பிளாஸ்டிக் தடை சந்திக்கும் சவால்கள்


பிளாஸ்டிக் தடை சந்திக்கும் சவால்கள்
x
தினத்தந்தி 24 Oct 2019 5:28 AM GMT (Updated: 24 Oct 2019 5:28 AM GMT)

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், சுவச் பாரத் திட்டத்தில், கொள்கை வகுத்தல், கல்வி மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியில் அதிக கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதில் கவனத்தை குவிக்க வேண்டும்.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீது நாடு முழுமைக்குமான தடை, இந்த ஆண்டு அக்டோபர் 2-ல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் சென்னையில் ஒரு கடற்கரை பகுதியில் தாம் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் வீடியோ காட்சி ஒன்றை பிரதமர் மோடி, டுவிட்டரில் வெளியிட்டு, 2022-க்குள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் நோக்கத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். ஆனால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் இன்று உள்ள நிலையில், மறுசுழற்சி செய்வதில் உள்ள சவால்களை கணக்கில் கொண்டால், இந்த இலக்கு நடைமுறையில் சாத்தியமா?

பிளாஸ்டிக் பிரச்சினையின் வரையறை

உலகில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் பாதி, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ரகங்கள் தான் என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை (யு.என்.இ.பி) கூறுகிறது. ஆனால் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் எவை என்பது பற்றி தெளிவில்லை. “ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் பற்றிய வரையறை விரிவுபடுத்தப்பட வேண்டும். ஏனென்றால், பிளாஸ்டிக் பைகள் மட்டும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அல்ல” என்று குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை செயற்பாட்டு குழுவின், நகர்ப்புற நிர்வாக பிரிவுக்கான இயக்குனரான சத்யரூபா சேகர் கூறுகிறார். “உணவு பொட்டலங்கள், உணவு வினியோகத்துறையில் பயன்படுத்தப்படும் பேக்கிங் பொருட்கள், சானிட்டரி நாப்கின்கள், டயாப்பர்கள் மற்றும் ஆணுறைகள் போன்ற பல பிராண்டு முத்திரைகள் கொண்ட பொருட்கள் அனைத்தும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் தான் என்பதை பற்றி பரவலான விழிப்புணர்வு இல்லை” என்கிறார்.

இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை தடை செய்துள்ளன. 1998-ல் முதன் முறையாக சிக்கிம் மாநிலம் இவற்றை தடை செய்தது. குறிபிட்ட சில பொருட்கள் மீது 2019-ல் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. ஆனால் பல பொருட்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. (பார்க்கவும்: கிராபிக்ஸ் படம்)



சவால்கள்

“ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு நாடு முழுவதுமான தடை இல்லாத நிலையில், தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்வது எளிதல்ல. இதர மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளின் பிரச்சினையை தீர்க்க நாடு தழுவிய தடை அவசியம்” என்கிறார்.

“அரைத்த மாவை பிளாஸ்டிக் கவர்களில் விற்பது எளிதானது. மக்கள் அதை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்” என்று ஒரு கடைக்காரர் கூறுகிறார். பூக்களை பிளாஸ்டிக் பையில் போட்டு தான் விற்க முடியும் என்று மற்றொரு கடைக்காரர் வலியுறுத்துகிறார். பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளதை பற்றியும், அவற்றின் பயன்பாட்டினால் ஏற்படும் கேடுகள் பற்றியும் இருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை.

ஒரு கறிக்கடையில், கறியை கடைக்காரர் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இலைகளில் சுற்றிக்கொடுக்கிறார். ஆனால் வாடிக்கையாளர் அதை தன்னுடைய பிளாஸ்டிக் கவரில் போட்டு எடுத்துச் செல்கிறார்.

“தற்போது உள்ள சித்தரிப்புகள், பிளாஸ்டிக் குப்பைகளுக்கான பொறுப்பையும், குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நுகர்வோர்கள் மீது சுமத்துகிறது” என்கிறார் சத்தியரூபா. சுவச் பாரத் இயக்கம் நுகர்வோர்களை விட பிளாஸ்டிக் உற்பத்தி மீது கவனம் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளின் மேலாண்மைக்கு, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்.

வாழை இலைகள், பாக்கு மர இலைகள், காகித சுருள்கள், தாமரை இலைகள், கண்ணாடி மற்றும் உலோகத்திலான டம்ளர்கள், மூங்கில் மற்றும் மரத்தாலான பொருட்கள், பேப்பர் ஸ்ட்ராக்கள், துணி மற்றும் சணல் பைகள், பீங்கான் பொருட்கள், உண்ணக்கூடிய ஸ்பூன்கள், போர்க்குகள் மற்றும் மண்பானைகள் போன்ற மாற்று பொருட்கள் கிடைத்தாலும், அவற்றின் விலை, பெட்ரோ கெமிக்கல்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விட அதிகமாக உள்ளது.

