நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்


நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்
x

இம்மண்ணுலகின் மூத்த குடி தமிழ்க்குடி என்பதை உறுதி செய்ய தமிழர்களின் கலைவடிவங்களே போதுமானவை.

இது கரகத்தின் கதை

ம்மண்ணுலகின் மூத்த குடி தமிழ்க்குடி என்பதை உறுதி செய்ய தமிழர்களின் கலைவடிவங்களே போதுமானவை. ‘எது என்னை மறக்கச்செய்கிறதோ அதுவே கலையாகிறது’ என்று கூறிய பாவேந்தர் பாரதிதாசன் வாக்கின்படி தமிழர்களின் கலைகள் நமது வாழ்வியலோடு கலந்திருப்பதால் வாழ்வியல் கூறுகளில் இருந்தும் தனித்து நோக்கி வியக்கும் வகையில் அமைந்துள்ளது.

இயற்கையோடு இணைந்திருந்த கலைகள் சமயத்துடனும், பின்னர் சமூகத்துடனும் இணைந்து மாறத் தொடங்கியது. தமிழகத்தை பொறுத்தவரை கலைகளின் வளர்ச்சி நிலையை தொன்மைக்கலை, நாட்டுப்புறக்கலை, செம்மைக்கலை என மூன்று பிரிவாக கொள்ளலாம்.

தொன்மைக்கலையை பழங்குடி மக்களிடையேயும், நாட்டுப்புறக் கலைகளை கிராமப்புற மக்களிடையேயும், செம்மைக்கலையை உயர் வருவாய்ப் பிரிவு மக்களிடையேயும் காணலாம். நாட்டுப்புறக்கலைகளில் முதன்மையாக திகழ்கிறது கரகாட்டம்.

கரகம் என்றால் என்ன?

பித்தளையால் ஆன சிறிய தோண்டி அல்லது சொம்பில் செயற்கை மாலை மற்றும் பல வண்ண பொருட்களால் நன்கு அலங்கரித்து அதை தலையில் வைத்துக்கொண்டு அந்த சொம்பு கீழே விழாதவாறு நையாண்டி மேளத்தின் துணையோடு தாளத்திற்கு ஏற்ப ஆடுவதே கரகாட்டம் எனப்படுகிறது.

கரகம் என்ற சொல் முதலில் நீர் தாங்கும் கமண்டலத்தையும் பின்னர் புனித நீர் தாங்கிய குடம் அல்லது சொம்பை குறிப்பதாகும் என தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

‘நூலே கரகம் முக்கோல் மனையே ஆயுங்காலை அந்தணர்க்குரிய’ என்று தொல்காப்பியத்திலும், ‘உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்று முக்கோலும், நீர்மலி கரகம்போல’ என்று கலித்தொகையிலும் கரகம் பற்றிய பதிவுகள் உள்ளன.

இன்றைய கரகாட்டத்தின் ஆதி வடிவம் குடக்கூத்தாகும். இந்த குடக்கூத்தினை கண்ணனும் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன. கண்ண பிரானின் மகன் பிரத்யுனன் என்பவருக்கு அஜிருத்தன் என்ற புதல்வன் இருந்தான். அவன் சோனித புரம் என்ற நாட்டை ஆட்சி செய்த வாணன் என்ற அசுரனின் மகள் உஷாவை காதலித்தான். இதை யறிந்த அந்த அசுரன் அஜிருத்தனை சிறைப்படுத்தினான். ஆகவே தன் பேரன் அஜிருத்தனை மீட்பதற்காக கண்ணன் குடங்கொண்டு ஆடினான். இதுவே குடக்கூத்தாக மாறியது என்று கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினோறு வகை ஆடலில் குடக்கூத்தும் ஒன்று.

