அங்கோர்வாட் கோவில்: கல்லிலே கலை வண்ணம் - 3 லட்சம் கற்களால் மறுபிறவி எடுத்த மகத்தான கோவில்


அங்கோர்வாட் கோவில்: கல்லிலே கலை வண்ணம் - 3 லட்சம் கற்களால் மறுபிறவி எடுத்த மகத்தான கோவில்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:17 AM GMT (Updated: 10 Nov 2019 10:17 AM GMT)

கம்போடியாவில், அங்கோர் வாட் கோவில் கட்டப்படுவதற்கு முன்பு, உலகிலேயே மிகப்பெரிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமையைப் பெற்று இருந்தது ‘பாபூன்’ என்ற கோவில்.

7-ம் ஜெயவர்மன் கட்டிய பெயோன் கோவிலில் இருந்து வட மேற்கே 200 மீட்டர் தூரத்தில் இந்தக்கோவில் அமைந்து இருக்கிறது என்றாலும், இது பெயோன் கோவில் கட்டப்படுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன் கட்டியது ஆகும்.

பாபூன் கோவில், முதலாம் சூர்யவர்மன் காலத்தில் கட்டத்தொடங்கி, 2-ம் உதயாதித்தவர்மன் காலமான கி.பி. 1060-ல் கட்டி முடிக்கப்பட்டது.

கம்போடியாவை ஆட்சி செய்த சில மன்னர்களின் மத மாற்றத்தால், அந்த மாற்றத்தைக் கோவில்களும் சந்திக்க வேண்டியது ஆகிவிட்டது.

அதனால் தான் புத்தர் கோவிலாகக் கட்டப்பட்ட பெயோன், அடுத்து வந்த இந்துமத மன்னர் ஆட்சியில் இந்துக்கோவிலாக உருமாற்றம் செய்யப்பட்டது.

இதற்கு நேர் மாறான விளைவை பாபூன் கோவில் சந்தித்தது.

பாபூன் கோவில் சிவனுக்காகக் கட்டப்பட்ட இந்துமத ஆலயம். ஆனால் பிற்பாடு, இந்த ஆலயம், புத்தமதக் கோவிலாக மாற்றப்பட்டு விட்டது.

1,394 அடி நீளமும், 410 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட செவ்வக வடிவ பரப்பளவில் இந்தக்கோவில் அமைந்து இருக்கிறது.

கோவிலின் நீளம் 450 அடி. அகலம் 320 அடி.

5 அடுக்குகளாக பிரமிடு வடிவத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் உயரம், 160 அடி.

கோவிலின் நுழைவு வாயிலுக்குச் செல்வதற்காக 650 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நடைமேடை, கோவிலுக்குத் தனி அழகைக் கொடுக்கிறது.

பாபூன் கோவிலின் மையக் கோபுரம் வெண்கலத் தகடால் போர்த்தப்பட்டு அழகுடன் விளங்கியது.

இந்தக்கோவிலை நேரில் பார்த்து வியந்த சீனத் தூதர் சவ் தா குவான் என்பவர், “அங்கோர் தாம் தலைநகரில் உள்ள பெயோன் கோவிலின் தங்கக்கோபுரத்தையும் விட, பாபூன் கோவிலின் வெண்கலக் கோபுரம் மிக உயரமாகக் காட்சி அளித்தது” என்று எழுதி வைத்து இருக்கிறார்.

வியட்நாமின் சம்பா தேசத்துப் படையெடுப்பால் அங்கோர் தாம் தலைநகரம் சீர்குலைந்து, அனாதையாக விடப்பட்ட காலத்தில், அங்கு இருந்த மற்ற கோவில்களைப் போல பாபூன் கோவிலும் அழிவைச் சந்திக்கத் தொடங்கி இருந்தது.

18-வது நூற்றாண்டில் அங்கோர் தாம் மீட்கப்பட்ட போது, பாபூன் கோவில் மிக அதிக அளவில் சேதம் அடைந்து காணப்பட்டது.

கோவில் கட்டிடம் மீது ஏராளமான மரங்கள் வளர்ந்து இருந்ததோடு, கோவிலை பெரிய மண்மேடு மூடி இருந்ததால், அந்த மண்மேட்டுக்குள் ஒரு கலைப்பொக்கிஷம் மறைந்து கிடக்கிறது என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது.

