மராட்டியத்தில் மீண்டும் தாமரை மலருமா?


மராட்டியத்தில் மீண்டும் தாமரை மலருமா?
x
தினத்தந்தி 20 Oct 2019 7:51 AM GMT (Updated: 20 Oct 2019 7:51 AM GMT)

288 தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

ராட்டியம், அரியானா மாநிலங்கள் நாளை (திங்கட்கிழமை) சட்டசபை தேர்தலை சந்திக்கின்றன.

288 தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கூட்டணி ஆட்சி என்றாலும் இரு கட்சிகளுக்கும் இடையே அவ்வப்போது முட்டல்கள் மோதல்கள் இல்லாமல் இல்லை.

90 தொகுதிகளை கொண்ட அரியானாவில் பாரதீய ஜனதா தனித்து ஆட்சி நடத்துகிறது.

இந்த இரு மாநில தேர்தல் தேசிய அளவில் உற்றுநோக்கப்படுகிறது. இதற்கு காரணங்கள் உண்டு. நாடாளுமன்ற தேர்தலில் பிரமாண்ட வெற்றி வாகை சூடிய கையோடு முதன் முறையாக இரு மாநிலங்களிலும் பா.ஜனதா தேர்தலை சந்திக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி இந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்குமா? அல்லது நாட்டின் பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பு பிரச்சினை, சம்பந்தப்பட்ட மாநில பிரச்சினைகளால் பா.ஜனதா பின்னடைவை சந்திக்குமா?, நொடிந்து போய் இருக்கும் காங்கிரஸ் எழுச்சி பெறுமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த இரு மாநிலங்களின் தேர்தல் முடிவு விடை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மராட்டியத்தை பொறுத்தவரை மக்கள் தொகையில் உத்தரபிரதேசத்தை அடுத்து 2-வது பெரிய மாநிலம். 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இங்கு மக்கள் தொகை 11 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 333. அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 9.28 சதவீதத்தை மராட்டியம் கொண்டுள்ளது. இங்கு பெருவாரியாக மராத்தா சமூகத்தினர் சுமார் 30 சதவீதம் பேர் உள்ளனர்.

மேலும் மராட்டியம் பூகோள பரப்பளவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை அடுத்து 3-வது பெரிய மாநிலம். இது 3.07 லட்சம் சதுர கி.மீ. (தமிழகம் 1.3 லட்சம் சதுர கி.மீ.) பரப்பளவை கொண்டது.

நாட்டின் நிதி தலைநகராக விளங்கும் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.

பம்பாய் மாகாணத்தில் இருந்து மொழி வாரியாக மராட்டியமும், குஜராத்தும் தனித்தனி மாநிலங்களாக 1960-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. முதலில் மராட்டியம் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாகத்தான் இருந்தது.

1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் பெருமளவில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அதன்பிறகு மராட்டியத்தில் மாநில கட்சியான சிவசேனா மற்றும் தேசிய கட்சியான பா.ஜனதா ஆகியவற்றின் செல்வாக்கு வளர தொடங்கியது. இரு கட்சிகளுக்கும் இடையே ‘இந்துத்துவா’ கொள்கை வலுவான பிணைப்பை ஏற்படுத்தியது.

சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் கருத்துகள் தொண்டர்களை வெகுவாக ஈர்த்தது. மறைந்த தலைவர்களான கோபிநாத் முண்டே, பிரமோத் மகாஜன் போன்றவர்கள் பா.ஜனதாவில் முன்னோடி தலைவர்களாக திகழ்ந்து கட்சியை வளர்த்தனர்.