2020-ல் இந்தியாவின் பிளாஸ்டிக் பிராசசிங் தொழில் துறையின் உற்பத்தி 2.2 கோடி டன்களை எட்டும் என்று இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு 11 கிலோவாக உள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் உள்ள ஆபத்துகள்

இதுவரை உலகெங்கும் 8300 கோடி டன்கள் கன்னிப் பிளாஸ்டிக் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் 2019-க்கான அறிக்கை கூறுகிறது. தற்போதைய உற்பத்தி வேகம் மற்றும் கழிவு மேலாண்மை இப்படியே தொடர்ந்தால், சுமார் 1200 கோடி டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பை கிடங்குகளிலும், பொது வெளிகளிலும் குவியும் என்கிறது.

உலகில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளில் 79 சதவீதம் குப்பை கிடங்குகளிலும், பொது வெளிகளிலும் குவிந்துள்ளதாக யு.என்.இ.பி கூறுகிறது. ஒன்பது சதவீத கழிவுகளே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. 12 சதவீத கழிவுகள் எரித்து சாம்பலாக்கப்படுகின்றன. 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மறுசுழற்சி துறையில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக பிளாஸ்ட் இந்தியா பவுண்டேசன் கணிக்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் (குப்பை பொறுக்குபவர்களையும் சேர்த்து) மறைமுகமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளின் அளவு சுமார் 55 லட்சம் டன் தான்.

மறுசுழற்சி செய்யப்படும் ஒவ்வொரு முறையும், பிளாஸ்டிக்கின் தரம் மற்றும் ஆயுள் குறைவதாலும், கன்னிப் பிளாஸ்டிக் மறுசுழற்சியை 2 அல்லது 3 முறை தான் செய்ய முடியும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது. முறைசாரா மறுசுழற்சி துறையில் உள்ள குப்பை பொறுக்குபவர்களின் உடல் நலனை இது பாதிக்கிறது.

அவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் இதர நோய்களின் பாதிப்பு ஏற்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களை எரித்து சாம்பலாக்கும் போது நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் வெளியாகின்றது. இவற்றினால் கேன்சர், நரம்பு மண்டல பாதிப்புகள், என்டோக்ரைன் சுரபிகள் பாதிப்பு மற்றும் ஊனங்களுடன் குழந்தை பிறப்பு போன்ற உடல் நல சீர்கேடுகள் உண்டாகின்றன.

நுண் பிளாஸ்டிக்குகள் காற்று, நீர் மற்றும் உணவு மூலம் மனித உடலில் நுழைவதாக பன்னாட்டு சுற்றுச்சூழல் சட்டங்களுக்கான மையம் (சி.ஐ.இ.எல்) வெளியிட்ட, பிளாஸ்டிக்குகளின் மறைமுக விலை 2019 என்ற அறிக்கை கூறுகிறது. இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு, கடல் கழிவுகள், காற்றில் மற்றும் மண்ணில் நுண் பொருட்கள், நீர்நிலைகளில் நுண் இழைகள் மற்றும் மனித உடலில் நுண் பொருட்கள் போன்ற வடிவங்களில், பொதுவெளியில் தான் தேங்கியுள்ளது.

கழிவுகளின் மறுபயன்பாடு

தமிழகம் உள்பட உலகெங்கும், கட்டுமானத்துறையில் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பிளாஸ்டிக் பாலிமர்களை சூடுபடுத்தும் போது மிகவும் நச்சுத்தன்மை கொண்ட தனிமங்களை வெளிப்படுத்துகின்றன என்று சி.ஐ.இ.எல். கூறுகிறது. சாலைகளை அமைக்க இவற்றை பயன்படுத்தினால், வாகன போக்குவரத்தினால் ஏற்படும் தேய்மானங்கள் மற்றும் மழை, வெயில் பாதிப்புகளினால், நுண் பிளாஸ்டிக் துகள்கள் வெளிப்பட்டு காற்றில் கலக்கின்றன.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை நாடு முழுவதும் தடை செய்யாமல், அனைத்து வகையான ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளின் உற்பத்தியை முற்றிலும் தடை செய்யாமல் 2022-க்குள் இவற்றை தடை செய்வது சாத்தியமில்லை. இவற்றிற்கு மாற்று ஏற்பாடுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளை உருவாக்கி, மக்களை பிளாஸ்டிக் நுகர்வில் இருந்து மாற்று முறைகளுக்கு நகர்த்த வேண்டும். 

Next Story