சிறப்புக் கட்டுரைகள்

கீழடி பொக்கிஷங்கள் + "||" + Kilati treasures

கீழடி பொக்கிஷங்கள்

கீழடி பொக்கிஷங்கள்
நம் முன்னோர்கள் தமிழ்மொழியையும், தமிழனையும் பெருமைப்படுத்தி பாடிய பாடல் வரிகளுக்கெல்லாம் அறிவியல் ஆதாரங்கள் கேட்டு நகைத்த நிகழ்வுகள் உண்டு.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என கணியன் பூங்குன்றனார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார்.

அப்போதே தமிழன் உலகளாவிய சிந்தனையுடன் விளங்கியுள்ளான் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன.

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்த குடி” என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.

நம் முன்னோர்கள் தமிழ்மொழியையும், தமிழனையும் பெருமைப்படுத்தி பாடிய பாடல் வரிகளுக்கெல்லாம் அறிவியல் ஆதாரங்கள் கேட்டு நகைத்த நிகழ்வுகள் உண்டு. இதற்கெல்லாம் ஆதாரமாக அள்ள அள்ள கொடுக்கும் அமுதசுரபியாய் கீழடியில் அகழாய்வு மூலம் பொருட்கள் கிடைத்து வருகின்றன.

வைகை நதி நாகரிகமானது சிந்து சமவெளி, மொகஞ்சதாரோ, ஹரப்பாவை பின்னுக்கு தள்ளக்கூடியது என்று கீழடி அகழாய்வு முடிவுகள் அறைகூவல் விடுத்துள்ளது.

ஓடுகளால் வேயப்பட்ட வீடுகள், சமையல் செய்து உணவருந்தியதற்கான ஆதாரங்களாக அடுப்பு, மண்பாண்டங்கள், உறை கிணறுகள், வரி வடிவ எழுத்துகள் என நாகரிகத்துடன் அக்கால தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். இவற்றின் காலம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்போதைய வாழ்க்கை முறையில் பெரும்பாலானவற்றை இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

கீழடியில் 5 கட்ட அகழாய்வில் ஆயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்துள்ளன. அதில் 4 மற்றும் 5-வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் மதுரையில் உள்ள உலகத்தமிழ் சங்கத்தில் கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. 2 அரங்கங்களில் கீழடியில் கிடைத் பொருட்களும், 3-வது அரங்கத்தில் ‘3-டி தொழில்நுட்பம்’ மூலம் பொருட்களை காணும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த கண்காட்சியை இலவசமாக காணலாம்.

தினமும் ஏராளமான மக்கள் இந்த கண்காட்சியை கண்டு, தமிழர்களின் பெருமையை அறிந்து வருகிறார்கள்.முப்பரிமாண காட்சி

கண்காட்சியில் உள்ள தொழில்நுட்ப அரங்கு கீழடியில் கிடைத்த பொருட்களில் 30 பொருட்களை வைத்து 3-டி (முப்பரிமாணம்) தொழில்நுட்பத்தின் மூலம் அவற்றை பார்வையாளர்கள் தொட்டு பார்க்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ‘விர்ச்சுவல் ரியாலிட்டி எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற அரங்கம் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு என்னவென்றால் 3-டி தொழில்நுட்பம் மூலம் மண்பாண்டம் உள்ளிட்ட பொருட்களை 3-டி மூலம் ஸ்கேன் செய்து, காட்சியாக பதிவேற்றி உள்ளனர். பார்வையாளர்கள், தங்களது கண்களில் பிரத்தியேகமான கண்ணாடியை (விர்ச்சுவல் கிளாஸ்) மாட்டிக்கொண்டு 3-டி தொழில்நுட்பம் மூலம் அந்த பொருட்களை தொட்டு பார்க்கலாம்.

