இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை மோட்டார் வாகனங்கள் விற்பனை, நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு


இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை மோட்டார் வாகனங்கள் விற்பனை, நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2019 2:04 PM GMT (Updated: 29 Oct 2019 2:04 PM GMT)

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை அக்டோபர் மாத மோட்டார் வாகனங்கள் விற்பனை, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் தீர்மானிக்கும் என சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்து இருக்கின்றனர்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

சர்வதேச நிகழ்வுகள்

நடப்பு வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள், அக்டோபர் மாத வாகனங்கள் விற்பனை நிலவரம் மற்றும் சர்வதேச நிகழ்வுகள் அதை முடிவு செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் தொடங்கி உள்ள நிலையில் நடப்பு வாரத்தில் பார்தி ஏர்டெல், யெஸ் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், இந்தியன் ஆயில், பேங்க் ஆப் இந்தியா, பெட்ரோநெட் எல்.என்.ஜி., இந்துஸ்தான் யூனிலீவர், ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி, எஸ்கார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமது வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. பங்குச்சந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதாக இவை இருக்கும்.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்டு மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக ஆதாரமாக விளங்கும் 8 முக்கிய துறைகளாகும். வருகிற வியாழக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு இத்துறைகளின் செப்டம்பர் மாத உற்பத்தி புள்ளிவிவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தை வெள்ளிக்கிழமை சந்தைகள் வெளிப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறினர்.

அக்டோபர் மாத வாகனங்கள் விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை நிறுவனங்கள் வருகிற 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிட உள்ளன. அது அனைத்து தரப்பினரின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதாக இருக்கும்.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டு தொடர்பாக பல புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதல் அரையாண்டு (2019 ஏப்ரல்-செப்டம்பர்) தொடர்பாகவும், ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் தொடர்பாகவும் புள்ளிவிவரங்கள் வெளிவர உள்ளன. இதன் அடிப்படையிலும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.

அன்னிய முதலீடு

நடப்பு வாரத்தில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற மற்ற சர்வதேச நிலவரங்களும் இந்த வார வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

Next Story