சிறப்புக் கட்டுரைகள்

ஒரு அதிகாரி இரண்டு சேவை + "||" + An officer serves two

ஒரு அதிகாரி இரண்டு சேவை

ஒரு அதிகாரி இரண்டு சேவை
டாக்டருக்கு படித்துவிட்டு தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் அதிகாரியானவர் தன்னுடைய ஆட்சிப்பணிக்கு இடையே அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
டாக்டருக்கு படித்துவிட்டு தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் அதிகாரியானவர் தன்னுடைய ஆட்சிப்பணிக்கு இடையே அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவரது பெயர் அகன்ஷா பாஸ்கர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர். இவரது அம்மாவும், அப்பாவும் புகழ்பெற்ற மருத்துவர்கள். பெற்றோரின் வழிகாட்டுதலில் மருத்துவம் படித்துவிட்டு, அரசு மருத்துவராக தனது பணியை தொடங்கினார்.

பணிபுரிந்த இடத்தின் சுற்றுப்புறங்களில் இருந்த கிராமங்கள் சுகாதார நிலையிலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் பின்தங்கி இருந்தது அவரிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி சேவை செய்யும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 76-வது இடத்தை பிடித்துவிட்டார். 24 வயதிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது மேற்குவங்காள மாநிலம் புருலியாவை அடுத்துள்ள ரகுநாத்பூரில் பணிபுரிந்து வருகிறார். பணிக்கு மத்தியில் மீண்டும் மருத்துவர் அவதாரம் எடுத்திருப்பதற்கான காரணத்தை அவரே விளக்குகிறார்.

‘‘நான் புருலியா அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்தேன். அங்கு மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கையும், உள்கட்டமைப்பு வசதிகளும் போதுமானதாக இல்லை. நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகளும் சிறப்பானதாக இல்லை. அப்போதுதான் நான் ஒரு மருத்துவராக என்னால் முடிந்த உதவிகளை செய்வதற்கு முடிவு செய்தேன். மக்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதி செய்வதைதான் என் முக்கிய கடமையாக கருதுகிறேன்’’ என்கிறார்.

அகன்ஷா ஆய்வு மேற்கொள்ள சென்ற அந்த மருத்துவமனையில் அன்றைய தினம் 40 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அப்போது நோய் தன்மையையும், அவர்களுடைய துயரங்களையும் கேட்டறிந்தவர் தேவையான மருந்துகளை வழங்குவதற்கு பரிந்துரை செய்திருக்கிறார். அத்துடன் கிராமப்புற மக்களிடம் பாதுகாப்பான மகப்பேறு, மாதவிடாய் சுகாதாரம், பொதுவான நோய் பாதிப்புகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். மருத்துவ முகாம்களையும் நடத்தி வருகிறார். அந்த பகுதியில் மலைவாழ் மக்கள்தான் அதிக அளவில் வசிக்கிறார்கள். அகன்ஷாவின் தொடர் நடவடிக்கை காரணமாக சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு அங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

‘‘டீன் ஏஜ் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விஷயங்களை விளக்கமாக எடுத்து கூறு கிறேன். நாப்கின்களை பயன்படுத்துவதன் அவசியத்தையும் புரியவைத்துள்ளேன். பழங்குடியின மக்களிடையே மருத்துவ சிகிச்சை பெறுவதில் ஒருவித தயக்கமும், இடைவெளியும் இருந்தது. இப்போது அவர்கள் சுகாதாரத்தை பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நிலையும் மேம்பட்டுள்ளது. வியாதிகளின் சதவீதமும் குறைந்துள்ளது’’ என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.