இதன் பலனாக மராட்டியத்தில் 1995-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கோட்டை தகர்ந்தது. முதன் முறையாக சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு மலர்ந்தது. சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவியும், பா.ஜனதாவுக்கு துணை முதல்-மந்திரி பதவியும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சோனியா காந்தி வெளிநாட்டு பெண் என்ற பிரச்சினையில் காங்கிரசில் இருந்து வெளியேறிய சரத்பவார், 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அதே ஆண்டு மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பகையை மறந்து காங்கிரசுடன் சரத்பவார் கூட்டணி வைத்தார். இது வெற்றி கூட்டணியாக அமைந்து சிவசேனா-பா.ஜனதா கூட்டணி அரசை வீழ்த்தியது. மேலும் 15 ஆண்டு காலம் (2014 வரை) ஆட்சி கட்டிலை தக்க வைத்துக்கொண்டது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எதிர்பாராத அரசியல் திருப்பம் ஏற்பட்டது. 15 ஆண்டு காலம் கூட்டணி அரசை நடத்தி வந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் கூட்டணியை முறித்து கொண்டன. இதேபோல ஏறத்தாழ 25 ஆண்டு காலம் நட்பு பாராட்டி வந்த பா.ஜனதா, சிவசேனா கட்சிகளின் கூட்டணியும் முறிந்தது.

சபாஷ்! சரியான போட்டி என்ற விதத்தில் மேற்கண்ட 4 பெரிய கட்சிகளுமே தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. மொத்தம் உள்ள 288 இடங்களில் பா.ஜனதாவுக்கு 122 இடங்கள் கிடைத்தது. அனைவரது புருவத்தையும் உயர்த்திய பா.ஜனதாவின் இந்த திடீர் எழுச்சிக்கு மோடி அலை முக்கிய காரணமாக அமைந்தது.

சிவசேனாவுக்கு 63, காங்கிரசுக்கு 42, தேசியவாத காங்கிரசுக்கு 41 தொகுதிகள் கிடைத்தன.

எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பா.ஜனதா ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் மாநில தலைவராக இருந்த 44 வயதான தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

மராட்டிய அரசியலில் பா.ஜனதாவுக்கு ‘பெரிய அண்ணன்’ ஆக விளங்கிய சிவசேனா அந்த அந்தஸ்தை இந்த தேர்தல் மூலம் இழக்க நேரிட்டது.

ஆட்சி அமைத்த 2 மாதங்களில் பா.ஜனதாவுடன் மீண்டும் நெருக்கம் காட்டிய சிவசேனா, மந்திரிசபையிலும் தன்னை இணைத்துக்கொண்டது. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அரசு என்ற தேரை பிரச்சினைகள் இன்றி 5 ஆண்டு காலம் ஓட்டி செவ்வனே நிறைவு செய்து விட்டார் தேவேந்திர பட்னாவிஸ்.

இந்த நிலையில் மராட்டிய சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பரபரப்பாக நடந்து வந்த பிரசாரமும் ஓய்ந்து விட்டது. நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவுக்காக வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் பா.ஜனதா 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இதேபோல் எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கட்சிகள் ஏறத்தாழ சரிபாதி தொகுதிகளை பங்கிட்டு கொண்டு தேர்தல் களம் காண்கின்றன.

ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா, சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன.

150 பெண்கள் உள்பட மொத்தம் 3,239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சார்பில் 46 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 8 கோடியே 94 லட்சம். இவர்களில் ஆண்கள் 4 கோடியே 67 லட்சம் பேர். பெண்கள் 4 கோடியே 27 லட்சம் பேர்.

இந்த தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியின் கையே ஓங்கி இருப்பதாக பரவலாக கூறப்படுகிறது. தேவேந்திர பட்னாவிஸ் அரசின் மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லாததும், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாததும் இந்த கூட்டணிக்கு கூடுதல் பலம். பெரும்பான்மை சமுதாயமான மராத்தா மக்களுக்கு இட ஒதுக்கீடு, பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவையும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.

அதேசமயம் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, விவசாயிகள் தற்கொலை, தண்ணீர் பஞ்சம் ஆகிய பிரச்சினைகளில் எதிர்பார்த்த அளவுக்கு தேவேந்திர பட்னாவிசால் சாதிக்க முடியவில்லை. இது கூட்டணி அரசின் தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது.

