சிறப்புக் கட்டுரைகள்

சாதனை : பலே பவன்! + "||" + Adventure: brisky Bawan!

சாதனை : பலே பவன்!

சாதனை : பலே பவன்!
‘சாதனை படைப்பது எனக்கு சர்பத் குடிப்பது போல’ என்று நீச்சல்வீரர் பவன் குப்தா கூறினாலும் சரியாகவே இருக்கும். அப்படி மாநில அளவில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார் இவர். கண்ணாடியாய்ப் பளபளக்கும் தண்ணீருக்குள் பாய்ந்து பயிற்சி செய்துகொண்டிருந்த பவன், நீச்சல்குள கரையேறி வந்ததும் பேசினோம்...
நீங்கள் சென்னைப் பையனா?

ஆம். நான் சென்னைவாசிதான். முகப்பேர் ஜஸ்வந்த் நகரில் பெற்றோர், அக்காவுடன் வசிக்கிறேன். சோழிங்கநல்லூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் தற்போதுதான் பி.ஈ. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முடித்திருக் கிறேன். அப்பா சைலேஷ் குப்தா சுங்கவரித் துறை ஆய்வாளர், அம்மா சுசீலா இல்லத்தரசி. அக்கா திவ்யா ஐ.டி. துறையில் பணிபுரிகிறார்.

நீச்சலில் நீங்கள் படைத்த சாதனைகளைப் பற்றிக் கூறுங்கள்...

கடந்த ஆண்டு சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் நீச்சல் போட்டியில் நான் 100 மீட்டர் பிரீஸ்டைலில் புதிய மாநில சாதனையைப் படைத்தேன். 53.60 வினாடி தூரத்தில் நீந்தி முடித்த நான், 53.66 வினாடிகள் என்ற முந்தைய 6 ஆண்டுகால சாதனையை முறியடித்தேன். அங்கேயே இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 100 மீ. பிரீஸ்டைலில் 53.54 வினாடிகளில் கடந்து, எனது சாதனையை நானே தகர்த்தேன். அத்துடன் 50 மீ. பிரீ ஸ்டைலிலும் 5 ஆண்டுகால சாதனையை முறியடித்தேன். அதில் 24.16 வினாடிகளில் கடந்த நான், 24.22 வினாடிகள் என்ற முந்தைய சாதனையைத் தாண்டினேன்.

சமீபத்திய ஆண்டுகளில் தேசியப் போட்டிகளில் உங்கள் செயல்பாடு?

கேரளாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் நான் பங்கேற்றேன். அதில் நான் 100 மீ. பிரீஸ்டைலில் ஐந்தாமிடம் பெற்ற போதும், 53.06 வினாடிகளில் போட்டி தூரத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து...?

பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் பங்கேற்ற நான், 100 மீ. பிரீஸ்டைலில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். 4x100 மெட்லி ரிலேயில் எங்கள் அணிக்கு வெண்கலப் பதக்கம் கிட்டியது. அதன்பின், கடந்த பிப்ரவரியில் மதுரையில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் 25, 50, 100 மீ. பிரீஸ்டைல், 25, 50 மீ. பட்டர்பிளை என மொத்தம் 5 தங்கப் பதக்கங்களை அறுவடை செய்தேன். தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் பெற்றேன்.

நீச்சலில் உங்களின் உச்ச இலக்கு?

இந்தியா சார்பில் சர்வதேசப் போட்டியில் பங்கேற்பதும், பதக்கம் வெல்வதும்தான். இத்தாலியில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வுப் போட்டி, கர்நாடக மாநிலம் பெல்காமில் கடந்த ஏப்ரலில் நடந்தது. அதில் நான் 100 மீ. பிரீ ஸ்டைலில் முதலிடம் பெற்றபோதும், தகுதி நேரத்துக்கு உள்ளாக போட்டி தூரத்தைக் கடக்கவில்லை என்று கூறி தேர்வு செய்யப்படவில்லை. அத்தேர்வுப் போட்டிக்காக கடுமை யாகத் தயாராகி இருந்த எனக்கு, அந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. அதில் இருந்து வெளிவரவே சிறிது காலம் ஆனது. ஆனாலும், சர்வதேசப் போட்டி சவாலை சந்திக்கும் எனது கனவுக்காக தொடர்ந்து உற்சாகத்தோடு உழைத்து வருகிறேன்.

நீங்கள் நீச்சலுக்கு வந்து எவ்வளவு காலம் ஆகிறது? இவ்வளவு தூரம் முன்னேறுவோம் என்று நினைத்தீர்களா?

