சிறப்புக் கட்டுரைகள்

மழையும் மனசும்: ஒருபுறம் இன்பம்.. மறுபுறம் துன்பம்.. + "||" + On the one hand pleasure .. Misery on the other hand ..

மழையும் மனசும்: ஒருபுறம் இன்பம்.. மறுபுறம் துன்பம்..

மழையும் மனசும்: ஒருபுறம் இன்பம்.. மறுபுறம் துன்பம்..
மழை, மனதுக்கு உற்சாகத்தை தருகிறது. பெய்யும் மழையை ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
ழை, மனதுக்கு உற்சாகத்தை தருகிறது. பெய்யும் மழையை ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. மழையில் நனைந்த அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சிலிர்ப்பைத்தரும். ஒவ்வொரு மழையிலும் அதை நினைத்துப்பார்ப்பதே உள்ளத்திற்கு உவகையை தரும்.

மழை, மனதுக்கு மறக்க முடியாத அனுபவங்களை தந்தாலும், தொடர்மழை இயல்பான வாழ்க்கைக்கு ஒருவித தடுமாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும். கடந்த மழையில் ஏற்பட்ட பாதிப்புகள் யாவும், இந்த மழையில் நினைவுக்கு வரும். ‘அன்றுபோல் இன்றும் ஏற்பட்டுவிடுமோ’ என்ற பயத்தையும் லேசாக உருவாக்கும்.

அதே நேரத்தில் ‘மழையும் ஒரு மருத்துவர்தான்’ என்று மருத்துவ உலகம் சொல்கிறது. மழையால் ஏற்பட்ட விபத்துக்களில் பாதிக்கப்பட்ட சிலர் அதனால் நினைவிழப்பிற்கு உள்ளாகியிருப்பார்கள். அதே போன்ற மழையால் அவர்களுக்கு மீண்டும் நினைவு திரும்ப வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள், மருத்துவ நிபுணர்கள். அதே போல் சிலர் தனிமை உணர்வால் தவித்துக்கொண்டிருப்பார்கள். தன்னிடம் மனம்விட்டுப்பேச யாரும் இல்லையே என்று நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மழைவந்துவிட்டால், மழை தொடர்புடைய பல இனிமையான நினைவுகள் அவர்களது நினைவுக்குவரும். அவரது மனதுக்கு பிடித்த யாருடனாவது மழையில் நனைந்தபடி பேசிக்கொண்டிருந்திருப்பார். அந்த நினைவுகளை எல்லாம் மழை கொண்டு வந்து, அவருக்குள் உற்சாகத்தை ஊற்றெடுக்கவைத்து, தனிமையை போக்கும் வாய்ப்பும் உண்டு. பொதுவாக தொடர் மழையும், இடியும் மின்னலும் ஒருவித பயத்தை ஏற் படுத்தவேசெய்யும். திடீரென்று பரவும் இருள், மனதிற்குள் இனம்புரியாத திகிலையும் உருவாக்கலாம். அப்படி ஒரு திகில் உருவாக நாம் பார்த்த சினிமாக்கள் காரணமாக இருக்கும். திகில் காட்சியை காட்ட வேண்டு மானாலும், கிளுகிளுப்பான காட்சியை காட்டவேண்டுமானாலும் சினிமா கலைஞர்கள் மழையை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறார்கள். இன்பரசம் கொட்டும் காட்சிகளையும் மழையை பயன்படுத்தி கோர்த்துவிடுவார்கள். கவிஞர்களும், எழுத்தாளர்களும் கூட மழையை விட்டு வைப்பதில்லை. மழையில் தனிமையில் வீடு திரும்பும் பெண்ணின் அலங்கோல நிலையை சித்தரிக்கும் கதைகள் ஏராளமாக வந்து ‘உச்’ கொட்ட வைத்திருக்கிறது.

மழையில் பல தவறுகள் நிகழ, மனிதர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்தான் காரணம். இதர சீதோஷ்ண நிலைகளின் தாக்கம் நம்மை அவ்வளவாக பாதிப்பதில்லை. மழையின் தாக்கம் தான் வெகுவாக பாதிப்பதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். அது நன்மையாகவும் இருக்கலாம். தீமையாகவும் இருக்கலாம். ஆனாலும் மழையானது மக்கள் போற்ற வேண்டிய ஒன்று. அது உண்ணும் பொருட்களை உண்டாக்கி கொடுத்து, தானும் உணவாக மாறுகிறது.

