2021-22-ஆம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கு 10% குறையும் மத்திய அமைச்சர் நம்பிக்கை


2021-22-ஆம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கு 10% குறையும் மத்திய அமைச்சர் நம்பிக்கை
x

2021-22-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கு 10 சதவீதம் குறையும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

2021-22-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கு 10 சதவீதம் குறையும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எண்ணெய் பயன்பாடு

நம் நாட்டில் கச்சா எண்ணெய் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே அதற்கான தேவையும் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் ஏறக்குறைய 80 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.

2013-14-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கு 77 சதவீதம் என்ற அளவில் இருந்தது. 2014-15-ஆம் ஆண்டில் மொத்த எண்ணெய் தேவைப்பாட்டில் இறக்குமதியின் பங்கு 78.3 சதவீதமாக உயர்ந்தது. 2015-16-ஆம் ஆண்டில் அது 80.6 சதவீதமாக மேலும் உயர்ந்தது. 2016-17-ல் 81.7 சதவீதமாக அதிகரித்தது. 2017-18-ல் 82.9 சதவீதமாக உயர்ந்தது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) 83.7 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

மத்திய அரசு இலக்கு

2022-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அண்மைக் கால புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது அடுத்த 3 ஆண்டுகளில் இறக்குமதி தேவையை 67 சதவீதமாக குறைக்க நினைப்பது பெரும் சவாலாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த 2013-14-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021-22-ல், நாட்டின் மொத்த எண்ணெய் தேவைப்பாட்டில் இறக்குமதி கச்சா எண்ணெயின் பங்களிப்பை 10 சதவீதம் குறைக்க முடியும் என்றும், அந்த இலக்கை நோக்கித்தான் நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.

67 சதவீத பங்கு

மத்திய அமைச்சரின் எதிர்பார்ப்புகளின்படி 2021-22-ல் மொத்த உள்நாட்டு எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கு 67 சதவீதமாக குறைய வேண்டும். எனினும் உள்நாட்டு உற்பத்திக்கும், தேவைப்பாட்டிற்கும் இடையே நிலவும் இடைவெளியைப் பார்க்கும் போது இந்த இலக்கை எட்டுவது கனவுதான் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. உள்நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் பெருமளவை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இறக்குமதி நிலவரம்

2016-17-ஆம் நிதி ஆண்டில், நம் நாடு 7,020 கோடி டாலருக்கு (சுமார் ரூ.4.70 லட்சம் கோடி) 21.39 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. 2017-18-ஆம் ஆண்டில் சுமார் 8,800 கோடி டாலருக்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) அது 11,190 கோடி டாலரை எட்டி இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 27.15 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நம் நாடு 23.30 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் என்றும், இதற்காக 11,270 கோடி டாலர் செலவிட வேண்டி இருக்கும் என்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் ஆய்வுப் பிரிவு மதிப்பிட்டுள்ளது. இதன்படி சென்ற ஆண்டை விட செலவினம் 0.71 சதவீதம் மட்டும் அதிகரிக்கும்.

ரூபாய் மதிப்பு

மத்திய பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் ஆய்வுப் பிரிவின் மார்ச் காலாண்டு மதிப்பீடுகளின்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் விலை உயர்ந்தால் இறக்குமதி செலவு ரூ.3,029 கோடி அதிகரிக்கும். இதே போன்று ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் குறையும்போது இறக்குமதி செலவினம் ரூ.2,473 கோடி உயரும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story