அதேபோல ‘புளோர் புரொஜெக்‌ஷன்’ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் தரையில் அனிமேஷன் வீடியோவும் ஓடுகிறது. அதில் குளத்தில் மீன்கள் சுற்றித்திரிவது, கால் வைத்தால் பூக்கள் மலருவது போன்று புதுமைகள் இடம்பெற்றுள்ளன. இதுவும் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை கவருகிறது.தந்தம் தந்த பகடைக்காய்

கண்காட்சியில் பகடைக்காய் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த பகடைக்காயும் விளையாட்டு சாதனமாக இருந்திருக்கலாம். இரும்பு, செம்பு, பித்தளை, மரக்கட்டைகளில் பகடைக்காய் பார்த்திருப்போம். ஆனால், கீழடி கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பகடைக்காய் வித்தியாசமானது. யானை தந்தத்தால் செய்யப்பட்டது எனவே இந்த பகடைக்காயை அக்காலத்து செல்வந்தவர்கள் விளையாடுவதற்கு பயன்படுத்தியதாக தொல்லியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற்ற அகழாய்வு பணிகளில் இதுபோன்ற தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் வேறு எங்கும் கிடைக்கவில்லை எனவும், இதுவே முதல்முறை எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த பகடைக்காய் மூலம் இன்னொன்றையும் நாம் அறிய முடியும். அதாவது, சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே கீழடி மக்கள் யானை தந்தத்தில் இருந்து பலவகையான அரிய பொருட்களை செதுக்கி உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு சான்றுதான் அந்த பகடைக்காய்.

உருவங்கள் பல...

சுடுமண் உருவங்கள் பல கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காளையின் தலை, குதிரை தலை, மனிதத்தலை, குழந்தையின் உருவம் ஆகியவை இதில் அடங்கும்.

கிரீடம் அணிந்தது போன்ற தலை ஒன்றும் கிடைத்திருக்கிறது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்த தலையானது, அப்போது ஆட்சி செய்தவரின் உருவத்தை வைத்து செய்யப்பட்டதா? அல்லது வழிபாட்டு உருவமா? என்ற கேள்வி தொல்லியல் அறிஞர்கள் உள்பட அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு நடந்து வருவதாக தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

கீழடி அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற பெயர்களும், முழுமைபெறாத சில எழுத்துகளுடன்கூடிய உடைந்த பானை ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் வரும் ‘ஆதன்’ என்ற பெயர் ‘அதன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழடி தமிழ் பிராமி எழுத்துகள், இப்போதைய எழுத்து வடிவங்களுக்கு முந்தியவை என்று வரலாற்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகளை கண்காட்சியில் நாம் பார்க்கலாம்.

கீழடியில் கிடைத்த கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள் சிலவற்றின் மாதிரிகள் நிறமாலையியல் பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகளின்படி சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப்பொருளான ஹேமடைட் என்பதையும், கருப்பு நிறத்திற்கு கரிமப் பொருளான கரியையும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கீழடியில் கிடைத்த மண்பாண்டங்களில் சில பொருட்களில் சின்ன சின்ன துளைகள் இருந்தன. குறிப்பாக, மண்பானையை மூடுவதற்கான மூடி முழுவதிலும் அதுபோன்ற துளைகள் காணப்பட்டன. அதாவது உணவு சமைக்க வசதியாக இந்த துளைகள் போடப்பட்டு இருக்கலாம். இப்போதும் சமையல் பாத்திரங்களிலும், கரண்டி போன்றவற்றில் சின்ன சின்ன துவாரங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. அக்காலத்திலேயே தமிழர்கள் இந்த வித்தையை செய்து காட்டி இருக்கிறார்கள்.

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச்சாந்து, கூரை ஓடுகள் மற்றும் சுடுமண்ணால் ஆன உறைகிணறுகள் அக்காலத்தைய தமிழர்களின் நாகரிக வாழ்வையே வெளிப்படுத்துகின்றன. இவை ஒவ்வொன்றிலும் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் காணக்கிடைக்கின்றன என சோதனை முடிவுகள் கூறியுள்ளன.கீழடியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு கட்ட அகழாய்வுகளில் வெளிப்பட்ட கட்டுமானங்களில் 13 மீட்டர் நீள சுவர் ஒன்றும் அடங்கும். மேலும் செங்கல் ஓடுகளால் ஆன மேற்கூரையும், சரிந்த நிலையில் வெளிப்பட்டது. அந்த மேற்கூரையை தரையுடன் இணைக்க மரத்தூண் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தி உள்ளனர். மேலும், கூரை ஓடுகளின் தலைப்பகுதியில் காணப்படும் துளைகள் மூலம் அவை சரியாமல் இருக்க கயிறு அல்லது நார் கொண்டு கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்க முடிக்கிறது. கூரை ஓடுகளின் மீது விழும் மழை நீர் எளிதாக கீழே வரும் வகையில் சிறிய ஓடை போன்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளனர். அதன் மாதிரியையும் கண்காட்சியில் பார்த்து ரசிக்கலாம்.