மழை நீர் உயிர் நீர். மழையின் மகத்துவம் தெரியாதவர்கள் யாரும் இல்லை. மழையின் தொடக்கத்தில் உற்சாகம் ஏற்பட்டாலும் தடைபடும் பணிகளை கருத்தில் கொண்டு ‘போதும்’ என்று நாம் சில நேரங்களில் நினைப்பதுண்டு. சிறு குழந்தை முதல் பெரியவர் வரை ‘ரெயின் ரெயின் கோ அவே’ என்பார்கள். அதிக வெயிலில் தகிக்கும்போது ‘மழை வராதா?’ என்று ஏங்குவதும், மழை விடாமல் தொடரும்போது ‘எப்போது மழை நிற்கும்?’ என்று எதிர்பார்ப்பதும் மனித இயல்பு.

மழையால் மகிழ்ச்சியை மட்டும் நம்மால் பெறமுடியுமா? முடியும். அதற்கு மழையை வரவேற்கவும் தெரிந்திருக்கவேண்டும். மழை பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் மழையை கொண்டாட முடியும். மழையின் தாக்கம் எல்லாதரப்பு மனிதர்களுக்கும் பொதுவானது. அந்த தாக்கத்தை இனிமையாக மாற்றிக் கொள்ள முற்படுவோமேயானால் மழை சுகமானது. மழை அழகானது.

மழைக்காலம் வந்துவிட்டால், அப்போது என்னென்ன மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் தோன்றும் என்பதை மனதில் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். அந்த பிரச்சினைகள் உங்களை பாதிக்காவிட்டால், நீங்களும் மழையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

மழையினால் ஏற்படும் தொந்தரவுகள்:

* வாழ்க்கையின் இயல்பு நிலை பாதிக்கப்படலாம். போக்குவரத்து நெருக்கடி, காலதாமதம், வாகனம் பழுதடைதல்.

* தகவல் தொடர்பு துண்டிக்கப்படுதல்.

* பிரேக்டவுனால் வழியில் நின்று போகும் தங்கள் வாகனங்கள் பற்றிய தவிப்பு.

* சாலையில் சாக்கடை திறந்துகிடப்பது. பள்ளம், மேடு தெரியாமல் வாகனங்கள் தடுமாறுதல்.

* பாலங்களின் அடியில் நீர் தேங்கி மணிக்கணக்கில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுதல்.

* பயணத்தில் சிரமம் ஏற்படுதல். ஆட்டோ போன்ற வாகனங்கள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதிக கட்டணம் கொடுக்கும் நிலை ஏற்படுதல்.

* மின் ஓயர்கள் அறுபட்டு நீரில் விழுதல் போன்ற பல அபாயங்களை தாண்டி வீடு போய் சேரவேண்டிய நிலை.

* வீட்டில் இருப்பவர்களுக்கு, வெளியே போனவர்கள் வீடு திரும்ப வேண்டுமே என்ற தவிப்பு.

* மின் தடையால் வீட்டு வேலைகள் பாதிப்பு.

* தண்டவாளங்களில் நீர் நிறைவதால், ரெயில்கள் ரத்து செய்யப்படுதல்.

* மழைக்கால தொற்று நோய்கள் ஏற்படுதல்.

* மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் பிரச்சினை.

* அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிரமங்கள்.

* மக்கள் மட்டுமல்ல, அரசாங்கமும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகிறது. அதை பற்றி விவரம்:

* தாழ்வான பகுதியில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய கட்டாயம்.

* வெள்ள அபாயம் நேராமல் மக்களை பாதுகாத்தல்.

* கடலுக்கு செல்லும் மீனவர் களுக்கு எச்சரிக்கை விடுப்பது- அவர்களை பாதுகாப்பது.

* அணைக்கட்டுகளின் நீர்த்தேக்க அளவை கண்காணித்தல்- பாதுகாத்தல்.

* தொற்று நோய் பரவாமல் நட வடிக்கை எடுத்தல்.

* சாலை பாதுகாப்பில் கவனம் செலுத்துதல்.

* சாலையோர திறந்தவெளி வடிகால்களை சரிசெய்தல்.

* போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படாமல் தடுத்தல்.

* சுகாதார சீர்கேடு பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

* வீடு இழந்த மக்களை பாதுகாத்தல்.

* வெள்ள மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல்.

* பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வெள்ள நிவாரணம் வழங்குதல்.

* தொடர்ச்சியாக பெய்யும் மழையால் சில நெருக்கடிகள் ஏற்படத்தான் செய்யும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அதை சரிசெய்யலாம்.