தனது மகளை அரசுப்பள்ளிக்கு அனுப்பும் கலெக்டர்


தனது மகளை அரசுப்பள்ளிக்கு அனுப்பும் கலெக்டர்
x
தினத்தந்தி 2 Nov 2019 12:09 PM GMT (Updated: 2 Nov 2019 12:09 PM GMT)

அரசுப்பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பக் கூறுபவர்கள், குறிப்பாக அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள், அதற்கு முன்மாதிரியாக நடந்துகாட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்பத் தன்னுடைய மகளை அரசுப்பள்ளியில் படிக்க வைத்துவருகிறார், சத்தீஷ்கார் மாநிலம் கபீர்தாம் மாவட்ட கலெக்டர் அவனீஷ் சரண்.

‘‘ஒருவர் தனது குழந்தையை அரசுப்பள்ளிக்கு அனுப்புவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஓர் அரசு ஊழியர், அதிலும் ஐ.ஏ.எஸ். தகுதிநிலையில் உள்ள ஒருவர் தனது குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்த்தால், அப்பள்ளியின் சூழலே மாறும். மேலும் மற்றவர்களுக்கும், மாணவர்களுக்கும் அது ஓர் ஊக்கமாக அமையும். அவர்களது மனோபாவமும் மாற்றம் காணும்’’ என்று தெளிவாகக் கூறுகிறார், அவனீஷ்.

கபீர்தாம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அவனீஷ் பொறுப்பேற்றதுமே, தனது மகள் வேதிகாவை அங்கு கவார்தா நகரில் உள்ள பிரமுக் பிரதாமிக் சாலா எனப்படும் அரசு ஆரம்பப்பள்ளியில் சேர்த்துவிட்டார். தற்போது வேதிகா அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

இவர் இதற்கு முன்பு சத்தீஷ்காரின் பல்ராம்பூர் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது அங்குள்ள ஓர் அரசு அங்கன்வாடி மையத்தில் தனது மகளைச் சேர்த்திருந்தார்.

மாவட்ட கலெக்டரான அவனீஷ் தனது மகளை அரசுப்பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பது குறித்து அவருக்குத் தொடர்ந்து பாராட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

ஆனால் இதில் தன்னைவிட தன் மனைவிதான் அதிக ஆர்வம் காட்டினார் என்கிறார் அவனீஷ்.

அதேநேரம், ஓர் அரசுப்பள்ளி மாணவனான தனக்கு, தன்னுடைய மகள் அரசுப்பள்ளியில் படிப்பதில் பெருமையே என்று சொல்கிறார். 2009-ம் ஆண்டு பிரிவு அதிகாரியான இவர், அரசுப்பணியில் பத்தாண்டு கால அனுபவம் உள்ளவர்.

ஒரு கலெக்டராக மாவட்டத்தின் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறும் அவனீஷ், கல்வி மேம்பாட்டுக்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதாகச் சொல்கிறார்.

‘‘அரசுப்பள்ளி போன்ற அரசாங்க அமைப்புகள் மீது திடமான நம்பிக்கை கொண்டவன் நான். தனியார் பள்ளிகளுக்குச் சமமாக அரசுப்பள்ளிகள் திகழ வேண்டும், அதற்கு அரசுப்பள்ளிகளில் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்பதில் நான் எப்போதும் கவனமாக இருப்பேன். எங்கள் மாவட்டத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்து பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட் வகுப்பறைகள்’ ஏற்படுத்தப்பட்டு விட்டன. அரசுப்பள்ளிகளில் அனைத்து ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கும் நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம்’’ என்கிறார் அவனீஷ்.

மருத்துவ, பொறியியல் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிகளையும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் இலவச உறைவிட வசதியுடன் வழங்குவதாக அவனீஷ் கூறுகிறார். இவரது மாவட்டம் முழுவதும், மாணவர்களுக்கு மேற்படிப்புகளுக்கான ஆலோசனைகளுடன், ஊக்கச் சொற்பொழிகளும் நடத்தப்படுகின்றன.

மாவட்ட கலெக்டர் போன்ற ஓர் உயர் அதிகாரி தனது குழந்தையை அரசுப்பள்ளியில் படிக்கவைக்கும்போது அங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதிசெய்யப்படுகின்றன, ஆசிரியர்களின் வருகை சரியாக இருக்கிறது, கற்பித்தல் தரம் உயர்கிறது.

ஆக, அவனீஷ் வழியில் மேலும் பலரும் செயல்பட்டால் அரசுப்பள்ளிகளின் நிலையில் புரட்சிகரமான மாற்றம் நிகழும்.


Next Story