சிறப்புக் கட்டுரைகள்

நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்- இது ஒயிலாட்டம் + "||" + Folk arts that say good things - Oyilattam

நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்- இது ஒயிலாட்டம்

நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்- இது ஒயிலாட்டம்
நாட்டுப்புற கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் ஆண்கள் குழுவாக இணைந்து ஆடும் ஆட்டமாகும்.
குழுவினர் அனைவரும் ஒரே நிறத்தில் தலைக்கட்டுடன், கைக்குட்டையையும் கட்டிக் கொண்டு ஆடுவர். வெள்ளை வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டி, காலில் சலங்கை கட்டிக் கொண்டு பெரும்பாலும் இரவு நேரத்திலே இந்த கலை நிகழ்த்தப்படுகிறது.

ஒயிலாட்டம் ஆடுவதை பற்றி..

“ஆளோடு ஆளு உரசாமல் உங்கள்

ஆளிலே ஒரு முழம் தள்ளி நின்று

காலோடு காலு உரசாமல் உங்கள்

கைப்பிடித் துணி தவறாமல்

மேலோடு மேலு உரசாமல் உங்கள்

வேருவைத் தண்ணி சிதறாமல்..’’ என்ற பாடல் விளக்குகிறது.

பொதுவாக இந்த ஆட்டம் கோவில் திருவிழாக் களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. ஊர்க்காவல் தெய்வங்களையும், முன்னோர்களையும் வழிபடும் மாசிக்களரி விழாவிலும், அம்மன் எடுப்பு, கொடை விழாக்களிலும் இது பிரசித்தம். கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியிலும், விநாயகர் கோவில் விழாக்களிலும் இந்த ஆட்டம் இடம் பெறுகிறது. மதங்களை கடந்தும் பொது நிகழ்வு களிலும் மக்கள் இந்த நடனத்தை வரவேற்று ரசிக்கிறார்கள்.

ஒயிலாட்டக்காரர்கள் பெரும்பாலும் ஐந்தைந்து பேராக இருவரிசையில் நின்று ஆடுவதுண்டு. சில இடங்களில் இருபது பேர் வரை வரிசையாக நின்று இக்கலையை நிகழ்த்துகின்றனர் . பெண்கள் இவ்வாட்டத்தில் பங்கு பெறுவதில்லை . எனினும் தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற பகுதிகளில் சில இடங்களில் மட்டும் பெண்களின் ஒயிலாட்டமும் இடம்பெறுகிறது.

இக்கலையில் வாய்ப்பகுதி தோலால் கட்டப்பட்ட குடம், சிங்கி, டோலக் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கருவிகளின் இசையோடு கலைஞர்கள் காலில் கட்டியிருக்கும் ‘கச்சம்’ என்னும் சலங்கையின் இசையும் சேர்ந்து ஒலித்து ஆட்டத்திற்கு கூடுதல் ரசனை சேர்க்கிறது. ஒயிலாட்டத்தில் கழுத்துக்குக் கீழும் , இடுப்புக்கு மேலும் உள்ள உடல்பகுதி வளைவதில்லை. அதனால் இந்த ஆட்டம் கம்பீரமாக காட்சிதருகிறது. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தனித்தனி பாடல் உள்ளது. பாடலின் பொருளுக்கு ஏற்ப ஆட்டம் ஒருங்கிணைந்து நடக்கும். ஒவ்வொரு ஆட்டத்தின் தொடக்கமும், முடிவும் வித்தியாசமாக ரசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

நேர்கோட்டு ஆட்டமாக இடம்பெறும் இந்த நடனத்தில் ஆசிரியரோ, தலைவரோ, வரிசைக்கு முன்னால் நின்று ஆடுவார். முதலில் கடவுளுக்கு வணக்கம் செலுத்தி கைகூப்பி நின்று ஒரு காலை மட்டும் தட்டித் தாளத்திற்கு ஏற்ப ஆட்டத்தை தொடங்குகின்றனர். சபை வணக்கத்தின்போது தரையைத் தொட்டு வணக்கம் செலுத்துகின்றனர். அதன்பின் ஆட்டம் தொடங்கி உச்ச நிலையை அடையும். ஆட்டத்தில் இடைவேளையும் உண்டு. கடைசிப் பாடலுக்கு முன்னால் வரும் இடைவெளியில் குரு நன்றி கூறுவார். பின்பு இறுதிப் பாடலில் தரையைத் தொட்டு வணங்கி ஆட்டத்தை நிறைவு செய்கின்றனர்.