கரகத்தின் வகைகள்:

சக்தி கரகம், ஆட்டக்கரகம் என இருவகை உண்டு. தெய்வ வழிபாட்டுடன் நிகழ்த்தப்படுவது சக்தி கரகம். தொழில் முறை கலைஞர்களால் ஆடப்படுவது ஆட்டக் கரகம். சக்தி கரகத்தை தோண்டி கரகம், பூங்கரகம் என்றும் சில பகுதிகளில் அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் மண் சட்டி வைத்தே இதுபோன்ற கரகம் ஆடப்பட்டு வந்தது. இந்த வகை கரகாட்டத்தில் சொம்பு மீது மல்லிகை உள்ளிட்ட இயற்கை பூக்களால் அலங்கரிக்கப்படும்.

கரக சொம்பின் எடை 500 கிராம் முதல் 650 கிராம் வரை இருக்கும். அந்த சொம்பிற்குள் அரிசி போடப்பட்டு அதன் நடுவில் குச்சி நட்டு காய்ந்த நிலையில் உள்ள தாமரைப்பூ தண்டினால் சுற்றி கட்டி அவற்றின் மேல் பகுதியில் அலங்கார தாள்கள் பொருத்தப்படும். கரக கூடு, கிளி பொம்மையும் வைக்கப்படும். கரக செட்டை தஞ்சாவூர் மற்றும் மதுரை, திருநெல்வேலியில் உள்ள சில குடும்பத்தினர் மட்டுமே பாரம்பரியமாக தயாரித்து வருகிறார்கள். மொத்தத்தில் ஒரு கரகத்தின் எடை சுமார் 3 கிலோ வரை இருக்கும்.

கரகம் அன்றும்.. இன்றும்:

சங்க காலத்தில் ஆண்களால் மட்டுமே கரகம் ஆடப்பட்டு வந்திருக்கிறது. அதுவும் விடிய விடிய ஆடப்படும். காலப்போக்கில் ஆண்கள், பெண் வேடமிட்டு கரகம் ஆடி வந்திருக்கிறார்கள். அதன் பின்னர் தான் பெண்கள் கரகம் தூக்கி ஆடி இருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது.

பெண்கள் தொடக்க காலகட்டத்தில் புடவை கட்டிக்கொண்டுதான் ஆடி இருக்கிறார்கள். கரகாட்டத்தின்போது ஏற்படும் களைப்பை போக்குவதற்காக குறவன் குறத்தி ஆட்டம் என்ற பெயரில் இடையில் நகைச்சுவைக்காக சொருகப்பட்டது. அதுவே ஆட்டத்தின் போக்கை திசை திருப்பிவிட்டது. கரகாட்ட கலைஞர்கள் ஒப்பனை செய்து கொள்வதற்கு தற்போது பல நவீன அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் பழங்காலத்தில் அப்படி அல்ல. கடலில் இருந்து எடுக்கப்படும் சங்குவை சுட்டு அரைத்து அந்த கலவையுடன் குங்குமம் கலந்து முகத்தில் பூசிக்கொண்டனர். வைக்கோலை எரித்து அதன் கருப்பு நிற சாம்பலை குழைத்து கண் புருவம் உள்ளிட்ட பகுதிகளில் பூசி இருக்கிறார்கள்.

கரகாட்டம் காலத்திற்கு ஏற்ப மாறி வந்து, மனித வாழ்க்கையை சுவாரசியப்படுத்தும் கலையாகும். அதனால்தான் தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் வெளிநாடுகளில் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூரில் தமிழர்கள் கரகாட்டத்தை தங்களது விழாக்கள் அனைத்திலும் இடம் பெற செய்கிறார்கள். நமது மரபு, நமது சொத்து என்று முழங்கி வரும் அவர்கள் தங்களது குழந்தைகள் கரக பயிற்சிபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். இந்த கலைக்கு இளையதலைமுறையினரிடம் அதிக வரவேற்பு கிடைக்கிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையில் மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன. கரகாட்டம் மேடையிலும் நடக்கிறது. வீதியிலும் நடக்கிறது. கோவிலிலும் நடக்கிறது. மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் நடந்து, மனதினை கொள்ளைகொள்கிறது.

- கலை வ(ள)ரும்.

தகவல்: இளவழகன், நாட்டுப்புற கலைகள் துறை பகுதி நேர விரிவுரையாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Next Story