இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும் - சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு


இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும் - சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு
x

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதி நிலை முடிவுகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் தீர்மானிக்கும் என சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்து இருக்கின்றனர்.

நிகர ஏற்றம்
சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 158.58 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,323.61 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17.55 புள்ளிகள் முன்னேறி 11,908.15 புள்ளிகளாக இருந்தது.

குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை என்பதால் நடப்பு வாரத்தில் 4 தினங்கள் மட்டும் பங்கு வியாபாரம் நடைபெறுகிறது. இந்த நான்கு தினங்களில் பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். தொழில்துறை உற்பத்தி, அக்டோபர் மாத சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்க புள்ளிவிவரங்கள், நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மற்றும் சர்வதேச நிகழ்வுகள் அதை முடிவு செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்துறை உற்பத்தி
இன்று பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு செப்டம்பர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம் வெளிவரும் என தெரிகிறது. அது பங்குச்சந்தை வட்டாரங்களில் கவனத்தை ஈர்க்கும் காரணிகளாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்க நிலவரம் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளிவரலாம் என அவர்கள் கூறினர். 14-ந் தேதி (வியாழக்கிழமை) மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளிவருகிறது. பங்குச்சந்தை வட்டாரங்களில் கவனத்தை ஈர்க்கும் காரணிகளாக இவை இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில்லரை விலை பணவீக்கம்
கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3.99 சதவீதமாக அதிகரித்து இருந்தது. அந்த மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.33 சதவீதமாக குறைந்து இருந்தது. ஆகஸ்டு மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி, 26 ம ாதங்களில் இல்லாத பின்னடைவாக 1.1 சதவீதம் குறைந்து இருந்தது.

செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் எச்.டீ.எப்.சி., டெக் மகிந்திரா, டைட்டான், சன் பார்மா, பஞ்சாப் நேஷனல் வங்கி, தாபர், டாட்டா ஸ்டீல், சிப்லா, கனரா வங்கி, எச்.பி.சி.எல்., மகிந்திரா அண்டு மகிந்திரா, எய்ஷர் மோட்டார்ஸ், அசோக் லேலண்டு, என்.டி.பி.சி. உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமது நிதி நிலை முடிவுகளை வெளியிட்டன.

நடப்பு வாரத்தில் கோல் இந்தியா, ஹிண்டால்கோ, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், மகாநகர் காஸ், சிம்பொனி, பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், சுமி சிஸ்டம்ஸ், கெடிலா ஹெல்த்கேர், பாட்டா இந்தியா, ஐ.ஆர்.சி.டி.சி., தெர்மாக்ஸ், டிஷ் டி.வி., பேஜ் இண்டஸ்ட்ரீஸ், திலிப் பில்டுகான், வோடாபோன் ஐடியா உள்பட பல நிறுவனங்கள் தமது வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. குறுகிய கால அடிப்படையில் நிதி நிலை முடிவுகள் தாக்கம் ஏற்படுத்தும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டு தொடர்பாக பல புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நடப்பாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் தொடர்பாகவும் புள்ளிவிவரங்கள் வெளிவர உள்ளன. இதன் அடிப்படையிலும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.

கச்சா எண்ணெய்
நடப்பு வாரத்தில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற இதர சர்வதேச நிலவரங்களும் இந்த வார வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

Next Story