தோன்றியதென் சிந்தைக்கே... பார்த்தது- படித்தது - ரசித்தது -சந்தித்தது - சிந்தித்தது; இறையன்பு


தோன்றியதென் சிந்தைக்கே...  பார்த்தது- படித்தது - ரசித்தது -சந்தித்தது - சிந்தித்தது; இறையன்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 4:32 PM GMT (Updated: 2 Nov 2019 4:32 PM GMT)

சிந்தித்தது...பெருந்தன்மையாக இருப்பது மகத்தான பண்பு. பலரும் அதை சரியாகப் புரிந்துகொள்வதில்லை. உன்னிப்பாக இல்லாமல் இருப்பதால் விளைவதல்ல அது. அதேபோன்று, ஏமாளித்தனத்தின் வெளிப்பாடோ, அச்சத்தின் விளைவோ அல்ல. அது அனைத்தையும் அறிந்த பிறகும் பொருட்படுத்தாமல் இருப்பது.

தவறு செய்கிறவர்களைக் கடிந்து மன்னிப்பதும், கடிந்ததையும் மறப்பதுமே அந்த தாராள குணம்.

பெருந்தன்மை என்பது விஷயம் தெரியாமல் கண்மூடி பரிவு காட்டுவதல்ல, தெரிந்த பிறகும் கருணைக் கண் களால் கனிவு காட்டுவது.

மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான் என்று அவற்றை சுண்டித்தள்ளுவது. நல்லவர்களிடம் மட்டுமல்ல, அல்லவர்களிடமும் தாராளமாக நடந்துகொள்வது. சிலருக்கு மட்டும் தேர்ந்தெடுத்து உதவாமல், கண்ணில் படுபவர்களுக்கெல்லாம் கையில் இருப்பதை பாரபட்சமின்றி அள்ளிக்கொடுப்பது.

உதவுகிறவர்களிடம் மட்டுமல்ல, உதவாக்கரைகளிடமும் கருணை காட்டுவது. புரிந்து நடப்பவர்களிடம் மட்டுமல்ல, புறக்கணிப்பவர்களிடமும் புன்னகை பூப்பது. ஆசையாய்ப் பழகுபவர்களிடம் மட்டுமல்ல, அலட்சியப்படுத்துபவர்களிடமும் அனுசரணை காட்டுவது.

பகிர்பவர்களிடம் மட்டுமல்ல, நமக்குத் தராமல் பதுக்குபவர்களிடமும் நல்லவற்றை விநியோகிப்பது. பரோபகாரிகளிடம் மட்டுமல்ல, சுயநலக்காரர்களிடமும் வித்தியாசம் காட்டாமல் இருப்பது. கீழே பணிபுரிபவர்கள் முதலில் வணக்கம் செலுத்த வேண்டும் என்று காத்திருக்காமல் பார்வை பட்டதும் தாமாக கைகளை உயர்த்துவது.

பெருந்தன்மை இருக்கும்போது உணரப்படுவதைவிட இல்லாதபோது அதிகம் சிலாகிக்கப்படுகின்ற பண்பு.

படித்தது...

‘விழிப்புணர்வு’ என்கிற தலைப்பில் ஓஷோ நிகழ்த்திய ஆங்கில உரைகளை கவிதா பதிப்பகம் தொகுத்து வெளியிட்டிருக்கிறது.
அந்த நூலில் கனவுகளைப் பற்றி குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. கனவுகள் குறித்து வாசிக்கும்போது சிக்மண்ட் பிராய்டின் ஆய்வு முதலிடம் வகிக்கிறது.

நமக்கு கனவுகள் குறித்து பல்வேறு விதமான சந்தேகங்கள் உண்டு. கனவுகள் கறுப்பு-வெள்ளையாகத்தான் வருமா எனப் பலர் கேட்பதுண்டு.

வண்ண மயமாக வரும். பார்வையற்றவர்களுக்கும் வரும். விலங்குகளுக்கும் வரும்.

நினைவுகளின் நீட்சியே கனவுகளின் தொடக்கம். கனவுகள் நம் ஆழ்மனதிலிருந்து ஊற்றெடுக்கின்றன. செய்முறை நினைவாற்றலை செம்மைபடுத்துகின்றன. கனவுகள் நம் புத்திசுவாதீனத்தை வலுப்படுத்துகின்றன. கனவுகள் களவாடப்பட்டால் பலர் காணாமல்போய் விடுவார்கள்.