கீழடி அகழாய்வில் கிடைத்த சூது பவளம் (கார்னீலியம்) முக்கியமானது. இவை ரோம் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கீழடியிலேயே தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என கூறுகிறார்கள்.

ரோம் நாட்டு அரிட்டைன் பானை ஓடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இது போன்ற பானைகள் கி.மு. 2-ம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் புழக்கத்தில் இருந்தவை என்கின்றனர். எனவே ரோம் நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் கீழடிக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது. அக்கலாத்திலேயே தமிழர்கள் வெளிநாட்டு வணிகத்திலும் சிறந்து விளங்கி இருக்கலாம் என்பதற்கு சான்றாக உள்ளது.

சதுரங்கத்தின் தாய் விளையாட்டா?

கீழடி அகழாய்வில் பண்டைய தமிழர்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததை நிரூபிக்கும் வகையில் பல வகையான பொருட்கள் கிடைத்துள்ளன. பல்வேறு வடிவங்களில் பல்வேறு குறியீடுகள் பொறிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஆட்டக்காய்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளன. ஆட்டக்காய்களை வைத்து விளையாடும் சதுரங்க விளையாட்டையோ அல்லது அது போன்ற வேறு ஒரு விளையாட்டையோ நம் முன்னோர் இந்த காய்களை கொண்டு விளையாடி இருக்கலாம் என்று கருத்தப்படுகிறது. ஒருவேளை சதுரங்கத்தின் தாய் விளையாட்டாக கூட அது அமைந்து இருக்கலாம். கண்காட்சியில் அந்த காய்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு குறிப்பும் எழுதப்பட்டுள்ளது. அதில், கருப்பு, வெள்ளை கட்டங்கள் வரைந்த அட்டைகளை கொண்டு இருவர் மட்டும் எதிர் எதிரே அமர்ந்து ஆடும் ஆட்டம். ஒவ்வொரு ஆட்டக்காரரும் 16 காய்கள் வைத்து விளையாடுவர். ஒருவர் எத்தனை காய்களை வீழ்த்துகிறாரோ அவர் ஆட்டத்தில் வெற்றி பெற்றதாகவும், காய்களை இழந்தவர் தோல்வி அடைந்ததாகவும் கருதப்படுவார் என எழுதப்பட்டுள்ளது.

வணிகத்திலும் அசத்தல்

கண்காட்சியில் கூம்பு, நட்சத்திரம் போன்ற வடிவங்களில் கிடைக்கப்பெற்ற தங்க ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பண்டைய தமிழர்களில் வசதி படைத்தவர்கள் தங்க அணிகலன்களையும் அணிந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றாக இவை உள்ளன. வசதியில்லாதவர்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகளை அணிந்துள்ளனர். அவர்கள் அணிந்த காதணிகளும் கீழடி கண்காட்சியில் இருக்கின்றன. அவை தென்னங்கீற்று வடிவம், நட்சத்திர வடிவம் என பல வடிவங்களில், நிறங்களில் இருக்கின்றன.

4-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களில் கல், கண்ணாடி மணிகள் முக்கியமானவை. குஜராத், மராட்டியம் போன்ற இடங்களில் பயன்படுத்தும் கல் மணிகளும் கீழடியில் கிடைத்துள்ளன. எனவே இந்த மணிகளை அந்தந்த மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து, பண்டைய தமிழர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது. சிறு, சிறு மணிகளாக அவற்றை அறுத்து, அதில் நூல்கள் மூலம் மாலை தொடுத்து அணிந்திருக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் கல், பாசி, கண்ணாடி மணிகள் கிடைத்தது இதுவே முதல் முறை. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை, இளம்சிவப்பு உள்ளிட்ட பல நிறங்களில் ஏராளமான கல் மணிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இப்படி அணிகலன்களின் தந்த ஆதாரம் மூலம் பண்டைய தமிழர்கள், வெளிமாநிலத்தவருடன் வணிக தொடர்பிலும் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையும் உலகுக்கு பறைசாற்றப்படுகிறது.