அங்கோர் தாம் பகுதிகளைச் சுத்தம் செய்த போது தான், அங்கே மண்மேட்டுக்குள் மிகப்பெரிய கோவில் கட்டிடம் இருப்பது புதையல் போலக் கண்டறியப்பட்டது.

1908-ம் ஆண்டு சீரமைப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அங்கு இருந்த மண் மேட்டையும், கோவில் கட்டிடம் மீது வளர்ந்து இருந்த மரங்களையும் அகற்றிப் பார்த்த போது, அந்தக்கோவில் கட்டிடம் ஒரு பக்கம் சரிந்த நிலையில் கிடந்தது.

இறுக்கம் அற்ற மணல் பகுதியான இடத்தில் கோவில் கட்டப்பட்டு இருந்ததால், அதன் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்டது என்பதும், கோவில் எந்த நேரமும் இடிந்து விழலாம் என்றும் தெரிய வந்தது.

இதனால், கோவிலை எவ்வாறு சீரமைப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கு இடையே, பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, கோவிலின் ஒரு பகுதி 1920-ம் ஆண்டிலும், மேலும் ஒரு பகுதி 1953-ம் ஆண்டிலும் இடிந்து விழுந்தது.

இதன் காரணமாக 1960-ம் ஆண்டு வரை அங்கே எந்த விதமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் சீரமைப்புப் பணிகளைச் செய்யும் போது, கோவில் முழுவதும் இடிந்து விழுந்து விடும் ஆபத்து இருக்கிறது என்பதால், பாபூன் கோவிலை அப்படியே இயற்கையின் அழிவுக்கு விட்டுவிடலாம் என்று யோசனை கூறப்பட்டது.

ஆனாலும், 1960-ம் ஆண்டு, ஜெர்மனி, ஜப்பான் உள்பட சில நாடுகளின் நிபுணர்கள் கூடிப்பேசி, கோவிலில் உள்ள அனைத்துக் கற்களையும் ஒவ்வொன்றாக அப்படியே பெயர்த்து எடுத்து விடுவது என்றும், அந்தக் கற்கள் மீது அவற்றுக்கு உரிய குறியீடு களைப் போட்டுத் தனியாக வைத்து இருந்து, கோவிலின் அஸ்திவாரத்தைச் சரி செய்த பின்பு, அந்தக் கற்களை எடுத்து அவற்றுக்கு உரிய இடத்தில் வைத்து, கோவிலைப் பழமை மாறாமல் கட்டிவிடலாம் என்றும் முடிவு செய்தார்கள்.

இந்தப் பிரமிப்பான பணியில், நிபுணர்கள் தவிர 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள், கோவில் சுவர்களில் இருந்த கற்கள் அனைத்தையும் அங்கு இருந்து அகற்றினார்கள். அந்தக்கற்கள் மீது குறியீடு போடப்பட்டு, அனைத்துக் கற்களும் அருகே இருந்த 10 ஏக்கர் நிலப்பரப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

கோவிலின் கட்டுமானம் அனைத்தும் பிரிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 3 லட்சம் கற்கள் சேகரிக்கப்பட்டுத் தனியாக வைக்கப்பட்டன.

அதன் பிறகு கோவிலின் அஸ்திவாரத்தைச் சரி செய்யும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் கம்போடியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் மற்றும் கேமர் ரூஜ் படைகளின் அட்டகாசம் காரணமாக 1972-ம் ஆண்டு சீரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

கேமர் ரூஜ் படைகள் அழிக்கப்பட்டு, கம்போடியாவில் அமைதி திரும்பிய நிலையில், 1996-ம் ஆண்டு அங்கே மீண்டும் சீரமைப்புப் பணிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அப்போது சீரமைப்பு குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது.

பாபூன் கோவிலில் இருந்து பெயர்த்து எடுத்து வைக்கப்பட்ட 3 லட்சம் கற்களிலும் இருந்த குறியீடுகளை கேமர் ரூஜ் படையினர் நாசம் செய்து விட்டனர் என்பது தெரிய வந்தது.

