சிறப்புக் கட்டுரைகள்

போலீஸ்காரர் நடத்தும் பள்ளிக்கூடம் + "||" + A school run by a policeman

போலீஸ்காரர் நடத்தும் பள்ளிக்கூடம்

போலீஸ்காரர் நடத்தும் பள்ளிக்கூடம்
தெருவில் சுற்றித்திரிந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்-சிறுமியர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்காக பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார், போலீஸ்காரர் தரம்வீர் ஜாகர்.
இவர் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சுரு மாவட்டத்தை சேர்ந்தவர். ரோந்து பணியின்போது ஏராளமான சிறுவர்கள் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறார். அவர்களுடைய பெற்றோர்தான் படிக்க வைக்காமல் பிச்சை எடுக்க வைத்திருப்பதாக கருதி விசாரித் திருக்கிறார். ஆனால் அவர்கள் அனை வருக்கும் பெற்றோர் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. அவர்களும் மற்ற சிறுவர்களை போல பள்ளிக்கூடம் சென்று படிக்க ஆர்வமாக இருப்பதை அறிந்த ஜாகர் முதலில் தினமும் ஒரு மணி நேரம் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

பின்பு அவர்களுக்கு முழுநேர கல்வி போதிக்கும் எண்ணத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இந்த பள்ளிக்கூடம் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் தலைமையகத்தை யொட்டியுள்ள பெண் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது. அங்கு தற்போது 450 பேர் படிக்கிறார்கள். அவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், பேக்குகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

‘‘பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களிடம் நான் விசாரித்தபோது அவர்கள் தங்களுக்கு பெற்றோரோ, உறவினர்களோ இல்லை என்று சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர்கள் பொய் சொல்வதாக கருதினேன். அவர்கள் வசிக்கும் குடிசை பகுதிக்கு சென்று விசாரித்தபோது அவர்கள் அனாதை என்பதை உணர்ந்தேன். அங்கு வசிப்பவர்கள் இவர்கள் தங்குவதற்கு மட்டும் இடம்கொடுத்திருக்கிறார்கள். ஒருசிலர்தான் அவர்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதை அறிந்தேன். அவர்களுக்கு நாம் உதவி செய்யாவிட்டால் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுத்துதான் காலத்தை ஓட்டுவார்கள் என்பதை உணர்ந்து பள்ளிக் கூடம் ஆரம்பிக்கும் முடிவுக்கு வந்தேன்’’ என்கிறார், தரம்வீர்.

தற்போது இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை 360 பேர் படிக்கிறார்கள். ஆறாம், ஏழாம் வகுப்புகளில் 90 பேர் படிக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது. அதனை சமாளிப்பது இவருக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. போலீசார் மற்றும் தொழிலதிபர்களிடம் நன்கொடை பெற்று பள்ளியை நிர்வகித்துக்கொண்டிருக்கிறார்.