அந்தக்காலத்தில், இந்தக்கால தம்பதிகள்


அந்தக்காலத்தில், இந்தக்கால தம்பதிகள்
x
தினத்தந்தி 2 Nov 2019 1:51 PM GMT (Updated: 2 Nov 2019 1:51 PM GMT)

இங்கிலாந்தில் வசித்துவரும் கிட்டன் ரிச்சர்ட் வீட்டுக்குச் சென்றால் கால இயந்திரத்தில் 1940-ம் ஆண்டுக்குச் சென்றது போலத் தோன்றும். கிட்டன், ரிச்சர்ட் இருவரும் அந்தக் கால ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்.

தலை அலங்காரம், செருப்பு, ஒப்பனை, வாட்ச், அணிகலன்கள் என்று அனைத்தும் அந்தக்காலத்தில் இருந்தது போலவே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

வீட்டில் உள்ள நாற்காலிகள், அலமாரிகள், பாத்திரங்கள், ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள், விளையாட்டுச் சாமான்கள், திரைச்சீலைகள், ஸ்விட்ச் போர்டுகள், டி.வி., தொலைபேசி என்று அனைத்தையும் மாற்றியிருக்கிறார்கள்.

“மிஷேல் என்ற என் பெயரைக்கூட கிட்டன் என்று மாற்றிக்கொண்டேன். எனக்கு அந்தக்கால வாழ்க்கையின் மீது தீராத காதல். 15 ஆண்டுகளாக நான் இப்படித்தான் வாழ்ந்து வருகிறேன். நாங்கள் சாப்பிடும் உணவு, கேட்கும் இசை, பார்க்கும் படங்கள் அனைத்தும் அந்தக்காலத்தைச் சேர்ந்தவைதான். அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்குச் சென்றபொழுதுதான் ரிச்சர்ட்டைச் சந்தித்தேன். எங்கள் இருவர் விருப்பங்களும் ஒத்துப் போயின.

எனக்காக முழுமையாகத் தன்னை மாற்றிக்கொண்டார். அந்தக் கால ராணுவ வீரர் உடைகளும் முறுக்கிய மீசையுமாக வலம் வருகிறார். பழைய ரெயில் பெட்டியில்தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. 2 மாதப் பெண் குழந்தைக்கும் அந்தக்கால ஆடைகளையே அணிவித்து வருகிறோம். என் மகள் வளர்ந்தாலும் நவீன உலகத்துக்கு ஏற்ப மாறமாட்டாள் என்று நம்புகிறேன்’’ என்கிறார் 35 வயது கிட்டன்.

Next Story