புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்வு, நிப்டி 57 புள்ளிகள் முன்னேற்றம்


புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்வு, நிப்டி 57 புள்ளிகள் முன்னேற்றம்
x
தினத்தந்தி 31 Oct 2019 8:01 AM GMT (Updated: 31 Oct 2019 8:01 AM GMT)

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 57 புள்ளிகள் முன்னேறியது.

நிதி நிலை முடிவுகள்
பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் பங்குகளில் முதலீடு அதிகரித்தது. அன்னிய முதலீடு வரத்து உள்ளிட்ட வெளிநிலவரங்களும் சாதகமாக இருந்ததால் அதன் தாக்கமும் இங்கு உணரப்பட்டது.

அந்த நிலையில், மும்பை சந்தையில் நேற்று தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.47 சதவீதம் உயர்ந்தது. அடுத்து தொழில்நுட்பத் துறை குறியீட்டு எண் 1.35 சதவீதம் அதிகரித்து. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 18 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 12 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் டாட்டா கன்சல்டன்சி, ஐடிசி, பார்தி ஏர்டெல், சன் பார்மா, இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் பேங்க், எல் அண்டு டி உள்பட 18 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் யெஸ் பேங்க், மாருதி சுசுகி, இண்டஸ் இந்த் வங்கி, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட 12 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 220.03 புள்ளிகள் அதிகரித்து 40,051.87 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 40,178.12 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 39,805.11 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,380 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,132 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 161 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.8,824 கோடியாக உயர்ந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.2,627 கோடியாக இருந்தது.

நிப்டி
தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 57.25 புள்ளிகள் உயர்ந்து 11,844.10 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,883.95 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,784.45 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story