சிறப்புக் கட்டுரைகள்

உறுப்பு தானத்திற்காக உழைக்கும் பெண் + "||" + Woman working for organ donation

உறுப்பு தானத்திற்காக உழைக்கும் பெண்

உறுப்பு தானத்திற்காக உழைக்கும் பெண்
உடல் உறுப்பு தானம் குறித்து மாணவர்களிடம் விளக்கும் காட்சி. நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
டல் உறுப்பு தானம் குறித்து மாணவர்களிடம் விளக்கும் காட்சி.
நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. ஏறக்குறைய ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் 5 ஆயிரம் உடல் உறுப்புகளே தானமாக கிடைக்கின்றன. அவற்றுள் 200 இறந்தவர்களின் உடலாக இருக்கிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதே இந்த பற்றாக்குறைக்கு காரணம். உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை வலியுறுத்தும் முயற்சியில் தற்போது ஏராளமானவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அவர்களுடன் தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறார், 19 வயதாகும் இளம்பெண் ராதிகா ஜோஷி. இவருடைய நெருங்கிய உறவினர் சிறுநீரகசெயலிழப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து உடல் உறுப்பு தானம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பேர் மாற்று உடல் உறுப்புகள் கிடைக்காததால் இறந்து போகிறார்கள் என்ற உண்மை அவருக்கு தெரியவந்திருக்கிறது. 10 லட்சம் பேரில் 0.86 சதவீதம் பேரே தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அமைப்பு ஒன்றை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற் படுத்தி வருகிறார், ராதிகா ஜோஷி.

‘‘பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. இதுபற்றி விரிவாக விவாதிக்கப்படாததால் ஒருசிலரே தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்தியாவில் சில மருத்துவமனைகள்தான் உடல் உறுப்புகளை பிரித்தெடுத்து நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுதி வாய்ந்தவையாக இருக்கின்றன. அதற்கான வசதிகளும், உபகரணங்களும் இங்கு குறைவாகத்தான் இருக்கின்றன’’ என்கிறார், ராதிகா.

இவரது அமைப்பில் 6 பேர் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். தெரு நாடகங்கள், ஓவியங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வழியே பொதுமக்களிடம் உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள். சமையல் கலை நிபுணர்கள் அணியும் ‘ஏப்ரான்’ போன்ற துணியை அணிந்து அதில் தானம் செய்யக்கூடிய உடல் உறுப்புகளை வரைந்து விளக்கம் அளித்து வருகிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் உணவகங்கள் போன்ற இடங்களில் செயல்முறை விளக்கம் அளிக்கிறார்கள். தங்கள் அமைப்பில் இளைஞர்களை அதிக அளவில் இணைத்து அவர்கள் மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். சமூகவலைத்தளங்கள், இணையதளங்கள் மூலமாகவும் மக்களிடம் தங்கள் நோக்கங்களை விவரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ராதிகாவின் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு முதலில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பின்பு மகளின் உயிர்காக்கும் உன்னத நோக்கத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். ராதிகாவின் முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வந்து, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.