நீர் நிலைகள் நிறைந்தது.. நிம்மதி பிறந்தது..


நீர் நிலைகள் நிறைந்தது.. நிம்மதி பிறந்தது..
x
தினத்தந்தி 10 Nov 2019 8:00 AM GMT (Updated: 10 Nov 2019 8:00 AM GMT)

கிராமத்தில் பிறந்து வளர்ந்து திருமணத்திற்கு பிறகு நகரத்தில் குடியேறிவிட்டாலும் பிறந்த பூமியுடனான பந்தத்தை பலரும் மறப்பதில்லை.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து திருமணத்திற்கு பிறகு நகரத்தில் குடியேறிவிட்டாலும் பிறந்த பூமியுடனான பந்தத்தை பலரும் மறப்பதில்லை. பண்டிகை காலங்களிலும், விழா காலங்களிலும் சொந்த ஊருக்கு சென்று கிராமத்துடனான உறவையும், உறவுகளையும் புதுப்பித்துக்கொள்கிறார்கள். அதோடு தன்னை வளர்த்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற காரியங்களை செய்வதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவராகத் திகழ்கிறார், வாழ்வரசி பாண்டியன். 51 வயதாகும் இவருடைய பூர்வீகம், தேனி அருகிலுள்ள காமாட்சிபுரம் கிராமம்.

சென்னை திருவல்லிக்கேணியில் இவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சவுந்தரபாண்டியன். இவர்களுக்கு அலெக்ஸ் பாண்டியன், மோனிகா பாண்டியன் என இரு பிள்ளைகள். மகள் மோனிகா சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கை மீது நேசம் கொண்டவர். அவர் மரங்களால்தான் இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்க முடியும் என்ற எண்ணத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார்.

மகளின் நோக்கத்தை நிறைவேற்றும் முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார், வாழ்வரசி. அதற்காக ‘பச்சை வாழ்வு இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவி மரக்கன்றுகள் நட்டுவளர்ப்பதோடு பிறந்துவளர்ந்த கிராமத்தின் உயிர்நாடியாக விளங்கும் விவசாயத்திற்கும் புத்துயிர் கொடுத்து வருகிறார். கிராமத்தை சுற்றியுள்ள குளங்களை தூர்வாரி மழை நீர் சேமிப்புக்கு அடித் தளம் ஏற்படுத்தி கொடுத்து விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதற்கும் வழிவகை செய்திருக்கிறார்.

மகளின் விருப்பத்திற்கு துணை நின்றதோடு தன்னுடைய கிராமத்தின் நலன் காக்கும் முயற்சியிலும் களம் இறங்கியதற்கான காரணத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார், வாழ்வரசி.

‘‘என் மகள் மோனிகா இயற்கையை உயிராக நேசிப்பாள். அவளை டாக்டருக்கு படிக்கவைக்க ஆசைப்பட்டோம். ஆனால் அவள் இயற்கை மீது கொண்ட ஈடுபாட்டால் தாவரவியல் படித்தாள். முதுகலைப்படிப்பிலும் சுற்றுச்சூழல் சார்ந்த பாடத்தைத்தான் தேர்ந்தெடுத்தாள். எப்போதும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை பற்றித்தான் பேசுவாள். பருவ மழை பொய்த்து போவதற்கு மரங்கள் குறைந்து போனதுதான் காரணம் என்பாள்.

நானும் அதைப்பற்றி சிந்திக்க தொடங்கினேன். என் நண்பர்கள் சிலர் மரக்கன்று நடுவது, இயற்கை விவசாயம் செய்வது போன்ற காரியங்களில் ஆர்வமாக ஈடுபட்டார்கள். அப்போதுதான் ‘நாமும் நம்மால் முடிந்ததை சமூகத்திற்கு செய்வோம். பிறந்து வளர்ந்த ஊரில் இருந்து முதலில் ஆரம்பிப்போம்’ என்று 2017-ம் ஆண்டு எங்கள் கிராமத்தில் மரக்கன்று நடும் பணியை தொடங்கினேன். பள்ளிக்கூடம், கோவில்கள் என பொது இடங்களில் 300 மரக்கன்றுகளை நடவு செய்தோம். அங்குள்ளவர்களுக்கு 200 தென்னை மரக்கன்றுகளையும் வழங்கினோம். எனது தந்தை தோகை பச்சையப்பன், காமாட்சிபுரம் பஞ்சாயத்து தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர். அவருக்கு ஊரில் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு. அதனால் எந்தவித சிரமமுமின்றி அங்கு களப்பணியில் என்னால் ஈடுபட முடிந்தது. ஊர் மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள்’’ என்று தனது சேவையின் தொடக்கத்தை விவரிக்கிறார், வாழ்வரசி.