ஓஷோ கனவு பற்றிக் கூறும் செய்திகள் சுவாரசியமானவை. கனவு காண்பது ஒரு நோய். கனவுகளை உதிர்க்கும்போது மனிதன் புதிய பார்வையைப் பெறுவான். அவனுடைய தன்னுணர்வற்ற மனதின் பகுதி உள்ளுணர்வு கொண்டதாக ஆகிவிடும்.

கனவுகள் ஐந்து வகையானவை.

முதல் வகை குப்பைக்கூளம். அன்றாடம் நாம் செய்யும் செயல்கள் கனவாக வந்து அர்த்தமற்றதாக முடியும்.

இரண்டாவது வகைக் கனவுகள் நிறைவேறாத விருப்பங்கள் நிறைவேறுவதைப்போல காட்சிகளாக வந்து நம்முடைய ஆழ்மனதில் இருக்கும் ஆசைகளை அகற்றும்.

மூன்றாவது வகைக் கனவுகள் உச்ச உள்ளுணர்வைத் தொடர்புகொள்வது. இவை அபூர்வமாக நிகழும். அது நம்மை வழிகாட்டி அழைத்துச் செல்லும். நாம் எதைத் தேர்ந் தெடுக்க வேண்டும், யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பவற்றைத் தெளிவுபடுத்தும். விஞ்ஞானிகள் சிக்கலான கேள்விகளுக்கு இந்த நிலையில் விடைகாண்பதுண்டு.

நான்காவது வகைக் கனவுகள் கடந்த காலத்தைப் பற்றி அறிய உதவுபவை.

ஐந்தாவது வகைக் கனவுகள் எதிர்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்பவை. எப்போதாவது வருபவை. திறந்த மனதுடன் இருக்கும்போது இது நிகழும். அதில் என்ன இனிமேல் நடக்கப் போகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஆன்மிகத்தை எளிமையாக வாசிக்க உதவும் நூல்.

ரசித்தது...

‘விசும்பின் துளிகள்’ என்கிற மு.மைதிலி எழுதிய    சுற்றுச்சூழல் பற்றிய கவிதைகள் கொண்ட தொகுப்பில் மின்னலடித்ததைப்போன்ற வரிகள்.

தளிர்களைக் கிள்ளினாலும்
கிளைகளை முறித்தாலும்
கோடாரிகள் வெட்டினாலும்
சிரித்துத் துளிர்க்கும்
வீழ்தலை எதிர்த்து
விழுதாய் வளரும்
பாறைக்குள்ளும்
நீர் தேடும்
ஒவ்வொரு மரமும்
ஒரு பெண்

சந்தித்தது...

தோற்றத்தில் கல்லூரி மாணவர். பணியோ பேராசிரியர். இருபது ஆண்டுகள் அனுபவம். ஒன்பது ஆண்டுகளாக மதுராந்தகம் கல்லூரி ஒன்றில் முதல்வர். ஆண்டுதோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, உயர் மதிப்பெண்கள் பெற்ற 50 மாணவர்களுக்கு பொறியியல் படிக்க வாய்ப்பேற்படுத்தித் தருகிறார்.

பெற்றோர் வற்புறுத்த பொறியில் சிக்கிய மீனாய் பொறியியல் படிக்க சேர்ந்த மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். அதற்காக கலாம் புத்தாக்க மையத்தைக் கல்லூரியில் தொடங்கினார்.

அந்த மாணவர்கள் மூன்று ஆண்டுகளில் 200-க்கும்  மேற்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்து விஞ்ஞான முனைப்பை வளர்த்துக் கொண்டார்கள். அவை வேளாண்மை சார்ந்தவை, மாற்றுத் திறனாளிகளுக்கு வாகனம், விபத்துகள் குறைக்கும் முறைகள், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உதவும் கருவி என்று நீள்கின்றன. பதினைந்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகளும் கிடைத்துள்ளன.

கல்லூரியில் மாணவர்களை ஒருங்கிணைத்து தலைமைப்பண்பு மையத்தையும் நிறுவியிருக்கிறார். திறன்மிக்க மாணவர்கள் மற்றவர்கள் கற்க வழிகாட்டியாக விளங்கும்படி அவர்களைக் கூர்மைப்படுத்துவதே மையத்தின் நோக்கம். அந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சிகள், உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் போன்றவற்றை அமைத்து வருகிறார்கள்.