இதையும் மீறி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி பிரமாண்ட வெற்றியை தனதாக்கி கொண்டது. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 41 தொகுதிகளை (பா.ஜனதா-23, சிவசேனா-18) அள்ளியது. மற்றொரு அணியாக போட்டியிட்ட காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு ஒரே ஒரு இடமும், தேசியவாத காங்கிரசுக்கு 4 இடங்களும் கிடைத்தன.

நாடாளுமன்ற தேர்தலைப்போல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிக்கனியை ருசிக்கலாம் என்ற நம்பிக்கையில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி உற்சாகமாக உள்ளது.

வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், இந்த இரு கட்சிகளும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி விட்டன. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யும், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலுமான உதயன்ராஜே போஸ்லே, அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கணேஷ் நாயக், காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீல், மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஹர்சவர்தன் பாட்டீல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜனதா தனது பக்கம் இழுத்துக்கொண்டது.

இதேபோல் தேசியவாத காங்கிரசில் மாநில தலைவர்களாக பதவி வகித்த பாஸ்கர் ஜாதவ், மதுக்கர் பிச்சாத், மும்பை பிரிவு தலைவராக பதவி வகித்த சச்சின் அஹிர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தலைவர்களை சிவசேனா தன்பங்கிற்கு வசப்படுத்தி கொண்டது.

மேலும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்த விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜனதா முன்வைத்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.

தங்களுக்கு வெற்றி என்பது எளிது, பிரமாண்ட வெற்றி தான் இலக்கு என்ற தெம்புடன் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.

அதேசமயம், இழந்த ஆட்சியை மீட்டெடுக்கும் முனைப்போடு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி களம் இறங்கி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து அசோக்சவான் பதவியை ராஜினாமா செய்ததால், மாநில புதிய காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் தோரட் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அமைந்த பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் ஐதராபாத் எம்.பி. ஒவைசி ஆகியோரின் கூட்டணி, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. ஆனால் இந்த சட்டசபை தேர்தலில் பிரகாஷ் அம்பேத்கர்-ஒவைசி கூட்டணியில் ஏற்பட்ட முறிவு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

மேலும் தலைவர்கள் பலர் ஆளும் கட்சிகளுக்கு தாவி விட்டதால், தேர்தலில் பல புதுமுகங்களுக்கு இந்த கட்சிகள் வாய்ப்பு அளித்து உள்ளன. இந்த புது முகங்கள் வெற்றிக்கனியை பறித்து தருவார்கள் என்ற நம்பிக்கை காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு இருக்கிறது.

மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளால் அதிருப்தியில் இருக்கும் மக்கள் தங்களுக்கு ஆதரவாக திரும்புவார்கள் என்று இந்த கூட்டணி கருதுகிறது.

இந்த தேர்தலில் பல கட்சிகள் களம் கண்டாலும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி மற்றும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இடையேதான் இருமுனை போட்டி நிலவுகிறது.

நாளைய தினம் வாக்காளர்கள் அளிக்கும் தீர்ப்பு 24-ந்தேதி (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது. அப்போது மாமன்னர் வீர சிவாஜியின் கோட்டையாக விளங்கிய மராட்டியத்தில் தாமரை மலர்ந்து பா.ஜனதா கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை மீட்டெடுக்குமா? என்பது தெரியவரும்.

தேர்தலில் போட்டியிடும் பால்தாக்கரேயின் பேரன்

ரசியல் கார்டூனிஸ்டான பால்தாக்கரே மராட்டியத்தில் 1966-ம் ஆண்டு சிவசேனா கட்சியை தொடங்கினார். 1995-ம் ஆண்டு இந்த கட்சி பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்தது.

ஆனால் பால்தாக்கரே முதல்-மந்திரி பதவியை ஏற்கவில்லை. அக்கட்சியை சேர்ந்த மனோகர் ஜோஷி மற்றும் நாராயண் ரானே ஆகியோருக்குத்தான் அந்த பதவியை கொடுத்தார். மேலும் பால்தாக்கரே எந்த ஒரு அரசு பதவியையும் வகிக்கவில்லை. இதுதவிர அவர் வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதே கொள்கையை அவரது மகனும், தற்போதைய சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கடைப்பிடித்து வருகிறார்.

