நடப்பு 2019-20 பருவத்தில்,சர்க்கரை உற்பத்தி 12% சரிந்து 2.90 கோடி டன்னாக குறையும்-மத்திய அரசு அதிகாரி தகவல்


நடப்பு 2019-20 பருவத்தில்,சர்க்கரை உற்பத்தி 12% சரிந்து 2.90 கோடி டன்னாக குறையும்-மத்திய அரசு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2019 6:41 AM GMT (Updated: 31 Oct 2019 6:41 AM GMT)

நடப்பு 2019-20 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி 12 சதவீதம் சரிவடைந்து 2.90 கோடி டன்னாக குறையும் என மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிரேசில்
சர்வதேச அளவில், சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் நாடு முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. நம் நாட்டில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் இந்த மூன்று மாநிலங்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது.

2013-14 சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 2.83 கோடி டன்னாக இருந்தது. 2015-16 பருவத்தில் அது 2.51 கோடி டன்னாக குறைந்தது. 2016-17 பருவத்தில் 2.03 கோடி டன்னாக சரிந்தது. ஆனால் 2017-18 பருவத்தில் புதிய சாதனை அளவை எட்டி 3.25 கோடி டன்னாக அதிகரித்தது. அண்மையில் நிறைவடைந்த 2018-19 பருவத்தில் 2 சதவீதம் அதிகரித்து 3.31 கோடி டன்னை எட்டி உள்ளது.

இந்நிலையில், நடப்பு பருவத்தின் (2019 அக்டோபர்-2020 செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி குறித்து மதிப்பீடுகள் வெளியாகி வருகின்றன. நடப்பு 2019-20 சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 2.70 கோடி டன்னாக குறையும் என மேற்கு இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (விஸ்மா) மதிப்பீடு செய்து இருக்கிறது. இது கடந்த பருவத்தின் உற்பத்தியை (3.31 கோடி டன்) காட்டிலும் 18.45 சதவீதம் குறைவாகும். ஆனால் உற்பத்தி ஏறக்குறைய 12 சதவீதம் குறைந்து 2.80-2.90 கோடி டன்னாக இருக்கும் என மத்திய உணவுத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.

2017-18 பருவத்தின் அதிக உற்பத்தி காரணமாக ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டில் கையிருப்பை குறைக்கவும் சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதே சமயம் இறக்குமதியாகும் சர்க்கரைக்கு வரி 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

சர்க்கரை நுகர்வு
இந்தியாவில் சர்க்கரை நுகர்வு ஆண்டுக்கு சுமார் 2.50 கோடி டன்னாக இருக்கிறது. நம் நாட்டில் குளிர்பான நிறுவனங்கள், பேக்கரிகள், பிஸ்கெட் மற்றும் சாக்லெட் நிறுவனங்கள், ஹோட்டல்கள், தேநீர் விடுதிகள் மற்றும் ரெஸ்டாரென்ட்டுகள் அதிக அளவில் சர்க்கரையை பயன்படுத்துகின்றன.

Next Story