சிறப்புக் கட்டுரைகள்

உள்ளாடைக்கு தனி உலகம் உருவாக்கியவர் + "||" + He created a separate world for innerwear

உள்ளாடைக்கு தனி உலகம் உருவாக்கியவர்

உள்ளாடைக்கு தனி உலகம் உருவாக்கியவர்
அப்ரிதா கணேஷ் மிகவும் துணிச்சலானவர். அதனால்தான் இவர் யாரும் யோசிக்காத தொழில்துறையை கையில் எடுத்திருக்கிறார். அது என்ன என்பதையும், அந்த தொழில்துறைக்குள் நுழைந்ததையும் அப்ரிதா சொல்கிறார்.
‘‘வெளிநாடுகளில் வாழும் பெண்கள் உள்ளாடைக்கு தனி கவனம் செலுத்துவார்கள். உள்ளாடைகளை தேர்வு செய்வதில் தொடங்கி, அதை பத்திரமாக துவைப்பது வரை... உள்ளாடைக்கு என தனி மரியாதை உண்டு. ஆனால் இந்தியாவில் வேறுவிதமான மனநிலை நிலவுகிறது. கூட்ட நெரிசலான கடை வீதியில், ஆண்கள் விரித்திருக்கும் கடையில்தான் பெரும்பாலான பெண்கள் உள்ளாடைகளை வாங்குகிறார்கள். சிலர் அதற்காக இருக்கும் பிரத்யேக துணிக்கடைகளில் வாங்கினாலும், அதன் தன்மை குறித்து யோசிப்பது இல்லை. கிடைப்பதை வாங்குகிறார்கள். பார்ப்பதை வாங்குகிறார்கள். இப்படித்தான் இந்திய உள்ளாடை சந்தை இயங்குகிறது. இதை மாற்றும் நோக்கில் உருவானதுதான், பட்டர்கப்ஸ்.’’ என்று உற்சாகத்தோடு ஆரம்பிக்கும் அப்ரிதா, பெண்களின் உள்ளாடை தயாரிப்பையே, தனக்கான தொழிலாக மாற்றியவர். இவரது திட்டத்தில் உருவானதுதான், ‘பட்டர்கப்ஸ்’ என்ற உள்ளாடை நிறுவனம். இந்திய பெண்களுக்காக ஒவ்வொரு உள்ளாடையையும் பார்த்து பார்த்து தயாரிக்கிறார்.

‘‘2009-ம் ஆண்டு வரை, இந்தியர்களுக்கு என பிரத்யேக உள்ளாடைகள் தயாரிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் அளவுகளிலும், அவர்களின் உடல் வசதிக்கு ஏற்பவும் உருவாக்கப்பட்ட உள்ளாடைகளே இந்திய சந்தையில் உலா வந்தன. இதை என்னுடைய கல்லூரி காலங்களில் உணர்ந்தேன். அதேசமயம் உள்ளாடைகளை வாங்கும் இடங்கள் எப்போதும் கூட்டநெரிசலோடு காணப்படும். குறிப்பாக அந்த பகுதிகளில் ஆண்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, பிரத்யேக உள்ளாடை நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் சவுகரியமான உள்ளாடைகளை உருவாக்கி, பெண் களின் கருத்துகளுக்கு ஏற்ப அவற்றை மேம்படுத்த ஆசைப்பட்டேன். இந்த ஆசை 2009-ம் ஆண்டே அரும்பிவிட்டது என்றாலும், 2015-ம் ஆண்டில்தான், நிறுவனமாக உருவானது. இன்று, இந்தியாவின் முன்னணி நகரங்களில் எங்களது உள்ளாடை உலகம் இருக்கும். அங்கு சென்று, உங்கள் உடலுக்கு சவுகரியமான உள்ளாடைகளை தேர்வு செய்து வாங்கலாம். அணிந்து பார்த்து, கருத்து சொல்லலாம். நாங்கள் தயாரித்திருக்கும் உள்ளாடைகளில் ஏதாவது குறைகள் இருப்பின், அதை மேம்படுத்தும் வழிமுறைகளையும் கூறலாம்.’’ என்றவர், ஆரம்பத்தில் இதை புதுமுயற்சியாகவே கையில் எடுத்திருக்கிறார். புதுப்புது துணிகளில் உள்ளாடைகளை உருவாக்குவது, அதில் பல டிசைன்களை சேர்ப்பது... என புதுமையான உள்ளாடைகளை உருவாக்க, அதை வாங்கி அணிய பெண்கள் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். உடனே அதையே புது தொழிலாக்கிவிட்டார். இன்று அதன்மூலம் கணிசமான லாபமும் பார்க்கிறார்.

‘‘சுடிதார், சேலை, நவீன ஆடைகளை பார்த்து பார்த்து வாங்குகிறோம். சில கடைகளில், வாங்க இருக்கும் ஆடைகளை அணிந்து பார்க்கிறோம். நம்மை தொட்டு உராயும் உடைகளுக்கு இவ்வளவு மெனக்கெடும்போது, நம் உடலை கட்டி அணைக்கும் உடைகளுக்கு எவ்வளவு மெனக்கெட வேண்டும்? என்ற கேள்விதான், உள்ளாடை வடிவமைப்பு நிறுவனம் உதயமாவதற்கு காரணமானது. என் மனதில் எழுந்த கேள்வி பல பெண்களின் மனதிலும் எழ, இன்று வியாபாரம் சிறப்பாக நடக்கிறது. எங்கள் நிறுவனத்தில் பெண்களே அங்கம் வகிக்கின்றனர். அதனால் பெண்களின் மனதை எளிதாக புரிந்து கொண்டு, அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது’’ என்றவர், இதுவரை ஏராளமான உள்ளாடைகளை அணிந்து பார்த்திருக்கிறார். இந்தியாவின் மூலை முடுக்குகளில் கிடைத்த உள்ளாடைகள், வெளிநாடுகளில் விற்பனையாகும் உள்ளாடைகள், ஆன்லைன் தளங்களில் விற்பனையாகும் உள்ளாடைகள்... என பலவற்றை வாங்கி அணிந்து பார்த்து, கருத்து கூறுகிறார். இத்தகைய கருத்துகளால்தான், பெண்களுக்கு மிகவும் சவுகரியமான உள்ளாடைகளை உருவாக்கி கொடுக்க முடியும் என்பது, அப்ரிதாவின் கருத்து.

‘‘ஆரம்பத்தில் சிறு முயற்சியாக தொடங்கினோம். ஆனால் இன்று எங்களை நம்பியும் பலர் முதலீடு செய்திருக்கிறார்கள். நிறைய படித்த பெண்கள், நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றுகிறார்கள். அதனால் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தமுடிகிறது. பெண்களின் கருத்துகளை தவறாமல் பதிவு செய்வதால், அவர்கள் விரும்பும் உள்ளாடைகளை தயாரிக்க முடிகிறது.’’ என்ற கருத்தோடு முடித்தார்.