பின்பு விவசாயிகளும் பலன் பெறும் வகையில் குளங்களை தூர்வாரும் பணியையும் மேற்கொண்டிருக்கிறார். 20 ஆண்டுகளாக சரிவர தூர்வாரப்படாமல் வறண்டு கிடந்த குளங்கள் இவரது முயற்சியால் சீராகி, நீர் நிரம்பி காட்சி அளிக்கிறது.

‘‘நகர்புறங்களில்தான் அதிக அளவில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. கிராமப்புறங்களிலும் மரங்கள் இல்லாத நிலைதான் இருக்கிறது. நான் சிறுமியாக இருந்தபோது பிரமாண்டமாக காட்சியளித்த மரங்கள் இன்று இல்லை. மரங்கள் இல்லாததால் மழையும் குறைந்து போய்விட்டது. அதனால் விவசாயமும் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கிறது. மரக்கன்றுகள் நடவு செய்தாலும் அவை வளர்வதற்கு நீர் வேண்டும். எல்லா காலமும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்க முடியாது. அதற்கு தேவையான நீர் கிடைப்பதற்கு நீர்மட்டம் உயர வேண்டும். அது விவசாயத்திற்கும் உதவுமாறு இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

முதலில் குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய்களை தூர்வாரினோம். அதற்கு ஊர் மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ‘நீ தூர்வாரும் நேரமாவது மழை பெய்யட்டும்’ என்றார்கள். அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே கால்வாயை தூர்வாரி முடித்ததும் மழை பெய்ய தொடங்கிவிட்டது. அதைத் தொடர்ந்து காமாட்சிபுரம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட சின்னகுளத்தை தூர்வாரும் பணியை மேற்கொள்வதற்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டியிருந்தது. கலெக்டரிடம் அனுமதி கேட்க சென்றோம். உடனே அனுமதி கிடைத்துவிட்டது.

ஆனால் தூர்வாருவதற்கு அதிக பணம் செலவாகும் என்றார்கள். நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ‘நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். அப்போதுதான் விவசாயம் நன்றாக நடக்கும்’ என்பதில் உறுதியாக இருந்தேன். பணியை தொடங்கினேன். எங்கள் கிராமத்தில் பிறந்து வெளியூர்களில் வசிப்பவர்களில் சிலர் மற்றும் நண்பர்களும், உறவினர்களும் உதவி செய்தார்கள். அதனால் குளம் மட்டுமின்றி பக்கத்து கிராமமான வேப்பம்பட்டி பஞ்சாயத்துக்கு உள்பட்ட ஜமீன்தார் ஊரணியையும் தூர்வாரினோம்.

பின்னர் குளத்தை சுற்றி மரக்கன்றுகள், பனை விதைகளை ஊன்றினோம். நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே மழை பெய்ய தொடங்கிவிட்டது. மண்ணுக்குள் இருந்து ஆமை வெளியே வந்தது. அது அபூர்வமான நிகழ்வு. அதுநாள் வரைஅந்த குளத்தில்ஆமைகளை பார்த்ததே இல்லை. அது மறக்க முடியாத தருணம்’’ என்கிறார், வாழ்வரசி.

வெளியூரில் தங்கி இருப்பவர்கள் சொந்த கிராமத்திற்கு நல்லது செய்ய நினைத்தால் சில நேரங்களில் ஒரு சிலரால் எதிர்ப்பும் கிளம்புவதாக வேதனையோடு சொல்கிறார். நட்டு வைத்த மரக்கன்றுகளை பராமரிப்பதும் சவாலான பணியாக இருப்பதாகவும் கூறுகிறார்.