‘ஸ்மார்ட் கிச்சன்’

உணவு பரிமாறும் மேஜையில் தட்டுகள், கரண்டி, கோப்பைகள், டம்ளர்கள் என சில பொருட்கள் இருக்கும். அதாவது, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகை பொருள் என வகைப்படுத்தி மேஜையில் வைத்திருப்போம். நாகரிக உலகம் என்று வியாபித்து கூறப்படும் இந்தக்காலத்தில் இந்த பொருட்களில் எத்தனையோ புதிய மாடல்கள் வந்துவிட்டன. ஆனால், 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்களும் இதே நாகரிகத்தோடு தங்கள் சமையல் அறையையும், உணவு பரிமாறும் இடத்தையும் அழகுற வைத்திருந்தார்கள் என்றால் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது. அதற்கு சான்றாகத்தான் கீழ்கண்ட கீழடி பொருட்கள் இருக்கின்றன...

அந்த பொருட்கள் அனைத்தையும் சுடுமண்ணால் செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள். அளவுக்கு தகுந்தபடி விதவிதமான பானைகள், கருப்பு-சிவப்பு குவளைகள், தண்ணீர் ஊற்ற பயன்படும் மூக்குப்பகுதியை கொண்ட பானை, மூடிகள், விறகு அடுப்பில் சமைத்து முடித்து, இறக்கி வைக்கும் போது தரை கரியாகிவிடமால் இருக்க அந்த பானைகளை தாங்கும் தாங்கிகள் என ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.

‘ஸ்மார்ட் கிச்சன்’ என்று இப்போது கூறப்படும் நவீன சமையல் அறையை அக்காலத்தியே தமிழர்கள் வடிவமைத்து இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. இதில் மூக்குப்பகுதியை வைத்து செய்யப்பட்ட சுடுமண் கெண்டி, கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

அது என்ன தக்களி?

தக்களி என்பது நூல் நூற்க பயன்படும் ஒரு சிறு கருவி. 200-க்கும் மேற்பட்ட தக்களி என்ற கருவிகள் கீழடியில் நடந்த அகழாய்வில் கிடைத்துள்ளள. இந்த தக்களிகள் களிமண், மணல்கல், சோப்புக்கல் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளன. இதில் துளையிட்டு அதில் ஒரு கம்பி அல்லது குச்சியை சொருகி நூல் நூற்கலாம். இதன் மூலம் பண்டைய தமிழர்கள் நெசவு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதும், ஆடைகளை அவர்களே தயார் செய்து இருக்கிறார்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற்ற அகழாய்வு பணிகளில் இதுபோன்ற தக்களிகள் ஏராளமான கிடைத்துள்ளதாகவும், மற்ற இடங்களில் கிடைத்ததை விட கீழடியில் அதிக எண்ணிக்கை கொண்ட தக்களிகள் கிடைத்ததாக தொல்லியல் வல்லுனர்கள் விளக்கம் அளித்தனர்.

சில்லுகளும்... விளையாட்டும்...

பண்டைய தமிழர்கள் விளையாட பயன்படுத்திய பொருட்களில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்ட சில்லுகளும் ஒன்று. கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 100-க்கும் மேற்பட்ட வட்ட சில்லுகள் கிடைத்துள்ளன. இவை சிவப்பு, கருப்பு, மஞ்சள், இளம்சிவப்பு உள்ளிட்ட பல நிறங்களில் கிடைத்துள்ளன. ஏழை எளிய மக்கள் இதுபோன்ற வட்ட சில்லுகளை பயன்படுத்தி சில விளையாட்டுகளை விளையாடி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுபோல், சுடுமண் சக்கரங்களும் கிடைத்துள்ளன. அந்த சக்கரங்களை பயன்படுத்தி மண்ணால் வண்டி செய்து அவற்றின் மூலம் விளையாடி இருக்கலாம் என தெரிகிறது.