புதிய அத்தியாயத்தை நோக்கி பி.சி.சி.ஐ.


புதிய அத்தியாயத்தை நோக்கி பி.சி.சி.ஐ.
x
தினத்தந்தி 21 Oct 2019 4:44 AM GMT (Updated: 21 Oct 2019 4:44 AM GMT)

உலக கிரிக்கெட் அரங்கில் பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தான். உள்நாட்டில் நடக்கும் சர்வதேச போட்டிகளுக்கான டி.வி. ஒளிபரப்பு உரிமம், சீருடை ஸ்பான்சர், டைட்டில் ஸ்பான்சர், ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம், மேலும் சில அதிகாரப்பூர்வ விளம்பர நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது. இது தவிர ஐ.சி.சி. போட்டிகளின் மூலமும் வருவாய் கிடைக்கிறது.

பி.சி.சி.ஐ.க்கு 2017-18-ம் ஆண்டு நிதி ஆண்டில் ரூ.11,916 கோடியாக இருந்த வருவாய் 2018-19-ல் நிதி ஆண்டில் ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் தான் என்னவோ பி.சி.சி.ஐ. பதவிகளுக்கு எப்போதும் போட்டா போட்டி காணப்படுகிறது.

1928-ம் ஆண்டு உருவான பி.சி.சி.ஐ. அமைப்பில் கடந்த 20 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் ஆதிக்கமே கொடிகட்டி பறந்தது.

இந்த நிலையில் இப்போது தான் மிகப்பெரிய மாற்றமாக பி.சி.சி.ஐ. தலைவராக இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த மாற்றத்திற்கான அடித்தளம் அமைத்து தந்தது சுப்ரீம் கோர்ட்டு.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘மேட்ச்பிக்சிங்’ சூதாட்டம் நடந்தது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ‘களை’ எடுக்க ஆரம்பித்தது. புதிய விதிமுறை தொடர்பான உத்தரவை ஏற்க மறுத்த அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடைமுறைகள் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட கோர்ட்டு, விதிமுறைகளை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது. லோதா கமிட்டி பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஏராளமான பரிந்துரைகளை முன்வைத்தது. இவற்றில் பெரும்பாலானவற்றை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

இதன்படி 70 வயதுக்கு மேல் யாரும் இந்திய கிரிக்கெட் வாரியத்திலோ அல்லது மாநில கிரிக்கெட் சங்கத்திலோ அங்கம் வகிக்கக்கூடாது. அமைச்சர்கள், அரசுத்துறை சார்ந்தவர்களுக்கு கிரிக்கெட் வாரியத்தில் இடமில்லை. பி.சி.சி.ஐ-யிலோ அல்லது மாநில சங்கத்திலோ ஒருவர் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவியில் இருந்தால் அதன் பிறகு 3 ஆண்டுகள் கட்டாயம் இடைவெளி விட்டு தான் மீண்டும் பதவிக்கு வர முடியும் இப்படி பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன.

இதனால் கிரிக்கெட் சங்கங்களில் நீண்ட காலம் கோலோச்சிய மூத்த நிர்வாகிகள் ஒதுங்க வேண்டியதாகி விட்டது. இதன் விளைவாகத்தான் இப்போது கிரிக்கெட் தலைமை பதவி யாரும் எதிர்பார்க்காத வண்ணம் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலியை சென்றடைந்துள்ளது. கங்குலியின் வருகை முன்னாள் வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 33 மாதங்களாக பி.சி.சி.ஐ. நிர்வாகத்தை சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான கிரிக்கெட் நிர்வாக கமிட்டி கவனித்து வந்தது. வருகிற 23-ந்தேதி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றதும் அவர்கள் வசம் பொறுப்பு சென்று விடும்.

கிரிக்கெட்டில் ஆக்ரோஷத்துக்கு பெயர் போனவர் சவுரவ் கங்குலி. இவர் கிரிக்கெட் அமைப்பிலும் அத்தகைய பாணியையே கையாளுவார் என்பது நிறைய பேரின் எதிர்பார்ப்பு.

மூத்த வீரர் டோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது சில மாதங்களாக ‘சஸ்பென்ஸ்’ ஆக நீடிக்கிறது. முதல்வேலையாக தேர்வு குழுவினரிடம் பேசி டோனியின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இரட்டை ஆதாய பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும், முதல்தர கிரிக்கெட் வீரர்களின் ஊதிய பிரச்சினையை சரி செய்வதிலும் கவனம் செலுத்தப்போவதாக சொல்லி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடுதலாக உலக போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது. இதனால் தங்களது வருவாய் பாதிக்கும் என்பதால் பி.சி.சி.ஐ. கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் கங்குலி எந்த அளவுக்கு சாதுர்யமாக காய் நகர்த்தப்போகிறார் என்ற ஆவலும் எழுந்துள்ளது.

மொத்தத்தில் தனது நிர்வாக திறன் மூலம் பி.சி.சி.ஐ.-யை செம்மையாக வழிநடத்தினால் அது புதிய அத்தியாயத் துக்கு பிள்ளையார் சுழியாக அமையும். ஏற்கனவே பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பில் இருக்கும் கங்குலி பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை 9 மாதங்கள் மட்டுமே அலங்கரிக்க முடியும்.

-ஜெய்பான்

Next Story