‘‘மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் தின்று விடாமல் இருப்பதற்காக வேலி அமைத்தோம். முதலில் மரக்கன்றுகளை சுற்றி தென்னை மர மட்டைகளை ஊன்றி வெங்காய சாக்கு பையை சுற்றி வைத்தோம். தென்னை மரக்கட்டைகளை கரையான் அரித்தது. அதனால் கடைகளில் விற்கப்படும் மரக்கட்டைகளை வாங்கி நட்டு வைத்தோம். அவை அனைத்தையும் ஒருசிலர் எடுத்து சென்றுவிட்டார்கள். அதை பார்த்ததும் மனதிற்கு வேதனையாக இருந்தது. ‘ஆடு, மாடுகளிடம் இருந்து கூட காப்பாற்றிவிடலாம். மனிதர்களிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ?’ என்று கவலைப்பட்டேன்.

அதன் பின்னர் மரக்கன்றுகளை சுற்றி கூண்டு வேலி அமைத்தோம். மரக்கன்றுகள் ஓரளவுக்கு வளரும் வரை கண்ணும், கருத்துமாக பார்க்க வேண்டியிருக்கிறது. எனது அண்ணிகள் வாரம் ஒருமுறை ஊரில் உள்ள சிலரை அழைத்துச் சென்று தண்ணீர் ஊற்றி வருகிறார்கள். ஆரம்பத்தில் மரக்கன்றுகள் நடும்போதெல்லாம் ஊரில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வமாக ஓடோடி வந்தார்கள். அவர்களாகவே மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள். இப்போது ஆர்வம் குறைந்து காணப்படுகிறது.

நான் அவர்களிடம், ‘உங்களுக்காகத்தான் மரக்கன்றுகள் வளர்க்கிறோம். உங்கள் தலைமுறைக்குத்தான் அது பயன் படப்போகிறது’ என்று புரியவைத்துக்கொண்டிருக்கிறேன். பலரும் ஒத்துழைப்பு தருகிறார்கள். கூட்டு முயற்சி இல்லாமல் மரக்கன்றுகளை பராமரிக்க முடியாது. அண்ணன்கள் சுந்தர மூர்த்தி, சங்கரமூர்த்தி, ஆறுமுகதாசன் மற்றும் கணேஷ், மூர்த்தி, ஜெயராஜ், சந்திரசேகர், விஜயகுமார், ஆறுமுகப் பெருமாள் தளபதி உள்பட ஏராளமானோர் தன்னார்வலர்களாக செயல்பட்டு பக்கபலமாக இருக்கிறார்கள். நான் மாதம் ஒருமுறை ஊருக்கு சென்று பார்வையிட்டு வருகிறேன். தொடர்ந்து என்னால் முடிந்ததை செய்து கொண்டிருப்பேன்.

இயற்கையை என் உயிர்போன்று பாதுகாக்க ஆசைப்படுகிறேன். குளத்தையும், ஊரணியையும் தூர்வாரி முடித்தபோது சிலர், ‘தூர் வாரியதும் உடனே தண்ணீர் வந்து நிறைந்துவிட்டதா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். மழை காலத்துக்கு முன்பு சரியான நேரத்தில் தூர்வாரியதால் இப்போது இரண்டிலும் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. சுற்றுப்பகுதியிலும், விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. பறவைகளும் வர தொடங்கி இருக்கின்றன. ஆடு மாடுகள் நீர் அருந்துகின்றன. பறவைகளின் எச்சத்தில் விழும் விதைகள்தான் மரங்களாக மாறின. காடுகளெல்லாம் அப்படித்தான் உருவானது. மரங்களையும், பறவைகளையும் காக்க வேண்டியது நமது கடமை. அதற்கு நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

நிறைய பேர் தங்கள் ஊருக்கு நல்லது செய்வதற்கு விரும்புகிறார்கள். அதனை முன்னெடுத்து செல்வதில்தான் சிக்கலும், தயக்கமும் இருக்கிறது. தற்போது பக்கத்து ஊரில் இருப்பவர்களெல்லாம் தங்கள் ஊர் குளங்களையும் தூர்வாரி தருமாறு கேட்கிறார்கள். ஒற்றுமையுடனும், கூட்டு முயற்சியுடனும் செயல்பட்டால்தான் எந்தவொரு காரியத்தையும் செய்து முடிக்க முடியும். என்னைப்போல் நிறைய வாழ்வரசிகள் உருவாகி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு வழிகாட்டவும் விரும்புகிறேன்’’ என்கிறார்.இவருடைய சேவையை பாராட்டி ஏராள அமைப்புகள் விருதுகள் வழங்கி இருக்கின்றன.

வாழ்வரசியின் இயற்கையை நேசிக்கும் வாழ்க்கைக்கு கைகொடுப்போம்!

Next Story