு ‘பெஸ்ட் கார்டனிங் விருது’ வழங்கி கவுரவித்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் தூய்மை பள்ளிக்கான விருதும் கிடைத்தது.

ஆங்கில வழிக்கல்வியினால், தமிழ் வழிக்கல்வி பாதிக்குமா?

நிச்சயம் பாதிக்காது. தேவை இருப்பதால்தான், ஆங்கில வழி கல்வியை புகுத்தியிருக்கிறோம். ஆங்கிலம் தேவையில்லாத பட்சத்தில், தமிழ் வழி கல்வியே போதுமானதாக இருக்கும். இலக்கை எட்டிப்பிடிக்க இருவழி பாதை அமைத்து கொடுக்கிறோமே தவிர, ஒரு வழியை அடைத்துவிட்டு, மறுவழியை திறந்துவிடவில்லை. நாங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு வழிகளில் பயணிக்க, மாணவர்களை பழக்கப்படுத்துகிறோம். அதில் அவர்களுக்கு எது சிறந்த வழியோ, அதில் பயணிக்கட்டும். வெற்றி இலக்கை எட்டட்டும்.

இன்றைய பெற்றோர்கள் ஆங்கிலத்தை மட்டுமல்ல, பல்வேறு வசதிகளை பள்ளிகளில் எதிர்பார்க்கிறார்கள். அதை சரிவர ஏற்படுத்தி கொடுப்பது, எங்களது கடமையே. அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆங்கில கல்வியோடு கணினி, இசை, யோகா, கராத்தே போன்ற பயிற்சி வகுப்புகளையும் கொண்டுவந்திருக்கிறோம். இதன் மூலம் மாணவ-மாணவிகள் விளையாட்டு, கலைத்துறையில் திறமைகளை மேம்படுத்தி வருகின்றனர். கராத்தே போட்டிகளில் தேசிய அளவில் விருதுகள் பெற்றுள்ளனர். அதனால் பெற்றோர் மனநிலையில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்.

Next Story