சிறப்புக் கட்டுரைகள்

தன்னிகரில்லாத தமிழ் + "||" + Magnificent tamil

தன்னிகரில்லாத தமிழ்

தன்னிகரில்லாத தமிழ்
‘தமிழ் எங்கள் உயிர் என்பதாலே’ என்னும் முழக்கம் கேட்டு வியப்புறுவார் சாலப் பலர்.மொழி என்பது கருத்துகளைத் தெரிவிக்கப் பயன்படும் ஒரு கருவி. அவ்வளவுதானே! அதற்கு ஏன் வாழ்த்துப் பாடல்? அது இசைக்கப்படும் போது எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் என்ன? அதை ‘உயிர்’ என்று சொல்வதெல்லாம் மிகையாக இல்லையா என்று கேட்போர் பலர் உண்டு.
நாட்டு வாழ்த்துப் பாடலின் நோக்கம் என்னவோ, அதே நோக்கம்தான் தமிழ் வாழ்த்துப் பாடலுக்கும். நாட்டு வாழ்த்துப் பாடலின் நோக்கம் இந்திய மக்களை ஒருமைப் படுத்துவது என்பது போல், தமிழ் வாழ்த்துப் பாடலின் நோக்கம் தமிழினத்தை ஒருமைப் படுத்துவது தான். 

எத்தனையோ ஆயிரம் மொழிகள் பேசப்பட்டாலும், தமிழ் போல் தொன்மையான மொழிகள் சிலவே. கிரேக்கம், லத்தின், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகள் தமிழ் மொழி போல் செம்மொழிகளே. அவற்றில் சீனம் நீங்கலாக, பிற செம்மொழிகளெல்லாம் இறந்து பட்டு விட்டன, பேச்சு வழக்கற்றுப் போய் விட்டன.

வள்ளுவன் இன்றைய இலக்கியக் கூட்டங்களுக்கோ, அரசியல் கூட்டங்களுக்கோ வந்தால், அங்கு பேசப்படுவது என்ன என்று அவனால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். வள்ளுவன் சட்டமன்றத்திற்குப் போனால், அது ஒரு சந்தைக்கடை என்பது புரியும். ஆனால் கி.ராஜநாராயணன் போன்றோரின் கொச்சை எழுத்து வழக்குப் புரியாது, அது சிதைக்கப்பட்ட தமிழ் என்பதால்.

சாசர் இன்று இங்கிலாந்தின் நாடாளுமன்றத்திற்குச் சென்றால், இங்கிலாந்தின் தலைமையமைச்சர் பேசுவது சாசருக்குப் புரியாது. இவ்வளவுக்கும் சாசர் அறுநூறு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்தான். ஆங்கிலமும் மிகவும் பிற்பட்ட காலத்தில் உருவான மொழிதான்.

கன்பூசியசோ, லாசேயோ இன்றையச் சீன அதிபரோடு உரையாட முடியாது. அவர்கள் பேசிய ‘மந்தாரின்’ சீனத்திலிருந்து இன்றைய சீன மொழி வேறுபட்டு விட்டது. இவ்வளவுக்கும் சீனம் மட்டும்தான் தமிழ் போல் வாழும் மொழி.

ஆனால் தொல்காப்பியனுக்கு அவனுக்கு ஆயிரம் ஆண்டு பிந்தைய கம்பனைப் புரிவதற்கும், இரண்டாயிரம் ஆண்டு பிந்தைய அண்ணாவைப் புரிவதற்கும், தமிழ்மொழி பேணி வரும் தொல்காப்பியத்தின் கட்டுப்பாடுதான் காரணம்.

தமிழ் சொல் வளம் மிக்க மொழி. எந்த ஒரு பொருளையும் பொதுச் சொல்லால், மொத்தமாகப் ‘பொத்தாம் பொதுவாக’ குறிப்பிடும் பல மொழிகள் போல் அல்லாமல், துல்லியமாகப் பொருளை உணர்த்த வல்ல ஆற்றல் சான்ற மொழி தமிழ்.