ஒயிலாட்டம் பாடல், உரையாடல், ஆடல் என மூன்று நிலைகளைக் கொண்டது. ஆனால் இக்காலத்தில் உரையாடல் பகுதி வழக்கில் இல்லை. பெரும்பாலும் ராமாயணக் கதைகளே ராகத்தோடு பாடப்படுகிறது. மகாபாரதம், பவளக்கொடி கதை, காத்தவராயன் கதை, கோவலன் கதை, வள்ளி திருமணக் கதை, சிறுதொண்டர் கதை ஆகியவைகளும் பாடலாக இடம்பெறுகின்றன. கட்டபொம்மன் கதையும், சக்கம்மாள் கதையும் உணர்ச்சி வெளிப்பாட்டோடு பாடி ஆடப்படுகிறது . அண்ணாவி அல்லது முன்பாட்டாளர் எனப்படுபவர் முதல் சந்தத்தை எழுப்ப, குழுவினர் அதை மீண்டும் பாடி ஆடுகின்றனர்.

ஒயிலாட்ட கலைஞர்கள் ஒப்பனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பளிச்சென்று உடையலங்காரம் செய்துகொள்வார்கள். பச்சை, சிவப்பு, பஞ்சு மிட்டாய் நிறம் போன்ற வண்ணங்களில் சட்டையும், கால்சட்டையும் , கழுத்துப்பட்டையும் அணிந்துகொள்கிறார்கள். அனைவரும் சிவப்பு வண்ணக் கைக்குட்டையைக் கையில் பிடித்திருப்பார்கள். தலைவர் மட்டும் பச்சைநிறக் கைக்குட்டையை வைத்திருப்பார். கழுத்தில் பூமாலையும், கையில் காப்பு மாலையும் அணிந்துகொண்டும் ஆடுவதுண்டு. காலில் அணிந்து கொள்ளும் சலங்கை தோற்றத்திற்குப் பொலிவையும், ஆட்டத்திற்கு இனிய அதிர்வையும் கொடுக்கிறது. சலங்கை ஒயிலாட்டம் ஆடுபவர்கள் காலில் கட்டியிருக்கும் சலங்கை மணிகளின் எண்ணிக்கை 25 முதல் 100 வரை அமைந்திருக்கும். மணிகளின் எண்ணிக்கை மிகுந்திருப்பது சிறப்பானது. அதிக மணிகளை அணிந்து ஆடுபவர்கள் சிறப்பு மிகுந்தவர் களாகவும் கருதப்படுகின்றனர்.

ஒயிலாட்டம் ஆடும்போது தலை இடப்பக்கமும், வலப்பக்கமும் திரும்பும். மேலும் கீழுமாக குனிந்தும் நிமிரும். ஆட்டத்தின்போது கைக்குட்டையை வலது கையில் மட்டுமே பிடிக்கிறார்கள். கலைஞர்கள் கைக்குட்டையைச் சுழற்றுவது பார்க்க மிக அழகாக இருக்கும். அப்போது அவர்களது மணிக்கட்டு அசைவு ரசிக்கச்செய்யும்.

இடுப்பின் செயல்பாடு கால்களின் இயக்கங் களுக்கு ஏற்றவாறு அமையும். கால்களின் இயக்கங்களே ஒயிலாட்டத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. இடது காலைவிட வலது காலின் இயக்கமே அதிகம் இருக்கும்.

ஒயிலாட்டக் கூறுகள் மற்றும் இயக்கத் தொகுதி களின் செயற்பாடுகளை அறிந்திருக்கும் ஆட்டக் கலைஞர்கள், மக்கள் அவற்றைப் புரிந்து கொள்வதற்கும், இளைய கலைஞர்கள் கற்றுக் கொள்வதற்கும் ஏற்ப, எளிய கூறுகளாக விளக்கிச் சொல்கின்றனர். மூத்தக் கலைஞர்கள் மட்டுமே இதை முழுமையாக அறிந்துவைத்திருக்கிறார்கள்.

பழங்காலத்து அற்புத கலையான ஒயிலாட்டம் இப்போதும் மக்களால் விரும்பி ரசிக்கப்படுகிறது.

- கலை வ(ள)ரும்.

தகவல்: இளவழகன், நாட்டுப்புற கலைகள் துறை, பகுதி நேர விரிவுரையாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

தொடர்புடைய செய்திகள்

1. நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்
நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், சிந்தனைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது.
2. நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்: இது கழைக்கூத்து
தெருக்கூத்து போன்று தெருவில் நிகழ்த்தப்படும் கலைகளில் ஒன்றுதான் கழைக்கூத்து. தெருக்கூத்து தரையிலும், மேடைகளிலும் நிகழ்த்தப்படும்.
3. நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்
மக்களை வெகுவாக கவரும் நாட்டுப்புற நடனங்களில் ஒன்று, வைந்தானை ஆட்டம்.
4. நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்
நாடகத் தமிழில் நடனம், நாட்டியம், கூத்து போன்றவைகளும் அடங்கும். கூத்துக்கலை இசைக்கலையைப் போலவே பழைமை வாய்ந்ததாகும்.
5. நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்: இது கழியலாட்டம்
பழங்கால தமிழர்கள் தற்காப்புக் கலைகளில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தனர். அந்த கலைகளில் கத்தி, கம்பு, வாள், அரிவாள் போன்ற கருவிகளை பயன்படுத்தி பயிற்சி பெற்றனர்.