வானவில் : பெராரி எப்-8 ஸ்பைடர், 812 ஜி.டி.எஸ். சூப்பர் கார்கள்


வானவில் :  பெராரி எப்-8 ஸ்பைடர், 812 ஜி.டி.எஸ். சூப்பர் கார்கள்
x
தினத்தந்தி 30 Oct 2019 5:35 AM GMT (Updated: 30 Oct 2019 5:35 AM GMT)

சீறிப்பாயும் கார்கள் என்றாலே பெராரி கார்கள்தான் பெரும்பாலானோர் நினைவுக்கு வரும். இந்நிறுவனம் ‘எப்-8’ மற்றும் ‘812 ஜி.டி.எஸ்.’ என்ற பெயரிலான இரண்டு சூப்பர் கார்களை உருவாக்கியுள்ளது.

நிறுவனத்தின் தலைமையகமான இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள மார்நெல்லோ பகுதியில் கண்காட்சி ஒன்றை ஏற்படுத்தி அதில் இந்த இரண்டு கார்களையும் பெராரி நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. மோட்டார் கார் பந்தயத்தில் இந்நிறுவனத் தயாரிப்புகள் பங்கேற்று 90 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் இவ்விரு கார்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களை முதன் முறையாக இந்நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘எப்-8 ஸ்பைடர்’ மாடல் மேல் பகுதி திறந்து மூடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் பயணிக்கும் வகையிலான இந்த சூப்பர் காரில் வி8 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பின்சக்கர சுழற்சியைக் கொண்டது. 2014-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான பெராரி கலிபோர்னியா மாடலை அடிப்படையாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், தோற்றப் பொலிவில் அந்தக் காருக்கும், இதற்கும் பெரும் வித்தியாசம் இல்லை என்றே கூற வேண்டும்.

இது 720 ஹெச்.பி. திறன் 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறன் 3,902 சி.சி. ஆகும். இதன் எக்ஸாஸ்ட் மாடல் சேலஞ்ச் 488 மாடலில் பயன்படுத்தப்பட்டதாகும். இதனால் இதன் எடை 9.7 கிலோ குறைந்து உள்ளது. ஒட்டுமொத்தமாக இதன் எடை 18 கிலோ குறைந்துள்ளது. இதனால் காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கிறது. இந்தக் கார் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்லும்போது கூட இதன் மேற்கூரையை இயக்க முடியும். அது 14 விநாடிகளில் மூடிக்கொள்வதுதான் இதன் சிறப்பாகும். இதன் விலை சுமார் ரூ.4.3 கோடி அளவுக்கு இருக்கும் என்றே தோன்றுகிறது.

812 ஜி.டி.எஸ். மாடல் கார்கள் பந்தய களத்தை கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராண்ட் டூரர் என்பதன் சுருக்கமே ஜி.டி. என்பதாகும். இதில் வி12 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6.5 லிட்டர் வி 12 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 800 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 718 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. இதை ஸ்டார்ட் செய்து 100 கி.மீ. வேகத்தை 3 விநாடிகளில் தொட்டுவிட முடியும் என்பது சிறப்பாகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 340 கி.மீ. ஆகும். இவ்விரண்டு கார்களையும் அடுத்த ஆண்டு வர்த்தக ரீதியில் வெளியிடப் போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Next Story