இலை என்பதைச் சமஸ்கிருதத்தில் ‘பத்ரம்’ என்கிறார்கள். ஆங்கிலம் ‘லீப்’ என்கிறது.

அந்த இலையின் பல்வேறு பருவங்களைக் குறிக்க அவர்கள் பல சொற்களைக் கொண்டு கூட்டி, அதை விளக்குகிறார்கள். ஆனால் தமிழில் ‘இலை’ என்பது அதற்கு உரிய சரியான பருவத்தைக் குறிக்கிறது. ஆனால் அதனுடைய தொடக்க நிலையை ‘இலை’ என்று தமிழ் கூறாது. ‘கொழுந்து’ என்ற கூறும். அதன் அடுத்த நிலை ‘தளிர்’. உரிய பருவத்தில் மட்டுமே அது ‘இலை’; முதிர் பருவத்தில் அது ‘பழுப்பு’; இறுதி நிலை ‘சருகு’. ‘இலை’ என்றால் பிறமொழிகளில் எல்லாமே இலைதான். ஆனால் நாம் அகத்தி இலை என்று கூறுவதில்லை. அகத்திக் கீரை என்று கூறுகிறோம். அருகு, கோரை ஆகியவையும் இலை வகைதான். ஆனால் அவற்றை அருகம்புல், கோரைப் புல் என்கிறோம்.

நெல்லும் ஒரு புல்தானே என்பீர்கள்; ஆனால் தமிழ் அவ்வாறு கருதுவதில்லை; அதைத் ‘தாள்’ என்கிறது. ‘தாளடிப் பயிர்’ என்று சொல்வதில்லையா? இவ்வளவு நுட்பமாக ஒவ்வொன்றையும் வகைப்படுத்தும் ஆற்றல் சான்ற மொழி தமிழ் மட்டுமே. உடலின் கால் பகுதியைக் ‘கால்’ என்றான். இடைப் பகுதியை ‘இடை’ என்றும் கூறினான். குளிக்கப் பயன்படுவதைக் ‘குளம்’ என்றான்; உண்ணப் பயன்படுவதை ‘ஊருணி’ என்றான்; ஏர்த் தொழிலுக்குப் பயன்படுவதை ‘ஏரி’ என்றான்.

தமிழ்நாட்டின் நில அமைப்பைத் தெளிவாகத் தெரிந்தவன் தமிழன். வங்கக் கடல் கீழான பகுதி; காவிரி கிழக்கு நோக்கித்தான் ஓடி வருகிறாள்; கீழான நில அமைப்புக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து ‘கீழ் திசை’ என்றும் ‘கிழக்கு’ என்றும் சொன்னான். மேற்குத் தொடர்ச்சி மலையைக் கொண்டுள்ள, மேலான நில அமைப்புள்ள திசையை ‘மேல் திசை’ என்றும் ‘மேற்கு’ என்றும் சொன்னான்.

‘சமைதல்’ என்னும் சொல்லுக்குப் பக்குவப் படுத்தல் என்று பொருள். அரிசி சோறாகச் சமைகிறது; அது உண்ணும் பக்குவத்தை அடைந்து விட்டது என்று பொருள்.

பெண் ‘சமைந்து விட்டாள்’ என்றால், ஆணால் நுகரப் படும் பக்குவத்தை அடைந்து விட்டாள் என்று பொருள். தமிழனாய்ப் பிறந்தும் தமிழின் மாட்சி தெரியாத சில கலப்பட மன்னர்கள், பெண் ‘புஷ்பவதி’ ஆகி விட்டாள் என்று கூறி, அதன் தூய்மைக்குக் கேடு செய்கின்றனர். அது போல் மனிதனைப் பக்குவப் படுத்துவது எதுவோ, சமைப்பது எதுவோ, அதைச் ‘சமயம்’ என்றனர்.

அரேபியாவிலிருந்து வந்த குதிரை அரபுப் பெயரோடுதான் வந்தது. அதைக் கப்பலை விட்டு இறக்கினான் தமிழன். அது குதித்துக் குதித்து ஓடியது; அதைக் ‘குதிரை’ என்றான்; அது பரிந்து (விரைந்து) ஓடியது; அதனால் அதைப் ‘பரி’ என்றும் கூறினான்.