நான் நீச்சலுக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகின்றன என்றபோதும், தீவிரமாக போட்டிகளில் பங்கேற்று வருவது ஆறு ஆண்டுகளாகத்தான். நான் உடற்பயிற்சியாகக் கருதித்தான் நீச்சலில் இறங்கினேன். ஆனால் மாநில அளவில் ஒரு போட்டியில் வென்றதுமே என் மீது எனக்கு நம்பிக்கை உருவாகிவிட்டது. அது நான் இவ்வளவு தூரம் சாதிப்பதற்கும் காரணமாக அமைந்தது. அந்த வகையில், நான் இதுவரை பெற்ற வெற்றிகளில் எனக்கு ஓரளவு திருப்தி இருக்கிறது.உங்கள் குடும்பத்தில் பிறருக்கு நீச்சல் ஆர்வமுண்டா?

ஒரு விஷயம் சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அம்மா, அப்பா, அக்கா, நான் என்று குடும்பத்தில் அனைவரும் ஒன்றாகத்தான் நீச்சல் பயிற்சியைத் தொடங்கினோம். அடிப்படைப் பயிற்சியுடன் பெற்றோர் திருப்தி அடைந்தார்கள். படிப்பில் கவனம் செலுத்துவதற்காக பத்தாம் வகுப்பில் நீச்சலுக்கு விடைகொடுத்தார் அக்கா. நான் மட்டும் நீச்சலில் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

நீச்சலுக்கான அடிப்படை வசதிகள் நம்மூரில் எப்படி இருக்கின்றன?

முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் வசதிகள் அதிகரித்திருக்கின்றன. ஆனாலும் சர்வதேச அளவில் போட்டியிடத் தயாராவதற்கு நமது வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும். இன்றும் ‘டிஜிட்டல் டச் பேடு’ போன்ற வசதி இல்லாமல் போட்டிகளை நடத்தும் நிலை மாற வேண்டும். நீச்சல் போட்டிகளில், அதிலும் குறிப்பாக நான் பங்கேற்பது போன்ற குறுகிய தூர நீச்சல் போட்டிகளில் ஒவ்வொரு வினாடியும் முக்கியம். டிஜிட்டல் டச் பேடு இருந்தால்தான் மிகத் துல்லியமாக நேரம் பதிவாகும்.

ஆசிய விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் நீச்ச லில் நமது பதக்கக் கனவு எப்போது நனவாகும்?

மிக விரைவிலேயே நனவாவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன. விர்தாவல் கடே, ஸ்ரீஹரிநடராஜ் போன்ற சிறந்த வீரர்கள் நம் நாட்டில் இருந்து உருவாகி வருகிறார்கள்.

ஒரு சாதனை நீச்சல்வீரராய் உங்களை உருவாக்கியதில் யாருக்குப் பங்கிருப்பதாக நினைக்கிறீர்கள்?

பொழுதுபோக்கு போல நீச்சலுக்கு வந்து சென்று கொண்டிருந்த என்னை ஒரு போட்டி நீச்சல்வீரன் ஆக்கியதில் நான் பயிற்சி பெறும் முகப்பேர் மேற்கு எஸ்.டி.ஏ.டி. டால்பின் நீச்சல் அகாடமிக்கும், அதன் தலைமைப் பயிற்சியாளர் கே.டி. முரளீதரன், பயிற்சியாளர் ராணி அனிசியா ஆகியோருக்கும் பிரதான பங்கு இருக்கிறது. அத்துடன், எனது நீச்சல் பயணத்தின் அனைத்து உயர்வு, தாழ்வுகளிலும் எங்கள் குடும்பத்தினர் ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அவர்களின்றி நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. என்னை எப்போதும் ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் நண்பர்கள், சீனியர் வீரர்களையும் நான் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

நீச்சல் தவிர்த்து உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

ஒரு நீச்சல் வீரனாக இயல்பாகவே நான் ‘பிட்’டாக இருந்து வருகிறேன். உடற்பயிற்சிக்கூடத்திலும் தினமும் பயிற்சி மேற்கொண்டு, உடலை கச்சிதமாகப் பேணி வருகிறேன். எனவே காவல்துறைப் பணியில் எனக்கு ஆர்வம். எஸ்.ஐ. தேர்வுக்கு என்னை தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறேன். வருமான வரித்துறையில் பணிபுரியும் ஆர்வமும் இருக்கிறது.

நீச்சல் உடனான உங்கள் பந்தம் தொடருமா?

எனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம், அடையாளம், ஆரோக்கியம் எல்லாமே நீச்சல் தந்ததுதான். எனவே நீச்சல் போட்டிகளில் இருந்து நான் விடைபெற்று விட்டாலும் தொடர்ந்து நீச்சல்குளத்துக்கு வந்து சென்றுகொண்டிருப்பேன். இளம் வீரர்களுக்குப் பயிற்சி, வழிகாட்டல் என்று ஏதாவது ஒருவகையில் நான் இதில் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பேன்.

பவன் குப்தா, தானும் சாதனை படைப்பதுடன், தன்னைப் போல பல சாதனையாளர்களையும் உருவாக்குவார் என நம்பலாம்.