மேலும், கோவிலின் கட்டிட வடிவமைப்புத் தொடர்பாக அலுவலகங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த வரை படங்களையும் கேமர் ரூஜ் படையினர் அழித்து விட்டனர் என்பதும் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இக்கட்டான அந்த சமயத்தில், 1972-ம் ஆண்டுக்கு முன்பு பாபூன் கோவிலின் பல விதத் தோற்றங்களையும் பதிவு செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்தன.

அந்த புகைப்படங்களை அடிப்படையாக வைத்து கோவிலை மீண்டும் கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

3 லட்சம் கற்களில், ஏதாவது ஒன்று இடம் மாற்றி வைக்கப்பட்டு விட்டாலும், கோவிலின் வடிவமைப்பே மாறிவிடும் என்பதால் மிகக் கவனமாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

‘உலகிலேயே மிகப்பெரிய புதிரை விடுவிக்கும் சவாலான பணி போல இது அமைந்து இருந்ததாக’ அதில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே 15-வது நூற்றாண்டில், கோவிலின் முன் பகுதி கோபுரம் இடிந்து விழுந்த போது, அங்கு சிதறிக்கிடந்த கற்களை சேகரித்து, கோவிலின் மேற்குப் பகுதியில் 220 அடி நீளமும், 30 அடி உயரமும் கொண்ட பிரமாண்ட புத்தர் சிலை சயன கோலத்தில் அமைக்கப்பட்டது. புத்தர் சிலை மீது ஏறிச்செல்வதற்காக சிலையின் நடுப்பகுதியில் படிக்கட்டுகளும் கட்டப்பட்டன.

ஆனாலும் சிலையின் கட்டுமானப்பணி நிறைவு பெறாமல் நின்று விட்டது.

புத்தர் சிலை கட்டுவதற்காக கோவிலின் ஏராளமான கற்கள் எடுத்துச் செல்லப்பட்டு விட்டதால், கோவிலின் உண்மையான 160 அடி உயரத்துக்குப் பதிலாக, 120 அடி உயரம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது.

16 ஆண்டுகளாக இடைவிடாமல் நடந்த பணிகள் காரணமாக பாபூன் கோவில், 2011-ம் ஆண்டு மறுபிறவி எடுத்தது.

2011-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற விழாவில், கம்போடியா மன்னரும், பிரான்ஸ் நாட்டு பிரதமரும் கலந்து கொண்டு பாபூன் கோவிலைப் பொதுமக்கள் பார்வைக்கு முறைப்படி திறந்து வைத்தனர்.

இந்துக்கோவிலாகக் கட்டப்பட்டு பின்னர் புத்த கோவிலாக பாபூன் மாற்றப்பட்ட போதிலும் அங்கே உள்ள அழகிய சிற்பங்கள் ஏதும் சேதப்படுத்தப்படவில்லை.

கோவிலின் மூன்றாவது அடுக்கில் தான் மிகச் சிறந்த சிற்பங்கள் இடம் பெற்று இருக்கின்றன.

இந்தக்கோவிலில் உள்ள புடைப்புச் சிற்பங்கள் மற்ற கோவில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அமைப்பில் காணப்படுகின்றன.

அனைத்துக் கோவில்களிலும் புடைப்புச் சிற்பங்கள், கோவில் சுவரில் மிக நீளமான அளவில் காணப்படும். இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக இருக்கும். அந்தச் சிற்பங்களை வரிசையாகப் பார்த்துச் செல்வது சற்று சிரமமாக இருக்கும்.

ஆனால், பாபூன் கோவில் புடைப்புச் சிற்பங்கள் ‘காமிக்ஸ்’ புத்தகங்களில் இருப்பது போல தனித்தனிக் கட்டங்களில் செதுக்கப்பட்டு இருக்கின்றன.

மகாபாரதத்தில் வரும் திரவுபதியின் துகிலை உரியும் காட்சி, சுவரின் அடிப்பகுதியில் உள்ள கட்டத்தில் செதுக்கப்பட்டு இருக்கிறது.

அதற்கு மேல் உள்ள கட்டத்தில் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே போர் நடைபெறும் காட்சியும்,

அதற்கும் மேலே உள்ள கட்டத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்து இருப்பதும் செதுக்கப்பட்டு இருக்கிறது.

