ஆன்மிகம்

தீராத நோய் தீர்க்கும் செல்வச் சன்னிதி முருகன் + "||" + Healing the chronic Selvashi Sannidhi Murugan

தீராத நோய் தீர்க்கும் செல்வச் சன்னிதி முருகன்

தீராத நோய் தீர்க்கும் செல்வச் சன்னிதி முருகன்
பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்.
லங்கையின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று, வடஇலங்கையின் கதிர்காமமாக போற்றப்படும் தலம், வீரபாகு கால் வைத்த பூமி, ஐராவசு சாப விமோசனம் பெற்ற இடம், சிகண்டி முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற ஆலயம், சோழனின் தளபதி தொண்டைமான் கருணாகரன் திருப்பணி செய்த கோவில், மீனவர் அடியார் மருதர் கதிர்காமர் திருப்பணி செய்த திருத்தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்.

‘ஆறு திருப்பதிகண் டாறெழுத்து மன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே’ என்ற குமரகுருபரரின் வாக்கிற்கிணங்க, இலங்கையிலும் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளன. கதிரைமலை, உகந்தமலை, மாவிட்டபுரம், கந்தவனம், செல்வச்சன்னிதி, நல்லூர் ஆகிய இந்த ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்வதுதான் செல்வச் சன்னிதி ஆலயம். தெற்கே கதிர்காமம், வடக்கே செல்வச்சன்னிதி விளங்குவதுடன், இவ்விரு தலங்களின் வழிபாட்டு முறைகளிலும் ஒற்றுமையே காணப்படுகிறது.

கி.பி.1935-ல் வெளியான வண்ணை நெ.வை.செல்லையா எழுதிய ‘தொண்டை மானாற்றுச் செல்வச் சன்னிதி வடிவேல் பதிகம்' இத்தலத்தினைப் புகழ்ந்துரைக்கிறது. சிங்கள வரலாற்று நூலான ‘மகாவம்சம்' புத்தகத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தொண்டைமானாறில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மருதர் கதிர்காமர் என்ற முருக பக்தர் வாழ்ந்து வந்தார். தன் பக்தரான இவரிடம், முருகப்பெருமான் பல்வேறு திருவிளையாடல்களைப் புரிந்தார். ஒருநாள் மருதர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தற்போதுள்ள இடத்திலேயே தனக்கு ஆலயம் எழுப்பி பூஜைகள் செய்யுமாறு பணித்தார். அதன் படியே, அதே இடத்தில் ஆலயம் எழுப்பி பூஜைகள் செய்து வரலானார். இவர் வழிவந்தவர்களே இன்றும் ஆலயத்தில் பூஜைகள் செய்து வருகிறார்கள்.

தேவ ரிஷி என்று புகழப்படும் சிகண்டி முனிவர், தமிழில் புலமை பெற விரும்பி முருகப் பெருமானை வேண்டி நின்றார். முருகனின் அறிவுரைப்படி, அகத்தியரிடம் தமிழைக் கற்றுணர்ந்தார். அதன்பின் கதிர்காமத்து முருகனை வழிபட விரும்பி, தன் சீடர்களுடன் இலங்கை சென்றார். ஆலயத்தை நெருங்கும் வேளையில், மதம் கொண்ட யானை ஒன்று, சிகண்டி முனிவரை வழிமறித்தது. சிகண்டி முனிவர் சற்றும் பயம் கொள்ளாது, அங்கிருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஒரு இலையைப் பறித்து, முருகப்பெருமானை தியானித்து, யானையின் மீது வீசினார். அந்த வெற்றிலையானது, வேலாக மாறி யானையை இரண்டாகக் கிழித்தது. அதில் இருந்து தேவலாகத்தைச் சேர்ந்த ஒருவன் வெளிப்பட்டான். அவன் சிகண்டி முனிவரை வணங்கி, “அடியேன் பெயர் ஐராவசு. வியாழ பகவானின் சாபத்தினால் இந்த நிலையை அடைந்தேன். தாங்கள் வீசிய வெற்றிலையாலும், கதிர்காமத்தானின் அருளாலும் என் சாபம் நீங்கி, பழைய வடிவம் கிடைத்தது, நன்றி” என்று கூறி தேவலோகம் சென்றான்.

இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் விதமாக வெற்றிலையை வைத்து ‘பத்திரசக்தி வழிபாடு’ இன்றளவும் இந்த ஆலயத்தில் நடைபெற்று வருகிறது. வேலின் நடுவில் முக்கோண பொட்டுடன் வெற்றிலையை வைத்து வீதியுலா வருவார்கள்.

இந்தப் பகுதியில் ஆலயம் முன்பாக பாயும் ஆற்றில் குளித்து, இத்தல இறைவனை வழிபாடு செய்தால், தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். சூரபத்மனிடம் தூது சென்ற வீரவாகு, இந்த இடத்தில்தான் தன்னுடைய காலடியை முதலில் பதித்தார் என்று, ஆலய தல வரலாறு சொல்கிறது. அதற்குச் சான்றாக, வீரவாகுவின் பாதச்சுவடு ஆலயத்தின் வடக்குப் பகுதியில் காணப்படுகிறது.

இத்தலத்து முருகப்பெருமான், ‘செல்வச் சன்னிதி முருகன், ஆற்றங்கரை வேலன், ஆற்றங்கரை யானை, கல்லோடையான், கல்லோடைக்கந்தன், அன்னக்கந்தன், அன்னதானக் கந்தன்’ என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார். கருவறையில் முருகப்பெருமானின் சிலா வடிவத்திற்கு பதிலாக ‘வேல்’ தான் மூலவராக இருக்கிறது. இந்த ஆலயம் அன்னதானத்திற்கு புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. இக்கோவிலைச் சுற்றி 45 அன்னதான மடங்கள், பக்தர்களின் பசிப்பிணியைப் போக்கி வருகிறது. இதனால்தான் இத்தல முருகனை ‘அன்னதானக் கந்தன்' என்று போற்றுகின்றனர். போர்ச்சூழலால் பாதிக்கப்பட்டு, மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் இந்த ஆலயத்தில், இப்போதும் பல்வேறு திருப்பணிகள், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரி சனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

இலங்கை நாட்டின் வடமாகாணமான யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை அருகே, பழமையான தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. பருத்தித் துறையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும், கொழும்பில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.

தொன்மை வரலாறு

கி.பி. 11 மற்றும் 12-ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் இலங்கையை ஆட்சி செய்தவன், முதலாம் விஜயபாகு. இலங்கை மன்னன் சோழன் மீது பகைமை கொண்டிருந்தான். தன்னிடம் போர் செய்ய முடியுமா? என சவால் விடுத்தான் என, சிங்கள வரலாற்று நூலான ‘மகாவம்சம்’ கூறுகிறது. சவாலை ஏற்ற சோழன், தன் பிரதான தளபதியான தொண்டைமான் கருணைகரனைப் போருக்கு அனுப்பினான். தொண்டைமான் வெற்றி பெற்று அந்தப் பகுதியைச் சோழப் பேரரசோடு இணைத்தான். அங்கு ஓடிய ஆறு கடலில் சங்கமிக்காத நிலையில், கால்வாய் வெட்டி கடலில் சங்கமிக்க வைத்தான். அது முதல் அந்த ஆறும் அப்பகுதியும், ‘தொண்டைமானாறு’ என வழங்கப்படலானது. உவர்நீர் உள்ளே வந்ததால், உப்பு உற்பத்தி தொடங்கியது. கரணவாய், செம்மேனி, வெள்ளப்பராய் ஆகிய பகுதிகளில் விளைந்த உப்பு தமிழகத்திற்கும் ஏற்றுமதியானது.

கி.பி. 16-ம் நூற்றாண்டில் வியாபாரம் செய்ய வந்த போர்ச்சுக்கீசியர்கள், இந்தப் பகுதி மக்களிடம் ஏற்பட்ட ஒற்றுமை இன்மையைப் பயன்படுத்தி, ஆட்சியைப் பிடித்தனர். அவர் களது 33 ஆண்டு கால ஆட்சியில் ஏராளமான கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. கி.பி.1658-ல் வந்த ஒல்லாந்தர்கள், 150 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர். இவர்கள் காலத்தில் பல கோவில்கள் மீண்டும் எழுப்பப்பட்டன.

-பனையபுரம் அதியமான்