கடலை சுத்தப்படுத்தும் நண்பர்கள்


கடலை சுத்தப்படுத்தும் நண்பர்கள்
x

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டர்டன், பீட் செக்லின்ஸ்கி இருவரும் கடலைச் சுத்தம் செய்வதற்கான கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கடலில் மிதக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், காகிதங்கள், எண்ணெய் போன்றவற்றை இந்தக் கருவி தானாக இழுத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

‘‘நாங்கள் இருவரும் சிறு வயது முதல் கடலில்தான் அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கிறோம். பிற்காலத்தில் நீர் விளையாட்டு வீரர்களாக மாறிவிட்டோம். நாங்கள் சின்ன வயதில் பார்த்த கடலுக்கும் இப்போது இருக்கும் கடலுக்கும் நிறைய வித்தியாசம். கடலைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால் குப்பைகளும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. 

இது எங்களுக்கு அதிகக் கவலையையும் வருத்தத்தையும் தந்தது. இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிப்பதற்காகவே நாங்கள் பார்த்து வந்த வேலைகளை விட்டுவிட்டோம். குப்பை உறிஞ்சும் கருவியைப் பலரின் உதவியோடு உருவாக்கினோம். பல்வேறு இடங்களில் இந்தக் கருவியை வைத்துப் பரிசோதனை செய்தோம். திருப்தியாக இருந்தது. நிதி திரட்டி, இந்தக் கருவியை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிவு செய்திருக்கிறோம்.

இதற்காக ஒரு வீடியோவையும் தயாரித்து வெளியிட்டோம். மிக நல்ல வரவேற்பு கிடைத்தது. மறுசுழற்சி முறையில் உருவான சிலிண்டரை கடலில் மிதக்க விடுவோம். குப்பைகள் சிலிண்டருக்குள் இழுக்கப்பட்டு, வடிகட்டப்பட்டு, இன்னொரு பைக்குள் சேர்ந்துவிடும். நீச்சல் குளத்தில் வைக்கப்படும் ஸ்கிம்மர் பாக்ஸ் போலவே இந்தக் கருவியையும் வடிவமைத்திருக்கிறோம். துறைமுகங்களில் இந்தக் கருவி அதிகம் பயன்படும்’’ என்கிறார் ஆண்ட்ரூ டர்டன்.

Next Story