ஆனால் பால்தாக்கரே குடும்ப வரலாற்றில் முதன் முறையாக அவரது பேரனும் உத்தவ் தாக்கரேயின் மகனுமான 29 வயது ஆதித்ய தாக்கரே இந்த சட்டசபை தேர்தலில் மும்பை ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இது சிவசேனா தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தால், ஆதித்ய தாக்கரே துணை முதல்-மந்திரி பதவி அல்லது முக்கிய அரசு பொறுப்பை வகிப்பார் என்று கூறப்படுகிறது. தற்போது ஆதித்ய தாக்கரே சிவசேனாவின் இளைஞர் அணி(யுவசேனா) தலைவராக உள்ளார்.

அரியானாவில் அரியணை யாருக்கு?

ட்டசபை தேர்தலை சந்திக்கும் மற்றொரு மாநிலமான அரியானாவில் 65 வயது மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது காங்கிரசிடம் இருந்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. தற்போதைய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தேர்தல் நேரத்தில் காங்கிரசுக்கு பின்னடைவாக அந்த கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அசோக் தன்வார் கட்சியில் இருந்து விலகினார். ‘காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ. சீட் ரூ.5 கோடிக்கு விற்கப்படுவதாகவும், சீட் வழங்கும் முறையே இப்படி இருக்கும்போது வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்?’ என்று கேள்வி எழுப்பிய அவர் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார். புதிய தலைவராக பொறுப்பேற்ற குமாரி செல்ஜா மற்றும் முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது.

இதுதவிர 2 தடவை முதல்-மந்திரி பதவி வகித்த ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சியில் ஏற்பட்ட குடும்ப அரசியல் மோதல் காரணமாக அந்த கட்சியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜன் நாயக் ஜனதா என்ற புதிய கட்சி உருவானது. இந்த கட்சிகளுடன் சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.

எதிர்க்கட்சிகள் சிதைந்து காணப்படும் நிலையில், 75 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன் பா.ஜனதா அரியானா தேர்தலை சந்திக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளிலும் தோற்றாலும், மாநில பிரச்சினைகள் அடிப்படையில் அரியானாவில் இழந்த ஆட்சியை மீட்டே தீருவோம் என்ற வேகத்தில் காங்கிரஸ் தேர்தல் களத்தில் மல்லுகட்டுகிறது.

மொத்தம் 1,168 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களின் வெற்றி, தோல்வியை 1 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் நாளை (திங்கட்கிழமை) தீர்மானிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை தினமான வருகிற 24-ந் தேதி அரியானாவில் அரியணையில் அமரப்போவது யார்? என்று தெரிந்து விடும்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகள்

ராட்டியத்தில் தமிழர்கள் மும்பையில் அதிக அளவில் வசிக்கிறார்கள். மும்பையில் குறிப்பாக தாராவி, சயான் கோலிவாடா ஆகிய தொகுதிகளில் அதிக தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் சாந்திவிலி, காந்திவிலி, அந்தேரி, மலாடு, செம்பூர், அணுசக்தி நகர், காட்கோபர் கிழக்கு, காட்கோபர் மேற்கு, வில்லேபார்லே ஆகிய தொகுதிகளிலும் தமிழர்களின் வாக்கு வங்கி கணிசமாக உள்ளது.

இதேபோல மும்பையையொட்டி உள்ள தானே, பால்கர், ராய்காட் மற்றும் புனே போன்ற மாவட்டங்களிலும் பரவலாக தமிழர்கள் உள்ளனர். ஆனால் மராட்டிய சட்டசபைக்கு இதுவரை 2 தமிழர்கள் மட்டுமே (சுப்பிரமணியன், கேப்டன் தமிழ்ச்செல்வன்) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இந்த தடவை சயான் கோலிவாடாவில் மீண்டும் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பா.ஜனதா வேட்பாளராகவும், அவரை எதிர்த்து மற்றொரு தமிழரான கணேஷ்குமார் காங்கிரஸ் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

Next Story