இதே போல ஒவ்வொரு காட்சியும், ‘காமிக்ஸ்’ புத்தகத்தில் படிப்பது போன்ற வகையில் எளிய முறையில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு அமைக்கப்பட்ட சிற்பங்கள் ‘பாபூன் ஸ்டைல்’ என்ற பெயரைப் பெற்றுவிட்டன.

பாபூன் கோவில் சிவனுக்காகக் கட்டப்பட்டது என்ற போதிலும், விஷ்ணுவின் அவதாரத்தை அடிப்படையாகக் கொண்ட மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றின் சிற்பங்களும் அங்கே அமைக்கப்பட்டு இருப்பது வியப்பாக இருக்கிறது.

பாகவத புராணத்தில் கூறப்பட்ட கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரிக்கும் காட்சிகளும், வாமன அவதாரக் காட்சிகளும் அங்கே சிற்பங்களாக இருக்கின்றன.

கம்போடிய மக்களின் அன்றாட வாழ்க்கையை விவரிக்கும் காட்சிகள், ஒருவர் ஊது குழலில் ஊசியை வைத்து ஊதி, பறவையை வேட்டையாடும் காட்சி, முனிவர் ஒருவரை ஒரு புலி துரத்தும் போது அந்த முனிவர் பயத்துடன் மரத்தில் ஏறி இருக்கும் காட்சி போன்ற ஏராளமான சிற்பங்களை பாபூன் கோவிலில் பார்க்கலாம்.

கம்போடியா முழுவதும் ஆயிரக்கணக்கான கோவில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன என்றாலும், அவை எந்த மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டவை என்ற குறிப்புகள் மட்டுமே இருக்கின்றன.

வியத்தகு கோவில்களைக் கட்டிய தலைமைச் சிற்பி யார் என்பது தெரியாமலே இருந்த நிலையில், ஒரே ஒரு கோவிலில் மட்டும் அந்தக் கோவிலைக் கட்டிய தலைமைச் சிற்பியின் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

வெளிநாட்டுத் தூதர்களை வரவேற்க விசேஷ மாளிகைகள்
பாபூன் கோவிலுக்குச் சற்று தூரத்தில், வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றுமாக இரண்டு பெரிய மாளிகைகள் கட்டப்பட்டு இருக்கின்றன.

இவை வழிபாட்டுக்குத் தொடர்பு இல்லாதவை என்பது அவற்றின் கட்டுமானத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

இந்த மாளிகைகள் ‘கிளீங்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன.

‘கிளீங்ஸ்’ என்றால், பாதுகாப்பு அறை, அல்லது பொக்கிஷ அறை என்று பொருள்.

ஆனால், இந்தக் கட்டிடங்களின் கதவு அருகே, ‘மன்னருக்கு கட்டுப்பட்டு நடப்போம்’ என்ற உறுதிமொழி வாசகங்கள் கல்வெட்டில் எழுதி வைக்கப்பட்டு இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் தூதர்களையும், உயர் அதிகாரிகளையும் மற்றும் மன்னரின் விருந்தினர்களையும் தங்க வைப்பதற்கான இடம் என்றும், அந்த மாளிகையில் தான் வெளிநாட்டுத் தூதர்களை மன்னர் சந்தித்துப் பேசுவது உண்டு என்றும் தெரிகிறது.

இந்த மாளிகைகள் 4-ம் ஜெயவர்மன் (கி.பி.968-கி.பி.1001) காலத்தில் கட்டப்பட்டவை என்று கூறப்பட்டாலும், கி.பி.1002 முதல் கி.பி.1006 வரை 4 ஆண்டுகளே பதவியில் இருந்த மன்னர் ஜெயவீரவர்மன் கட்டியதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

வேறு எந்தக் கோவில் வளாகத்திலும் இல்லாத வகையில் இந்த மாளிகைகள் கட்டப்பட்டு இருப்பதால், தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, தூதர்களும் பெரு வணிகர்களும் அங்கே சென்று மன்னர்களைச் சந்தித்துப் பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தக் கட்டிடங்களையும் அழகிய சிற்பங்கள் அலங்கரிக்கத் தவறவில்லை.

அந்தக் கோவில் பற்றியும், மேலும் சில அதிசயக் கோவில்கள் பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்.

 - அமுதன்

(ஆச்சரியம் தொடரும்)

Next Story