துருக்கியில் இருந்து ஒரு வகைக் கோழி வந்தது. அது நம்முடைய ‘நாட்டுக் கோழி’ போல் அல்லாமல், கழுத்து மிக உயரமாக இருந்தது. வான் அளவுக்கு உயரமான கோழி என்று சொல்லி அதற்கு ‘வான்கோழி’ எனப் பெயரிட்டான்.

‘கான மயிலாடக் கண்டிருந்த ‘வான்கோழி’
தானும் அதுவாகப் பாவித்து’

எனப் பாட்டெழுதிய அவ்வை பதினாறாம் நுற்றாண்டைச் சேர்ந்த பிற்காலத்தவள் என ஆராய்ச்சியாளர்கள் கருதுவதற்குக் காரணம், அவள் வான்கோழியைப் பற்றிப் பாடியிருப்பதுதான். வான்கோழி மிகவும் பிற்காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது.

மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களையும், உபநிடதங்கள் போன்ற மெய்யியல் நூல்களையும், சாகுந்தலம் போன்ற இறவா இலக்கியங்களையும் பெற்றிருக்கும் சாலச் சிறந்த மொழிகளில் ஒன்றுதான் சமஸ்கிருதம். ஆயினும் பேசுவார் அற்றுப் போன காரணத்தால், புதிய சொல்லாக்கங்களுக்கான தேவையைச் சமஸ்கிருதம் இழந்து விட்டது. ஆகவே அது தேக்கத்திற்குள்ளாகி விட்டது.

உலகில் மிகச் சிலவாக உள்ள செம்மொழிகளில் சில மூத்துச் செத்துப் போய் விட்டன. சமஸ்கிருதமும் பல மொழி ஈன்ற மொழிதான். ஆனால் பிறந்த மொழிகள் வாழுகின்றன, பெற்றவள் இறந்து விட்டாள். ஆனால் தமிழோ கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற பல மொழிகளை ஈன்றது. பிறந்த மொழிகளும் வாழ்கின்றன, பெற்றவளும் வாழ்கிறாள்.

அதுவும் இளமை குன்றாமல் வாழ்கிறாள்; இந்த வியப்பை எண்ணிப் பார்க்கையில் ‘தன்னிலை மறந்து விடுகிறேன்; மெய்மறந்து விடுகிறேன்’ என்கிறார் சுந்தரம் பிள்ளை. சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே’ என்பது அவர் நமக்காகப் பாடித் தந்த தமிழ்த் தேசிய கீதம். நாட்டின் தேசிய கீதம் போல், இது தமிழுக்கான தேசிய கீதம். ஆள்வோரும் ஆளப்படுவோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவதற்கு உரியது.

தமிழ் நமக்குத் தாய். அவள் நம் உயிரினும் மேலானவள்.

சீனம் போல் மந்தாரின் சீனத்திலிருந்து விலகி விடாமல், சமஸ்கிருதம், லத்தின், கிரேக்கம் போல் செத்து விடாமல், தொல்காப்பியன் காலத்திலிருந்து தொடர்ச்சி மாறாமல், நிகழ் காலத்தோடு போட்டியிட்டுக் கொண்டு இளமை மாறாமல், வாழும் உலகின் மூத்த மொழியை, நிகரற்ற மொழியை, ‘நீச பாஷை’ என்று சொல்லச் சிலரால் முடிந்ததென்றால் சொன்ன வாயைச் சுடவேண்டாமா?

- பழ.கருப்பையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. தமிழைப்பயன்படுத்துவோம், தலைநிமிர்ந்து வாழ்வோம்...!
இன்று (பிப்ரவரி 21-ந் தேதி) உலக தாய்மொழி தினம். இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பின் பாகிஸ்தானின் அரசு மொழியாக உருது இருந்தது.
3. தமிழ், ஆங்கிலம் தெரியாத நபர் குரூப்-4 தர வரிசையில் இடம் பிடித்த அவலம்
குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட தேர்வு மையங்களில் மோசடி நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.