கலாம் பிறந்த தினத்தில் வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்போம் என்ற போட்டியை நடத்தி, 200 மாணவர்களுடைய வீட்டில் நூலகம் அமைத்துக் கொடுத்துள்ளார். மாணவர்கள் வகுப்பிற்குச் செல்லும்போது வகுப்பறையில் உள்ள `கலாம் அவர்கள் மாணவர்களுக்குச் சொன்ன பத்து உறுதிமொழி’ களைப் படித்து விட்டுத்தான் வகுப்பறையில் அமர வேண்டும் என்ற நெறியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இப்படி படிப்பைத் தாண்டி மாணவர்களை நெறிப்படுத்தும் அவரைச் சந்தித்தபோது மற்ற கல்லூரிகளிலும் மதுராந்தகத்தின் வாசனை பரவினால் நல்லது என்று நினைத்தேன்.

அவரை நான் சந்தித்தது ஓர் அமாவாசை அன்று.

ஆனால் அமாவாசைக்கும், அந்த பேராசிரியர் முகமது அப்துல் காதருக்கும் சம்பந்தம் இருக்கிறது, இருளடைந்த இதயங்களில் பவுர்ணமியைப் படர விடுவதால்.

பார்த்தது...

‘டப்பா’ என்கிற மராத்தி குறும்படம். வர்ஷா தன்டாலே இயக்கியது.

புகைவண்டி நிலையம். நடுத்தர வயதுப் பெண்மணி பரபரப்புடன் மகளோடு எப்போது ரெயில் வரும் என வினவிக்கொண்டிருக்கிறாள். ரெயில் வந்து விட்டது. அம்மாவுக்கு மகள் சரியாக ஏறி இருக்கையில் அமர வேண்டுமே என்கிற பதற்றம்.

மகள் இருக்கையில் அமர, ‘யார் எதைக் கொடுத்தாலும் சாப்பிட வேண்டாம். மயக்க மருந்து கலந்திருப்பார்கள்’ என்று பகிரங்கமாக எச்சரிக்கிறாள்.

வண்டி புறப்படுகிறது. எதிரே கணவன், மனைவி, சிறுவன். அவர்களிடம் சிறிது நேரத்தில் பழகி அன்னியோன்யமாகி விடுகிறாள். விடுதியில் தங்கி படிப்பதாகவும், விடுமுறைக்கு வீட்டிற்கு வந்ததாகவும் குறிப்பிடுகிறாள்.

அப்போது கம்பார்ட்மெண்டை சுத்தம் செய்து காசு கேட்கிற ஒருவன் அந்த சிறு வனுக்கு சாக்லேட் ஒன்றைத் தருகிறான். தந்தை வாங்கக் கூடாது என்று கண்டித்து அனுப்புகிறார். அந்தக் குழந்தையை தன் பக்கம் அமருமாறு சொல்லி தன்னிடமிருக்கிற சாக்லேட்டைத் தருகிறாள்.

சிறிது நேரத்தில் தன் டிபன் பாக்சை எடுக்கிறாள். அதில் சமைத்த உணவு. ‘எனக்கு இன்று விரதம். பழம் இருந்தால் நன்றாக இருக்கும். அம்மா சமைத்துக் கொடுத்திருக்கிறாள். நீங்கள் சாப்பிடுங்கள்’ என எதிரே இருப்பவர்களிடம் சொல்கிறாள்.

அவர்கள் ஆப்பிளை எடுத்து அவளிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் அவள் உணவை சாப்பிடுகிறார்கள்.

சிறுவன் தூங்கி விடுகிறான். தந்தை அவனை மடியில் வைத்துக்கொள்கிறார். ஸ்டேஷன் நெருங்குகிறது. தூங்குகிற கணவனை மனைவி எழுப்புகிறாள். சிறிது நேரத்தில் அவளும் மயங்கிவிடுகிறாள்.

அதற்குள் அந்த இளம்பெண் இறங்குமிடத்திற்கு வருகிறாள். பக்கத்து கம்பார்ட்மெண்டிலிருந்து தாய் திருட்டுப் பார்வையுடன் எட்டிப் பார்க்கிறாள். மகிழ்ச்சிப் புன்னகையுடன் காரியம் முடிந்தது என தோளில் தொங்கும் பையைக் காட்டுகிறாள்.

உள்ளே நகைகளை இழந்து கணவன், மனைவி, மகன் மூவரும் மயங்கிக் கிடக்கிறார்கள்.

Next Story